Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஆறாம் அத்தியாயம்
பகவத்கீதை | தியான யோகம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 அக்
2011
12:10

கர்ம யோக ஞான யோகங்களில் சித்திபெற்றவனுக்குண்டாகும் ஆத்மானுபவம் இந்த அத்தியாயத்தில் கூறப்படுகிறது. இவ்வாத்மானுபவத்தில் ஈடுபட்டு ஆதியிலேயே திருப்தியடைந்தவன் வேறு விஷயங்களில் மனதைச் செலுத்த மாட்டான். அவனுக்குத் தோழன், பகைவன், பந்து, நல்லவன், கெட்டவன் என்று வேறுபாடின்றி எல்லோரிடமும் ஒரேவிதமான மனப்பான்மை ஏற்படும்.

அவன் ஜனங்களுடைய சேர்க்கையை வெறுத்துத் தனிமையிலே விருப்பமுற்றுத் திடமான ஆசனத்திலமர்ந்து தனது ஆத்ம சொரூபத்தை எண்ணி எண்ணி மகிழ்வான். இவ்வாத்மானுபவமே பேரானந்தமென்று எண்ணியிருப்பான். எல்லா ஆத்மாக்களும் தேக சம்பந்தத்தை நீக்கிப் பார்த்தால் ஒருவகைப்பட்டவை என்று எண்ணி, முடிவில் கடவுளும் அவ்வாத்மாக்களும் ஒருவகைப்பட்டவர்களென்று உணர்வான். இந்நிலை பெற்றவனே யோகிகளில் சிறந்தவன்.

யோகமும் ஸந்யாஸமும் ஒன்றே 1-9 -யோகத்துக்கு ஏற்ற சூழ்நிலை 10-11 -யோகம் பயிலும் முறை 12-15 -முன்னேற்றத்துக்கு நிபந்தனைகள் 16-20 -யோகத்தில் முன்னேற்றம் 21-28 -யோக ஸித்தி 29-32 -அடங்காத மனதை அடக்கவேண்டும் 33-36 -யோகப்பிரஷ்டனது கதி 37-45 -யோகம் ஒப்பற்றது 46-47.

ஸ்ரீபகவாநுவாச

1. அநாஸ்ரித​: கர்மபலம் கார்யம் கர்ம கரோதி ய​:
ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்நிர்ந சாக்ரிய​:

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், ய: கர்மபலம் அநாஸ்ரித​:-எவனொருவன் செய்கையின் பயனில் சார்பின்றி, கார்யம் கர்ம கரோதி-செய்யத்தக்கது செய்கிறானோ, ஸ ஸந்ந்யாஸீ யோகீ ச-அவன் சந்யாசியும் யோகியும் ஆவான், ச நிரக்நி ந-மேலும் அக்னி காரியங்களை மட்டும் துறப்பவன் ஆகமாட்டான், அக்ரிய​: ச ந-செயல்களை துறப்பவனும் ஆகமாட்டான்.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: செய்கையின் பயனில் சார்பின்றிச் செய்யத்தக்கது செய்வோன் துறவி; அவனே யோகி. தீ வளர்க்காதவனும் கிரியை செய்யாதவனும் அவன் ஆகார்.

உலக வழக்கத்தில் ஸந்யாஸி என்பதற்குத் தப்பான ஒரு பொருள் உண்டு. அதாவது அவன் ஒரு கடமையையும் ஏற்றுக் கொள்ளலாகாது. அக்னிஹோத்ரம் என்றால் யாகம் செய்வது என்று பொருள். ஸந்யாஸி யாகம் செய்யாது, ஒரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாது செயலற்று இருக்கவேண்டுமாம். அர்ஜுனன் யுத்தம் செய்யமாட்டேன் என்று இயம்பி பிக்ஷõன்னம் அருந்தி உயிர் வாழ்வது நலம் என்று கருதியதே இக்கொள்கைக்குச் சான்றாகும். பின்பு பகவானுடைய கோட்பாடு அதுவன்று. பகவானுடைய கோட்பாடே உண்மையான வேதாந்தமாகும். தேகம் எடுத்தவர் யாரும் கர்மத்தை விட்டுவிடலாகாது. அவரவர் கடமையை நன்கு செய்துகொண்டிருக்கவேண்டும். ஆனால் கர்மபலனை யார் பொருட்படுத்துவதில்லையோ, தனது நித்திய கர்மத்தை நிஷ்காமியமாக யார் செய்கிறானோ அவன் ஸந்யாஸி; அவனே யோகியும் ஆகிறான். கர்ம பலனில் ஆசை அறவே அகன்று விடுவதால் அவன் ஸந்யாஸி. பின்பு, கர்மம் ஓயாது அவன் மூலம் நடைபெறுவதால் அவன் யோகி. அப்படியானால் ஸந்யாஸத்துக்கும் யோகத்துக்கும் உள்ள தொடர்வு யாது? விடை வருகிறது :

2. யம் ஸந்ந்யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ
ந ஹ்யஸந்ந்யஸ்தஸங்கல்போ யோகீ பவதி கஸ்சந

பாண்டவ-பாண்டவா! யம் ஸந்ந்யாஸம் இதி ப்ராஹு-எதனை சந்நியாச மென்கிறார்களோ,
யோகம் தம் வித்தி-அதுவே யோகமென்று அறி, ஹி அஸந்ந்யஸ்த ஸங்கல்ப:-ஏனெனில் கோட்பாடுகளைத் துறக்காத, கஸ்சந யோகீ ந பவதி-எவனும் யோகியாக மாட்டான்.

