கிருஷ்ணர்கோயில் தெப்பம்: சீரமைக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2016 11:12
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுடன் இணைந்த கிருஷ்ணர்கோயில் தெப்ப சுற்றுசுவர் சிதைந்து, செடிகொடி வளர்ந்து உள்ளன. சமூகவிரோதிகள் மதுபாட்டில்களை இங்கு வீசி செல்கின்றனர். இதனை சீரமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆண்டாள் கோயிலில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில், தாலுகா அலுவகம் அருகே கிருஷ்ணர்கோயில் உள்ளது. தினமும் பூஜைகள், காலை, மாலையில் நடைதிறப்பு நிகழ்ச்சிக்கு பல பக்தர்கள் வந்துசெல்கின்றனர். ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழாவின் 7ம் நாளில், இங்கு நடக்கும் சயனசேவை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். பழமையான இக்கோயில் தெப்பத்தின் சுற்றுச்சுவர் சிதைந்து உள்ளது. செடிகொடிகள் வளர்ந்து பக்தர்கள் சுற்றி வரமுடியாத நிலை ஏற்படுகிறது. இந்த பகுதியில் குடிமகன்கள் மது பாட்டில்களை வீசிவிட்டு செல்வது பக்தர்கள் மனதை புண்படுத்துகிறது. ஆண்டாள்கோயில் நிர்வாகம் கிருஷ்ணர்கோயில் தெப்பத்தை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.