பதிவு செய்த நாள்
19
டிச
2016
11:12
சென்னை: அமெரிக்க சகோதரிகளின் இசை கச்சேரி, பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. சென்னை, தி.நகரில் உள்ள தியாக பிரம்ம கான சபா மற்றும் ஓபுல் ரெட்டி, ஞானம்பா அறக்கட்டளை சார்பில், 37வது இசை, இயல், நாடக விழா, 12ம் தேதி முதல் நடந்து வருகிறது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் இசை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இசை கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை, தி.நகரை சேர்ந்த, மென்பொறியாளர் ரவீந்திரன் – சித்ரா தம்பதி, அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தின் ரிச்மன்ட் நகரில் வசித்து வருகின்றனர். இவர்களது மகள்களான மாயா மற்றும் மாளவி இருவரும் படித்து வருகின்றனர்.
இவர்களின் கர்நாடக இசை கச்சேரி, நேற்று மாலை, வாணி மஹாலில் நடந்தது. சென்னையில் நடக்கும் மார்கழி இசை விழாவில், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இவர்கள் பாடி வருவதால், நிறைய ரசிகர்கள் வந்திருந்தனர். தியாகராஜ சுவாமிகள் இயற்றிய, தெளிய லேரு ராமா – திருவொற்றியூர் தியாகையர் இயற்றிய, வர்ணம் – புரந்தரதாசர் எழுதிய, ஜெய ஜெய – பாபாநாசம் சிவன் இயற்றிய, நீ இரங்கா எனில் – லால்குடி ஜெயராமன் இயற்றிய, தில்லானா பாடல்களை, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மொழிகளில் பாடி அசத்தினர். சங்கீதா திலீப் வயிலின் வாசித்தார்; குருராகவேந்திரன் மிருதங்கம் வாசித்தார்.இந்த இசை கச்சேரி, ரசிகர்களை மெய்மறக்கச் செய்தது.
இசை சகோதரிகள் கூறியதாவது: அமெரிக்காவில், பல இடங்களில் நடந்த கச்சேரியில் பாடியிருக்கிறோம். சொந்த மண்ணில் பாடும் போது மனதிற்கு சுகமான அனுபவமாக இருக்கிறது. மனிதர்களுக்கு கல்வியும் கலையும், உயர்வையும் அமைதியையும் தரும். கல்வியிலும், இசையிலும் உயர்வதே எங்கள் ஆர்வம். இந்திய கலாச்சாரம், எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். இசை பயணத்தில் உறவினர்களையும், நண்பர்களையும் சந்திக்க நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. இசையால், எல்லா வகையிலும் எங்களுக்கு சந்தோஷம் கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.