பொருள் : பாண்டவா, எதனை சந்நியாச மென்கிறார்களோ, அதுவே யோகமென்றறி. தன் கோட்பாடுகளைத் துறக்காத எவனும் யோகியாக மாட்டான்.

கர்ம பலனைப்பற்றி மனதில் உண்டாகும் கற்பனா சக்திக்கே சங்கற்பம் என்று பெயர். இனி, கிடைக்கப்போம் பலனைப்பற்றி மனது இப்பொழுதே திட்டம் போடுகிறது. ஒரு போக்கில் ஏராளமாக மனோராஜ்யம் செய்துவிட்டுப் பின்பு அதை அடியோடு துடைத்துவிடுகிறது. திரும்பவும் இன்னொரு போக்கில் அது எண்ணுகிறது. ஒவ்வொரு திட்டத்திலும் கிடைக்கப்போம் பலனைப்பற்றிய எண்ணத்துக்கு ஒரு முடிவில்லை. இங்ஙனம் ஆசையின் வேகத்தால் அனந்தங்கோடி எண்ணங்கள் உதிப்பதே சங்கற்பம் எனப்படும். இதனால் மனம் சலனமடைகிறது. மனச் சலிப்பு (மனஅலைச்சல்) இருக்குமளவு ஒருவன் யோகியாக முடியாது. ஆக, ஸந்யாஸத்தால் சங்கற்பம் துறக்கப்படுகிறது. சங்கற்பத்தைத் துறப்பதால் யோகம் உறுதி பெறுகிறது. மனது உறுதிபெற்றவனுக்கே நன்கு கர்மம் செய்யவும், தியானம் செய்யவும் முடியும். இங்ஙனம் கர்மபல ஸந்யாஸமும் கர்மயோகமும் ஒன்றாகின்றன.

சங்கற்ப ஸந்யாஸத்தால் யோகம் உறுதிபெறும் விதம் அடுத்த ஸ்லோகத்தில் விளக்கப்படுகிறது.

3. ஆருரு÷க்ஷõர்முநேர்யோகம் கர்ம காரணமுச்யதே
யோகாரூடஸ்ய தஸ்யைவ ஸம​: காரணமுச்யதே

யோகம் ஆருரு÷க்ஷõ முநே-யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்கு, கர்ம காரணம் உச்யதே-தொழிலே கருவியாகக் கூறப்படுகிறது, தஸ்ய யோகாரூடஸ்ய-அந்நிலையில் ஏறியபின்
ஸம​: ஏவ காரணம் உச்யதே-சாந்தம் கருவியாகிறது.

பொருள் : யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்குத் தொழிலே கருவியாகக் கூறப்படுகிறது. அந்நிலையில் ஏறியபின் அவனுக்கு சாந்தம் கருவியாகிறது.

தியானம் செய்வதில் விருப்பம் கொண்டிருக்குமளவு ஒருவன் முனியாகிறான். ஆயினும் மனம் குவிந்து தியானம் அமைவதில்லை. அத்தகைய யோகி நிஷ்காமிய கர்மத்தை ஊக்கத்துடன் செய்யவேண்டும். காமிய கர்மத்தை ஊக்கத்துடனும் ஓயாதும் செய்பவனுக்கு நன்றாக உறக்கம் பிடிக்கிறது. நிஷ்காமிய கருமத்தை அதே ஊக்கத்துடனும் செய்பவனுக்குத் தியானம் கூடுகிறது. அதனால் மனம் தெளிவடைகிறது. தெளிந்த மனதில் தியான சித்தி தானாக அமைகிறது. சமம் என்பது செயலை ஒழுங்குபடுத்திய நடு நிலை. ஆத்மா செயலைக் கடந்திருப்பது போன்றதல்ல இது. பம்பரம் நடு நிலையில் நின்று வேகமாகச் சுழலும்போது அதனிடத்து ஒரு செயலும் வெளிக்குத் தென்படுவதில்லை. ஓய்ந்து நிற்பதுபோன்று அது காட்சி கொடுக்கிறது. ஒழுங்கான இயக்கம் என்பது அதுவே. அகர்மம் போன்று தென்படுகிற கர்மம் அது. தியானம் நன்கு கூடிவரும்பொழுது யோகியானவன் கர்மத்தை யெல்லாம் ஒழித்துவிட்டவனாகக் காட்சி கொடுக்கிறான். தியானத்தில் நிலைபெற்றிருத்தல் என்ற ஒப்பற்ற சூக்ஷ்ம கர்மம் ஆங்கு நிகழ்கிறது. கர்ம சொரூபமான மனதின் தெள்ளத் தெளிந்த கர்மம் அது. அகர்மம் என்றே அதைச் சொல்லலாம். விகல்பம் ஒன்றும் ஆங்கில்லாமையால் ஆத்ம சொரூபத்தை அது விளக்கவல்லது.

