பசுபதேஸ்வரர் குடைவரை கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கிரிவலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2016 01:12
திருநெல்வேலி: நெல்லை அருகே பழமையான குடைவரை பசுபதேஸ்வரர் கோயிலில் நடந்த கிரிவலம் வழிபாட்டில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திருநெல்வேலி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே திருமலாபுரத்தில் முற்பாண்டியர் காலத்தைச் சேர்ந்த கி.பி 750 குடைவரை கோயில் அமைந்துள்ளது. இந்த மலைக்கு வருணாச்சி மலை என்று பெயர். வருணாச்சிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. குன்றின் வடக்கு திசையில் உள்ள குடைவரை முழுமையடைந்த நிலையில் சிற்பங்களுடன் அழகாக காட்சி தருகிறது. இக்கோயிலில் உள்ள இறைவனின் பெயரால் இக்குடவரை பசுபதேஸ்வரர் குடவரை என்று அழைக்கப்படுகிறார். இங்கு சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. நான்கு கரம் கொண்ட விஷ்ணுவின் இருபுறமும் இருக்கின்ற உருவங்கள் வணங்கிய நிலையில் உள்ளன. மேலிரு கரங்கள் சங்கு கரம் ஏந்தியிருக்க கீழ் இரு கரங்கள் தொடையை தொட்ட வண்ணம் காட்டப்பட்டுள்ளன. விஷ்ணுவின் அருகில் விநாயகர் சிலை அமர்ந்த நிலையில் உள்ளது. மறுபுறம் சிவபெருமான் காட்சி அளிக்கிறார்.
கருவறையில் ஒற்றை கற்பீடத்தில் பசுபதேஸ்வரர் லிங்க வடிவில் உள்ளார். மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இந்த வளாகம் உள்ளது. ஆண்டுதோறும் கார்த்திகை திருநாளில் மட்டும் இக்கோயிலில் சிறப்பான வழிபாடுகள் நடக்கிறது. நேற்று கார்த்திகை தீபத்திருவிழா மற்றும் சிவனடியார்களின் கிரிவலம் கோலகலமாக நடந்தது. காலையில் யாகசால பூஜை, மதியம் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சிவனடியார்கள் கலந்து கொண்ட கிரிவலம் நடந்தது. தொடர்ந்து 108 கார்த்திகை தீபம் ஏற்றுதலும், மதியம் சிறப்பு அன்னதானமும் நடந்தது.