பதிவு செய்த நாள்
26
டிச
2016
02:12
சேலம்: சேலம் தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். சேலம், அரிசிபாளையம், குழந்தை இயேசு பேராலயத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை துவங்கியது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, இயேசு பிறப்பை குறிக்கும் வகையில், பங்குத்தந்தை கிரகோரிராஜன், இயேசுவின் சொரூபத்தை கையில் எடுத்து, மக்கள் இடையே காட்டி, அங்குள்ள குடிலில் வைத்து ஜெபித்தார். ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார், அழகாபுரம் மிக்கேல் ஆதிதூதர், சூரமங்கலம் திருஇருதய ஆண்டவர், செவ்வாய்ப்பேட்டை ஜெயராக்கினி உள்ளிட்ட ஆலயங்களில், நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது. கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ., ஆலயத்தில், ஆயர் மில்லர் ஜெயபால், அஸ்தம்பட்டி இம்மானுவேல் தேவாலயத்தில், ஆயர் அகிலன், ஜங்ஷன் திருத்தல ஆலயத்தில், ஆயர் கெவின் தலைமையில், அதிகாலை, 4:00 முதல், 6:00 மணி வரையும், காலை, 11:00 முதல், மாலை, 5:00 மணி வரையும், பிரார்த்தனை நடந்தது. அதேபோல், சேலம் மாவட்டத்தில் உள்ள, 55 தேவாலயங்களில் நடந்த பிரார்த்தனையில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
* வாழப்பாடி பத்தாம் பத்திநாதர் தேவலாயத்தில் குடில்கள் அமைக்கப்பட்டன. அங்கு, ஏராளமானோர் பங்கேற்று, வழிபாடு செய்தனர். ஆத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கிறிஸ்தவ தேவலாயம், ரயிலடி தெரு சி.எஸ்.ஐ., தேவாலயம் உள்ளிட்ட ஆலயங்களில், நேற்று முன்தினம் இரவு, சிறப்பு கூட்டுத்திருப்பலியை தொடர்ந்து, கேக் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள், சமூக நல்லிணக்கமாக, பிற சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறினர். செந்துறையில், பாதிரியார் லாரன்ஸ், உதவி பாதிரியார் ஜெயராஜ் தலைமையில், புனித சூசையப்பர் ஆலயத்தில் கூட்டுத்திருப்பலி நடந்தது.