மனத்தெளிவு என்பதும் சித்த சுத்தி என்பதும் ஒன்றே. இதுவே ஒரு மனிதனுக்கு ஒப்பற்ற செல்வமாகிறது. இதினின்று ஒற்றுமை, சமத்துவம், உண்மை, ஒழுக்கம், உறுதி, அஹிம்சை, நேர்மை, கர்மங்களினின்று விலகுதல் ஆகியவைகள் முறையாக வந்தமைகின்றன. மனம், மொழி, மெய்களால் எல்லா உயிர்களுக்கும் நன்மையே செய்தல் ஒழுக்கம் எனப்படும்.

யோகாருடன் அல்லது யோகத்தை அடைந்தவனாக ஒரு மனிதன் எப்பொழுதும் கருதப்படுகிறான்? விடை வருகிறது :

4. யதா ஹி நேந்த்ரியார்தேஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே
ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ யோகாரூடஸ்ததோச்யதே

யதா இந்த்ரியார்தேஷு ந அநுஷஜ்ஜதே-எப்போது புலன்களுக்குரிய போகப் பொருட்களில் பற்றுக் கொள்வதில்லையோ, கர்மஸு ஹி ந-கர்மங்களிலும் பற்றுக் கொள்வதில்லையோ, ததா ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ-அப்போது எல்லா கோட்பாடுகளையும் துறந்தவனான அவன், யோகாரூட உச்யதே-யோகாரூடன் என்று கூறப் படுகிறான்.

பொருள் : ஒருவன் எல்லாக் கோட்பாடுகளையும் துறந்து விட்டுப் புலன்களிலேனும் செயல்களிலேனும் பற்றுதலின்றி யிருப்பானாயின், அப்போதவன் யோக நிலையில் ஏறியவன் என்று சொல்லப்படுகிறான்.

யோகத்தில் நிலைபெற்றவன் யோகாருடன் எனப்படுகிறான். தியானம் முதிர்ந்து சமாதியாகும்போது அவனுக்கு வெளியுலகோடு ஒருவிதத் தொடர்வும் இல்லை. சப்தம், ஸ்பர்சம் முதலிய இந்திரியார்த்தங்களில் அவனது மனது ஒட்டுகிறதில்லை. நித்திய நைமித்திக கர்மங்களெல்லாம் உறக்கத்தில் ஒடுங்குவதுபோன்று சமாதியில் நின்றுவிடுகின்றன. பிறகு சங்கற்பங்களெல்லாம் அற்றுப்போகுமிடத்து ஓய்ந்த கடல்போன்று, எண்ணம் என்ற அலையற்றிருக்கிறது மனது. இவ்வுலகத்தை அல்லது மறுவுலகத்தைப் பற்றிய விசாரம் சிறிதளவும் அதனிடத்தில்லை.

சங்கற்பத்தினின்றே ஆசையும் செயலும் வடிவெடுக்கின்றன. மனு 11-2.

ஆசையே, உனக்குப் பிறப்பிடம் எது என்பதை நான் அறிகிறேன். சங்கற்பத்திலிருந்து நீ உதித்துள்ளாய். உன்னை நான் சங்கற்பிக்காமல் விட்டு விடுகிறேன். நீ நிர்மூலமாய்ப் போய்விடுவாய். சாந்திபர்வம் 177-25.

பிராணன் போனால் இந்திரியங்கள் ஒடுங்குவது போன்று சங்கற்பம் போனால் ஆசையும் கர்மமும் அடிபட்டுப் போகின்றன. இங்ஙனம் ஒருவன் யோகாரூடன் ஆகும்போது சம்சார துக்கங்களினின்று விடுபட்டு ஆத்மாவைக் கொண்டு ஆத்மாவை உன்னதத்துக்குக் கொண்டுவருகிறான். ஆசைகளாகிய பெருங்காற்றினால் சித்தமாகிய ஆகாசம் அலைக்கழிக்கப்படும் வரையில், ஈசுவரனாகிய ஒளியை அங்குக் காண இயலாது. ஈசுவரனுடன் ஐக்கியமாகி சாந்தமாக இருக்கும் மனதில்தான் அந்த திவ்விய தர்சனம் தோன்றும். ஆகையால் சாதகன் என்ன செய்யவேண்டும்?

5. உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத்
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந​:

ஆத்மாநம் ஆத்மாநா உத்தரேத்-தன்னைத் தான் உயர்த்திக் கொள்க, ஆத்மாநம் ந அவஸாதயேத்-தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா, ஹி ஆத்மா ஏவ ஆத்மந: பந்து-தனக்குத்தானே நண்பன், ஆத்மா ஏவ ஆத்மந​: ரிபு:-தனக்குத்தானே பகைவன்.

