ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள். ஆனால், கோயில்களில் ஆமைவடிவ பலகைகளில் அமர்ந்து யாகங்கள், பூஜைகள் செய்வதுண்டு. கேரளாவிலுள்ள கோயில்களில் இதை சகஜமாகப் பார்க்கலாம். பெருமாளே கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து பாற்கடலைக் கடைந்தபோது, மத்தை தாங்கினார். கிருதயுகத்தில் வாழ்ந்த ஸ்வேதசக்கரவர்த்தி, மகாவிஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவமிருந்தான். அங்கு வந்த நாரதர், கூர்மாவதார மந்திரம் சொல்லி பெருமாளை வழிபடும் படி கூறினார். அதன்படி வழிபட்ட மன்னனுக்கு, சுவாமி கூர்ம அவதார கோலத்தில் காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னன் தான் பார்த்த ஆமை வடிவத்தை சிலையாக்கி கோயில் எழுப்பினான். இந்த தலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் கூர்மம் என்ற ஊரில் உள்ளது. மூலஸ்தானத்தில் பெருமாள் ஆமையாக இருக்கிறார். இந்த ஆமைக்கு மஞ்சள் காப்பிட்டு பூஜை செய்கின்றனர். ஆமையின் முன்புறம் நாமமும், பின்பகுதியில் சுதர்சன சக்கரமும் உள்ளது. இரு கொடி மரங்களுடன் அமைந்த தலம் இது. கோயில் அருகில் ஸ்வேத புஷ்கரிணி தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் வளரும் ஆமையை பக்தர்கள் வணங்கிச் செல்கின்றனர்.