பதிவு செய்த நாள்
10
அக்
2011
10:10
ஈரோடு: மாநிலம் முழுவதும் சாலையோரங்களில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்கள் சிதிலமடைந்து வருகிறது. இதனை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கீழ் 38 ஆயிரத்து 421 கோவில்கள் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 1,300க்கும் மேற்பட்ட கோவில்கள் அறநிலையத்துறையின் கீழ் உள்ளன. கோவில் மற்றும் கோவில் ஊழியர்களை காக்க, ஜெ., அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதான திட்டம், பழமை வாய்ந்த கோவில்களுக்கு கும்பாபிஷேகம் என, அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், கோவில் மேம்பாட்டுக்கான பல திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.மாநிலம் முழுவதும் சிதிலமடைந்துள்ள கோவில்களை சீரமைக்க, உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பக்தர்கள் கூறுகையில், ""ஈரோட்டில் இருந்து வெள்ளோடு செல்லும் வழியில், பல நூறாண்டுகள் பழமை வாய்ந்த, சாலையோர கோவில் உள்ளது. சாலை விபத்தை தடுத்திடவும், மனக்குழப்பத்தில் வாகனங்களில் செல்வோர் வணங்கி செல்லவும், களைப்பாறவும் சாலையோர கோவில்கள் அமைக்கப்படுகிறது. வெள்ளோடு சாலையில் அமைந்துள்ள சாலையோர கோவில், தற்போது கேட்பாரின்றி சிதிலமடைந்து, அழியும் நிலையில் உள்ளது. இதுபோல் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான கோவில்கள் சிதிலமடைந்துள்ளது. சிதிலமடைந்த கோவிலை, சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், பழுதடைந்த கோவிலை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடன் பழுதான, பழமை வாய்ந்த கோவிலை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.