பொருள் : தன்னைத் தான் உயர்த்திக் கொள்க; தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா; தனக்குத்தானே நண்பன்; தனக்குத்தானே பகைவன்.

பிறப்பு இறப்பு என்னும் பெருங்கடலில் மூழ்கிப் போகாது தன்னைத்தானே மேல்நிலைக்குக் கொண்டுவரவேண்டும். மனிதன் அடைந்துள்ள சிறுமைக்கும் பெருமைக்கும் தானே பொறுப்பாளன். வேறு யாரும் அதற்குப் பொறுப்பாளர் அல்லர். பகைவன் தன்னைக் கெடுத்துவிட்டான் என்று ஒருவன் குறை கூறுவது உண்டு. அப்படிக் கெடுப்பது ஒரு நாளும் பகைவன் அல்லன். பகைவனாகத் தோன்றுபவனையே தனது சாதனத்துக்குற்ற துணையாக யோகி ஒருவன் எடுத்துக்கொள்ள முடியும். அறியாமையினால் அல்லது சரியான வாழ்க்கை வாழாமையினால் மனிதன் தன்னையே கெடுத்துக்கொள்கிறான். அப்படித் தன்னையே கெடுப்பதால் தனக்குத்தானே பகைவன் ஆகிறான். நல்வாழ்க்கை வாழ்ந்து தன்னை எடுப்பவன் தனக்கே தோழனாகிறான். தனக்குத் தன்னிலும் மிக்கதொரு நண்பனோ பகைவனோ எவ்வுலகிலும் இல்லை என்பதை அறிபவன் வாழ்க்கையைப்பற்றிய ஒரு பேருண்மையை அறிபவன் ஆகிறான். பகையை யாரும் வேண்டுவதில்லை; தோழமையையே வேண்டுகின்றனர். அப்படியாயின் தனக்குத் தானே பகைவனாகாது தோழனாவது எங்ஙனம்? விடை வருகிறது :

6. பந்துராத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித​:
அநாத்மநஸ்து ஸத்ருத்வே வர்தேதாத்மைவ ஸத்ருவத்

ஏன ஆத்மநா ஆத்மா ஜித​:-எந்த ஜீவாத்மாவினால் புலன்களுடன் கூடிய உடல் அடக்கி ஆளப் பட்டிருக்கிறதோ, தஸ்ய ஆத்மநா-அந்த ஜீவாத்மாவிற்கு, ஆத்மா ஏவ பந்து-தனக்குத் தானே நண்பன், து அநாத்மந:-ஆனால் தன்னைத்தான் வெல்லாதவன், ஆத்மா ஏவ ஸத்ருவத்-தனக்குத் தான் பகைவனைப் போல, ஸத்ருத்வே வர்தேத-பகைமையாக செயல்படுவான்.

பொருள் : தன்னைத்தான் வென்றவனே தனக்குத்தான் நண்பன்; தன்னைத்தான் வெல்லாதவன் தனக்குத் தான் பகைவன் போற் கேடு சூழ்கிறான்.

யோகத்தில் நிலைபெறாத மனிதனிடத்து இரண்டு இயல்புகள் உண்டு. ஒன்று காட்டில் அடங்காத சிற்றியல்பு. மன்றொன்று தெய்வப் பெற்றியுள்ள பேரியல்பு. இவைகளுள் சிற்றியல்பு தலையெடுக்கும்போது பேரியல்பு தோல்வியடைகிறது. பேரியல்பு வலுக்குமிடத்துச் சிற்றியல்பு நசிக்கிறது. தேகம், இந்திரியங்கள், மனம், புத்தி ஆகியவைகள் கட்டில் அடங்கியிருக்கும் பொழுது பேரியல்பு தலையெடுக்கிறது. அந்நிலையில் மனிதன் தன்னைத் தான் வென்றவனாகிறான். கீழான இயல்புக்கு அவன் இடங்கொடுக்குங்கால் தன்னையே அவன் அடியோடு கெடுத்துப் பாழ்படுத்துகிறான். புறத்தில் உள்ள பகைவன் ஏதோ சில வேளைகளில்தான் தாக்குகிறான். அப்படியிருந்தும் அவனால் துன்பமடையாத மனநிலையை யோகி யொருவன் பெறக்கூடும். அகத்திலுள்ள பகையோ அல்லும் பகலும் அவனை அலக்கழிக்கிறது. தோழன் போன்றிருந்து பெருந்தீங்கை அது விளைவிக்கிறது. ஆகவே, தான் அடையும் துக்கத்துக்கெல்லாம் தானே முதற் காரணம். யோகி ஒருவனே தனக்குத்தான் உறவினன் ஆகின்றான். மற்றெல்லாரும் ஆசை என்ற ஹிதசத்துருவின் வசப்பட்டுத் தங்களுக்குத் தாங்களே பகைவர் ஆகின்றனர்.

