சிராத்தங்களோ, தர்ப்பணங்களோ செய்வது நமது கர்மாவாகும். அதில் எந்தவிதமான இரண்டாவது கருத்துக்கும் இடமே இல்லை. ஒருவருடைய பிறந்த நாள், நட்சத்தித்தின் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றது. காரியங்களோ குறிப்பிட்ட திதியின் அடிப்படையில் செய்யப்படுகின்றன. ஒரு மாதத்தில் இரு நட்சத்திரங்கள் இருந்தால், அதில் இரண்டாவது நட்சத்திரத்தை பிறந்த நாளாகக் கொண்டாடுகின்றோம். ஆனால் காரியங்கள் செய்யும்போது அதை தள்ளிப் போடக்கூடாதென்ற காரணத்தினால் முதலாவதாக வருகின்ற திதியே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பகவான் ராமர், தனது தகப்பனார் தசரத மகாராஜாவுக்கு பம்பா நதிக்கரையில் தர்ப்பணம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. பம்பா நதியும் கங்கைக்கு இணையான புனித நதியாக கருதப்படுவதால், பம்பா நதிக்கரையில் நிறைய பக்தர்கள் தனது முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள் செய்வதை நாம் கண்டுள்ளோம். அவர்கள் மாலையணிந்து கொண்டு செய்யவில்லையா என்ன? எனவே, மாலையணிந்து கொண்டு சிராத்தங்கள் செய்வது என்பதில் எந்தத் தவறும் இல்லை. சபரி யாத்திரை விரதத்தின்போது இடையில் வரும் சிராத்தத்துக்காக மாலை அணிதலை பக்தர்கள் தள்ளிப்போட்டிருந்தால், இனி அவ்வாறு செய்யத் தேவையில்லை. ஏனெனில், முறையாக கர்மாக்கள் செய்பவரைக் கண்டு பகவானும் மகிழ்ச்சியே அடைவார்.