பதிவு செய்த நாள்
13
டிச
2016
01:12
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மஹா தீபம் நேற்று மாலை ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது, சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் உள்ளது. மிகவும் பழமையான இக்கோவிலில், சுயம்பு வடிவில் சிவபெருமான் அருள் பாலிக்கிறார். இங்கு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநில பக்தர்களும் வந்து, சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ஆண்டுதோறும் மார்ச் மாதம், வெகுவிமர்சையாக தேர்த்திருவிழா நடப்பதுடன், கார்த்திகை மாதம் மஹா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். கடந்த, 2014 வரை, கோவில் விமான தளத்தில் உள்ள, 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட கொப்பரையில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. கடந்த ஆண்டு பொதுமக்கள் ஒத்துழைப்புடன், 1,000 லிட்டர் கொள்ளளவு கொப்பரை வாங்கப்பட்டது. மஹா தீபத்திற்கு பக்தர்கள் நெய், எண்ணெய் ஊற்ற வசதியாக, விமான தளத்திற்கு செல்ல, இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. இந்த ஆண்டுக்கான கார்த்திகை மஹா தீபம், நேற்று மாலை, 6:30 மணிக்கு ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று, மஹா தீபத்திற்கு, நெய், எண்ணெய் ஆகியவற்றை ஊற்றினர். மஹா தீபத்தின் போது, மழை பெய்ததை கூட பொருட்படுத்தாமல், பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாளுக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. அதை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா நடந்தது.
தர்மபுரி: தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி உடனுறை, மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில், கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை, 4:30 மணி முதல், 6:00 மணிக்குள் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை, 5:30 மணிக்கு, மல்லிகார்ஜூனேஸ்வரர், கல்யாண காமாட்சியுடன் கோவில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 6:00 மணிக்கு மஹா தீபம் ஏற்பட்டது. தொடர்ந்து, லட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதேபோல், தர்மபுரி கடைவீதியில் உள்ள அம்பிகா பரமேஸ்வரி உடன் அமர்ந்த மருதவாணேஸ்வரர் கோவில், கன்னியாங்கொட்டாய், பழைய கோவிந்தராஜா பட்டணம் மலை மீதுள்ள அண்ணாமலையார் கோவில், பாரதிபுரம், தீயணைப்பு நிலையம், தடங்கம், ஒட்டப்பட்டி சிவன் கோவில்கள், காரிமங்கலம் அபிதகுஜலாம்பாள் அருணேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில் மற்றும் முருகன் கோவில்களில் நேற்று கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. மஹா தீபம் ஏற்றப்பட்டது.