பதிவு செய்த நாள்
27
டிச
2016
10:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, ஆதி அய்யப்பன் கோவிலில், 27 அடி உயர மணிகண்டன் சுவாமி சிலை புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, வரும் ஜன., 1ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வாணாபுரம் அருகே க. உண்ணாமுலைபாளையம் கிராமத்தில், கடந்த, 1990ல் பூமியில் கண்டெடுக்கப்பட்ட மணிகண்டன் சுவாமி சிலையை வைத்து கோவில் கட்டி, சபரிமலை அய்யப்பன் கோவிலில் உள்ளது போல் இங்கு பூஜை நடந்து வருகிறது. மேலும், கோவிலில் உள்ள குன்றின் மீது, 27 ராசி நட்சத்திரத்தின் அடிப்படையில், 27 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, பத்து லட்சம் ரூபாய் மதிப்பில், 27 அடி உயர மணிகண்டன் சிலை புதிதாக தப்போது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலில், வரும் ஜன., 1ல் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி அரிபுத்தரி சுவாமிகள் செய்து வருகிறார். இதற்காக, 27 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவில் வளாகத்தில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், இயேசு சிலுவையில் அறையப்பட்ட சிலை, அய்யப்பன் சிலை, மற்றும் மசூதி வடிவிலான சிலையும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து, தினமும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.