பந்தம் மனத்தை யொட்டியது; முக்தியும் அவ்வாறே. நான் ஒரு முக்தாத்மா; நான் ஈசுவரனுடைய புத்திரன்; என்னை யாரால் பந்தப்படுத்த முடியும்? என்று நீ சொல்வாயானால் நீ முக்தனாக ஆவது நிச்சயம். பாம்பினால் கடிக்கப்பட்டவன் விஷமில்லை, விஷமில்லை என்று முழு நம்பிக்கையுடனும் மனோதிடத்துடனும் சொல்லக் கூடுமானால் அவனுக்கு விஷ உபத்திரவமே இராது.

தனக்குத்தானே நண்பன் ஆனவன் அடையும் நலங்களில் சிறந்தது யாது? விடை வருகிறது :

7. ஜிதாத்மந​: ப்ரஸாந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித​:
ஸீதோஷ்ணஸுகது​:கேஷு ததா மாநாபமாநயோ​:

ஸீதோஷ்ண ஸுகது​:கேஷு-சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும், மாந அபமாநயோ​:-மானாபிமானங்களிலும், ப்ரஸாந்தஸ்ய-சமநிலைப்பட்ட, ஜிதாத்மந​:-தன்னை வென்ற மனிதனிடத்தில், பரமாத்மா ஸமாஹித​:-பரமாத்மா நன்கு நிலைத்து நிற்கிறார்.

பொருள் : தன்னை வென்று ஆறுதலெய்தவனிடத்தே சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும், மானாபிமானங்களிலும் சமநிலைப்பட்ட பரமாத்மா விளங்குகிறது.

புறத்தில் பூதங்களிடத்திருந்தும், உயிர்களிடத்திருந்தும் வரும் நன்மை தீமைகள் அவனை அசைக்கமாட்டா. தன்னை வென்றவனுக்கு வெளியுலகம் சுற்றமும் அன்று, பகையுமன்று. கீழான ஆசைகளை அடக்கித் தானே வெல்லுபவனுக்கு மனம் தெளிகிறது. தூய கண்ணாடியில் போன்று தெளிந்த மனதில் பரமாத்மாவின் சொரூபம் பிரகாசிக்கிறது. உலக நிகழ்ச்சி எதுவும் அக்காட்சியை மறைப்பதில்லை. நலங்கள் அனைத்திலும் தலை சிறந்ததாகிய பரமாத்ம தரிசனமே தன்னை வென்றவனுக்கு வாய்க்கிறது. மற்ற நலங்களெல்லாம் எளிதில் அந்த யோக சித்தனுக்கு அமைகின்றன. மனிதன் பெறவேண்டிய சிரேயஸ் என்பதும் இதுவே.

விஷய சுகங்களில் சிறிதும் சம்பந்தப்படாத மனம் ஈசுவரனிடம் சென்று அவனிடம் ஒற்றுமையடைகிறது. இப்படித்தான் பந்தத்தினின்று ஆத்மாக்கள் முக்தியடைகின்றன. ஈசுவரனிடம் போகும் பாதைக்கு எதிராகச்செல்லும் ஆத்மா பந்தப்படுவதாகும்.

யோகியின் மாறாத மனநிலை மேலும் விளக்கப்படுகிறது :

8. ஜ்ஞாநவிஜ்ஞாநத்ருப்தாத்மா கூடஸ்தோ விஜிதேந்த்ரிய​:
யுக்த இத்யுச்யதே யோகீ ஸமலோஷ்டாஸ்மகாஞ்சந​:

ஜ்ஞாந விஜ்ஞாந த்ருப்தாத்மா-எவனது உள்ளம் ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்தியாக நிறைந்திருக்கிறதோ, கூடஸ்த:-எந்த சூழ்நிலையிலும் தம் நிலையிலிருந்து பிறழாமல் இருக்கிறானோ, விஜிதேந்த்ரிய​:-புலன்களை வென்று வசப் படுத்தியுள்ளானோ, ஸம லோஷ்ட அஸ்ம காஞ்சந​:-ஓட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்றுபோலே காணும், யோகீ யுக்த: இதி உச்யதே-அந்த யோகியே யோக நிலையுற்றானெனப் படுவான்.

பொருள் : ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்தி கொண்டவனாய், மலை முடிவில் நிற்பான் போன்று, புலன்களை வென்று, ஓட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்றுபோலே காணும் யோகியே யோக நிலையுற்றானெனப் படுவான்.

