பதிவு செய்த நாள்
17
டிச
2016
01:12
திருத்தணி: மார்கழி மாதத்தை ஒட்டி, சுந்தர விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நேற்று நடந்தன. திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான சுந்தரவிநாயகர் கோவில், ம.பொ.சி., சாலையில் உள்ளது. இக்கோவிலில், தமிழ் மாதந்தோறும், முதல் நாளில் சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், நேற்று மார்கழி மாதம் முதல் நாளை ஒட்டி, கோவில் வளாகத்தில், அதிகாலை, 5:00 மணிக்கு ஒரு யாகசாலை, இரண்டு கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் மற்றும் கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், மாலையில் மூலவர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மார்கழி மாதம் முழுவதும் தினமும் அதிகாலை, 5:00 மணி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் துரைராஜ் செய்து வருகிறார்.