திண்டிவனம் : தீவனூர் பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனூரில் உள்ள ஆதிநாராயணப் பெருமாள் என்கிற ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உற்சவம் நடந்தது. இதனையொட்டி உற்சவ மூர்த்தி ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஸ்ரீ கருடாழ்வார் வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு, ஸ்ரீலக்ஷ்மி நாராயணன் பஜனை குழுவினரின் பாடல்களுடன் சுவாமி வீதியுலா நடந்தது. முன்னதாக காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பூஜைகளை ராமானுஜ தாசர் செய்தார்.
சகஸ்கர தீப ஊஞ்சல்: விழுப்புரம் பெருமாள் கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பின்னர் நடந்த சகஸ்கரதீப ஊஞ்சல் உற்சவத்தில் வைகுண்ட வாசப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.