சாஸ்திர ஆராய்ச்சியால் வரும் அறிவு ஞானம் எனப்படுகிறது. அது சுவானுபவமாக முதிருமிடத்து அதற்கு விக்ஞானம் என்று பெயர். மற்றவைகளெல்லாம் மாறும்போது எது அகாசம் போன்று மாறாதிருக்கிறதோ அது கூடஸ்தன் எனப்படுகிறது. இந்திரியார்த்தங்களின் போக்கு வரவுகளில் தட்டுப்படாது தன்மயமாயிருக்கும் மனபரிபாகம் அடையப்பெற்றவன் கூடஸ்தன் எனப்படுகிறான். முதற்காரணமாகிய மனது ஒடுங்கியிருக்குமிடத்து இந்திரியங்களுக்கு வேகம் வருவதில்லை. ஆகையால் மனம் அடங்கிய யோகி இந்திரியங்களை நன்கு வென்றவனாகிறான். பாலர்களால் பெரிதும் மதிப்பிடப்படுகின்ற மணற்சோறு, கோலி, பொம்மை, பம்பரம் முதலியவைகளை முதியோர் பற்று வைக்காது சமதிருஷ்டியோடு காண்கின்றனர். பற்றுடைய உலகத்தவர் வெவ்வேறு படித்தரங்களில் வைத்து மதிப்பிடுகின்ற மண், கல், பொன் ஆகியவைகளைப் பற்றற்ற யோகி பஞ்ச பூதங்களால் ஆகியவைகளென்று சமதிருஷ்டியோடு காண்கிறான். பரதிருஷ்டி ஒன்றுதான் அவனுக்குளது. உலகப் பற்றுள்ளவர்கள் உபயோமற்ற பொருள்களைத் தேடுகின்றவராவர். உலகப்பற்றற்ற சுத்தாத்மாக்கள் ஈசுவரனை விசுவாசித்து அவனையே சதா சர்வ காலமும் சிந்தித்திருப்பார்கள்.

உயிரற்ற பொருள்களை இங்ஙனம் பொருள்படுத்துபவர் இனி உயிர்களை எங்ஙனம் பொருள்படுத்துகின்றனர்? விடை வருகிறது :

9. ஸுஹ்ருந்மித்ரார்யுதாஸீநமத்யஸ்தத்வேஷ்யபந்துஷு
ஸாதுஷ்வபி ச பாபேஷு ஸமபுத்திர்விஸிஷ்யதே

ஸுஹ்ருத் மித்ர உதாஸீந மத்யஸ்த த்வேஷ்ய பந்துஷு-அன்பர், நட்பார், பகைவர், ஏதிலர், நடுவர், எதிரிகள், சுற்றத்தார், ஸாதுஷு பாபேஷு ச அபி-சாதுக்கள், பாவிகளிடம் கூட, ஸமபுத்தி-எல்லோரிடத்தும் சம புத்தியுடையோன், விஸிஷ்யதே-மேலோனாவான்.

பொருள் : ஞானமென்பது கடவுளியலைப் பற்றிய அறிவு. விஞ்ஞானமென்பது உலகவியலைப் பற்றியது. அன்பர், நட்பார், பகைவர், ஏதிலர், நடுவர், எதிரிகள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லோரிடத்தும் சம புத்தியுடையோன் மேலோனாவான்.

நல்ல மனமுடையவரே நல்ல எண்ணமுடையவர் ஆகின்றனர். பிரதிபலனை எதிர்பாராது அன்னவர் பிறர்க்கு நன்மை செய்கின்றனர். நல்லெண்ணமும் நற்செயலும் வடிவெடுத்துத் தோழனுக்காகத் தொண்டுபுரிய ஆயத்தமாயிருப்பவர் நண்பர் ஆவர். பகைவர் அதற்கு நேர் மாறாகக் கேடு செய்கின்றனர். உதா சீனரோ நலம் கேடு ஒன்றும் செய்யாது வெறுமனே ஒதுங்கிப் பொதுவாயிருக்கின்றனர். மத்யஸ்தர் இருதரத்தாருக்கும் நடுவு நின்று ஒற்றுமையை உண்டுபண்ணிவைக்க முயலுகின்றனர். வெறுப்பவரோ தங்களை நேசித்து நலம் புரிபவருக்கும் கேடே நினைக்கின்றனர். கெட்ட எண்ணம் எண்ணுவதே அவர்களது இயல்பு. இரத்தத் தொடர்வுடையவர் சுற்றத்தார் ஆகின்றனர். பாரமார்த்திக விஷயத்தில் ஈடுபடுவர் சத்புருஷர்களாகின்றனர். அதற்குத் தடையாகத் தீங்கு விளைவிக்கும் செயலில் இறங்குபவர்கள் பாபிகள். இத்தனைவித வேறுபாடுடைய மனிதர்களிடத்து சாதாரண மனிதன் ஒருவனுக்கு வேறுபாடான மனப்பான்மை வருவது உலக இயல்பு. ஆனால் யோகியோ எல்லாரிடத்தும் ஒரே நல்ல மனமுடையவனாகிறான். ஆகையால் அவன் சிறந்தவன்.

நாடகத்தில் நடிப்பவருள் ஒருவன் இராமனாக நடித்தான் என்று அவனை விரும்பவும், இராவணனாக நடித்தான் என்று மற்றொருவன் வெறுக்கவும் செய்வதில்லை நாடகத்தைப் பார்த்து ரசிப்பவர். யோகியோ உலக நடைமுறையனைத்தையும் நாடகமாகப் பார்க்கிறான். சர்வேசுவரனே இத்தனை பாத்திரங்களாகி விளையாடுகிறான் என்பது அவனுக்குத் தேற்றம். ஆகையால் எல்லாரிடத்தும் ஒரே மனமுடையவனாகிறான் யோகியானவன்.

