சபரிமலை: ’சபரிமலைக்கு ஆரன்முளாவில் இருந்து தொடங்கும் தங்க அங்கி பவனியை வருங்காலத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து தொடங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்,” என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கோபால கிருஷ்ணன் கூறினார். அவர் கூறியதாவது: மண்டலபூஜை நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜாவால் வழங்கப்பட்டது. இந்த அங்கி, ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்படுகிறது. இந்த பவனி 200 கோயில்களில் சென்று பக்தர்களுக்கு தரிசன வாய்ப்பு கிடைத்து வருகிறது.அங்கியை ஆயிரம் கோயில்களில் கொண்டு சென்று அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்ய தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த அங்கியை திருவிதாங்கூர் மன்னர் வழங்கியுள்ளதால், அந்த அரண்மனையின் கட்டுப்பாட்டில் உள்ள திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோயிலில் இருந்து புறப்படுவது சிறப்பாக இருக்கும். மன்னர் பிரதிநிதியிடம் இருந்து அங்கியை வாங்கி வருவது மேலும் சிறப்பை ஏற்படுத்தும். இது தொடர்பாக தேவசம்போர்டில் தீர்னமானம் எடுக்கப்படவில்லை என்றாலும் இது தீவிரமாக பரிசீலிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறுகையில்,”இது பற்றி தன்னிடம் கருத்து கேட்டால் தெரிவிப்பேன், இதன் பெயரில் ஒரு விவாதத்தை ஏற்படுத்த விரும்பவில்லை, என்றார்.