பதிவு செய்த நாள்
10
அக்
2011
10:10
பழநி : கடந்த 800 ஆண்டுகளுக்கு முந்தைய சிவன் கோயிலின் சிதிலமடைந்த பகுதிகள், பழநியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வையாபுரி கண்மாயின் தெற்கு கரையில், தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆய்வு செய்தார். பாதிரி விநாயகர் கோயில் அருகே கல்வெட்டு, சிலைகள் கிடைத்தன. இதுகுறித்து அவர் கூறியது: கண்மாயின் ஐந்து கண் பாலத்தில் சிலைகள், கோயில் விட்டம், தூண், கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் உள்ளன. சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் கல்வெட்டு பொறிக்கப்பட்டது. இங்கு இருந்த சிவன் கோயில், "வைகாவூர் நாட்டு பழநி ஸ்ரீ கைலாசநாதர் கோயில் என, குறிப்பிடப்பட்டுள்ளது. சிவன் கைலாசநாதர் என்றும், உமை அம்மனின் பெயர் பாதி சிதைந்த நிலையில் நாச்சியார் என்றும் உள்ளது. கோயிலுக்கு மூன்று மா அளவு நிலம் தானமாகக் கொடுத்துள்ளனர். இந்நிலம் பழநி அருகே நாட்டார் மங்கலத்தில் இருந்திருக்கலாம். ஒரு கல்வெட்டில் கி.பி., 10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துகள் உள்ளன. சிதைந்துள்ளதால் முழு செய்தியை அறிய முடியவில்லை. இக்கோயில் கி.பி., 10 முதல் 13 ம் நூற்றாண்டு வரை சிறப்பு பெற்றிருக்கலாம். இதற்கான நந்தி சிலை, தற்போதைய பாதிரி விநாயகர் கோயிலில் புதைந்துள்ளது. சிவலிங்கம் தென்படவில்லை. கி.பி., 13- 14 ல், வெள்ளத்தில் வையாபுரிக் குளம் அழிந்த செய்தியை, பிற கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பின், நாயக்கர் ஆட்சியின் போது, கோயிலை புதுப்பிக்கும் பணி துவங்கி, பாதியில் நின்றது. மூன்று கருவறை அமைப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதே, இதற்கு சான்று. பாதிரி விநாயகர் கோயிலை புதுப்பித்த நாயக்க மன்னர், மெய்க்காப்பாளர், அரசி, பணிப்பெண், இளவரசர் சிலைகள் இங்கு உள்ளன, என்றார்.