ஒருவன் பூமியிலிருக்கையில் புல்லையும் வானுற ஓங்கி வளர்ந்த தேவதாரு மரத்தையும் கண்டு, இந்த மரம் எவ்வளவு பெரிது, புல் எவ்வளவு சிறியது என்கிறான். ஆனால் அவன் ஒரு மலை மீதேறி உச்சியிலிருந்து கீழே நோக்கும்போது, பெரிய தேவதாரு மரமும் சிறிய புல்லும் ஒருங்கே உருத்தெரியாத பச்சைப் படலமாகத் தோன்றுவதைக் காண்பான். அது போல உலகப் பற்றுள்ளவர்களுடைய பார்வைக்கு ஒருவன் அரசனென்றும், மற்றொருவன் தெரு பெருக்கும் தோட்டி யென்றும், ஒருவன் தகப்பன் என்றும் மற்றொருவன் மகனென்றும் இம்மாதிரியான ஸ்தான பேதங்களும், அந்தஸ்து வித்தியாசங்களும் தோன்றும். ஆனால் தெய்வ தரிசனம் பெற்றபிறகு எல்லாம் ஒரே தோற்றம். அப்போது நல்லவர் கெட்டவர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வித்தியாசங்களே இருப்பதில்லை.

இத்தகைய சமதிருஷ்டி வருவதற்கு எத்தகைய யோக சாதனம் செய்யவேண்டும்? விடை வருகிறது :

10. யோகீ யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தித​:
ஏகாகீ யதசித்தாத்மா நிராஸீரபரிக்ரஹ​:

யத சித்தாத்மா நிராஸீ-உள்ளத்தைக் கட்டி, ஆசையைத் துறந்து, அபரிக்ரஹ​:-ஏற்பது நீக்கிய
யோகீ ஏகாகீ-யோகி தனியனாக, ரஹஸி ஸ்தித​:-மறைவிடத்தில் இருந்துகொண்டு, ஸததம் ஆத்மாநம் யுஞ்ஜீத-எப்போதும் ஆன்மாவில் யோகமுறக் கடவான்.

பொருள் : மறைவிடத்தில் இருந்துகொண்டு, தனியனாய் உள்ளத்தைக் கட்டி, ஆசையைத் துறந்து, ஏற்பது நீக்கி எப்போதும் ஆன்மாவில் யோகமுறக் கடவான்.

உள்ளத்தை உள்ளபடி அறிதற்கு ஏகாந்த வாசம் இன்றியமையாதது. ஓர் அறைக்குள் யோகியானவன் தன்னை அடைத்துக்கொள்வானாகில் மற்றவர்க்குத் தென்படாதிருக்கிறான். ஆனால் அவன் அறையில் இருப்பது மற்றவர்க்குத் தெரியும். மற்றவர் தன்னைச் சூழ்ந்திருப்பது யோகிக்குத் தெரியும். ஆக, அது தனியனாய் இருக்கிற ஏகாந்த வாசமன்று. யோக சாதகன் எங்கே இருக்கிறான் என்பது வேறு யாருக்கும் தெரியலாகாது. கடவுளைத் தவிர தனக்குத் துணையாக வேறு யாரும் இல்லையென்று யோகியுணரவேண்டும். இதற்காகத்தான் அவன் இரகசியனாகவும் தனியனாகவும் இருக்கவேண்டும் என்றியம்பப்படுகிறது. உண்ணாவிரதம் இருக்கும் பொழுதுதான் உணவைப் பற்றிய எண்ணம் அதிகம் வரும். அங்ஙனம் ஏகாந்த வாசத்தில்தான் அடங்காத மனது அதிகம் கூத்தாடும். அப்படி மனதை அலைந்து திரியவிடலாகாது. எதன்கண் அதற்கு ஆசையோ அதனிடத்து மனது ஓடும். வழிபடு தெய்வத்தைத் தவிர வேறு ஒரு பொருளிடத்தும் மனது செல்லா திருப்பது நிராசையாகும். மோட்டார் வண்டியை ஒருவன் ஓட்டத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அதன் வேகத்தை அதிகப்படுத்தவும் குறைக்கவும் வேண்டுமென்கிறபொழுது அவ்வண்டியை நிறுத்தவும் தெரிந்து கொள்ள வேண்டும். வண்டியை நிறுத்தத் தெரியாதவனை நம்பி அவ்வண்டியில் பயணம் போவது ஆபத்து. மோட்டார் வண்டியை நிறுத்தத் தெரியாத வண்டிக்காரன் போன்று பலபேர் உடல் வாழ்வு என்னும் வண்டியை நிறுத்தத் தெரியாதவர்களாயிருக்கின்றனர். உடல் வாழ்க்கைக்குத் தாங்கள் தலைவர்களாயிருப்பது போய் அதற்கு அவர்கள் அடிமைகளாயிருக்கின்றனர். தலைவன் ஆவதற்கு உபாயம் ஒன்றுண்டு. உடலைக் கொண்டு முறையாக வேலை செய்யத் தெரிந்திருப்பது போன்று அதற்கு ஒரு வேலையும் கொடாது அமைதியுற்றிருக்கும்படி அதை அடக்கிவைக்கவும் தெரிந்திருப்பவனே யோகி. அவனது ஆணைக்குட்பட்டு அது உழைக்கிறது அல்லது உபரதி பெறுகிறது. உபரதி பெற்றிருப்பதற்கு உபாயமாவது தியானம். தேக ஸம்ரக்ஷணைக்காகவென்று யோகி வைத்திருக்கும் உடை, உணவுப்பொருள் முதலியன பரிக்கிரஹம் அல்லது உடைமைப் பொருள் எனப்படும். அவைகளை அதிகப்படுத்துகின்ற அளவு யோகம் தடைப்படும். அப்பொருள்களைக் காப்பாற்றுவதைப் பற்றிய எண்ணம் தியான வேளையில் வரும். அவைகளுக்காக உழைப்பதும் பின்பு அதிகரிக்கும். தேவைகளைக் குறைத்தால் உடல் அடக்கம் உண்டாகும். ஆகவே, பொருள்களை மிகவும் குறைத்துக்கொள்ளவேண்டும். அவைகளை உடைத்திருத்தல் என்ற உணர்ச்சி சிறிதேனும் இருக்கலாகாது. அப்பொழுது யோகி அபரிக்கிரஹத்தில் (பொருள் படையாமையில்) நிலை பெற்றவனாகிறான். இங்ஙனம் அகப்பற்று, புறப்பற்று நீங்கிய மனதே குவிய வல்லதாகிறது.

இருவித யோகிகள் இருக்கிறார்கள். ஒருவர் மறைந்து எவரது கண்ணுக்கும் தெரியாது தமது யோக சாதனங்களைச் செய்கிறார்; மற்றவர் யோகியின் சின்னங்களாகிய தண்டம், கமண்டலம் ஆகியவைகளைத் தாங்கிச் சமய சம்பந்தமாகப் பலரோடும் பேசுகின்றார்.

மனிதர் பார்க்காமற்போனாலும், ஈசுவரன் பார்க்கிறான் என்று நம்பித் தனியாக இருக்கும்போது எவனொருவன் ஒரு பாபத்தையும் செய்யதில்லையோ அவன்தான் வாஸ்தவமான தர்மசீலனாவான். மனிதர் கண்ணுக்குப் புலப்படாமலிருந்தாலும் ஈசுவரதிருஷ்டிக்குட்படுவோம் என்ற பயத்தினால் எவனொருவன் காட்டில் தனியாக இருக்கும்போதும் ஒரு கட்டழகியின் வலைக்குட்படாமலும், காம எண்ணத்தால் அவளைக் கண்ணெடுத்துப் பாராமலும் இருக்கிறானோ அவன்தான் வாஸ்தவமான யோகி. ஒருவருமில்லாது தனித்துள்ள ஒரு வீட்டில் காணப்படும் பொன்முடிப்பை எவனொருவன் எடுத்துக்கொண்டுபோக இச்சைப்பட மாட்டானோ அவனே தர்மவான். ஊரார் வசைமொழிக்குப் பயந்து வெளிவேஷத்துக்காக எவனொருவன் தர்மத்தை அனுஷ்டிக்கிறானோ அவனை தர்மவான் என்று சொல்லக்கூடாது. மௌனமாயும் மறைவாயும் அனுஷ்டிக்கும் தர்மமே வாஸ்தவமான தர்மம்.

ஏகாந்தத்தில் எத்தகைய ஆஸனம் அமைத்துக்கொள்ள வேண்டும்? 

11. ஸுசௌ தேஸே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸநமாத்மந​:
நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுஸோத்தரம்

ஸுசௌ தேஸே-சுத்தமான இடத்தில், சைல அஜிந குஸ உத்தரம்-துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது, ந அத்யுச்ச்ரிதம் ந அதிநீசம்-அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும், ஆத்மந​: ஸ்திரம் ஆஸநம்-தனக்கோர் உறுதியான ஆசனம், ப்ரதிஷ்டாப்ய-அமைத்துக் கொண்டு.

பொருள் : சுத்தமான இடத்தில் அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும், துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது தனக்கோர் உறுதியான, ஆசனம் சமைத்துக்கொண்டு,

தூயதும் மனதுக்கினியதுமான இடத்திலேதான் யோகி வாசம் செய்யவேண்டும். தூய வாசஸ்தானம் மனதைத் தூய தாக்குதற்குத் துணைபுரிகிறது. இயற்கையழகு இன்னொருவிதத்தில் அதைப் பண்படுத்துகிறது. சூழ்நிலைக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்வுண்டு. கந்தைத் துணி கட்டியிருப்பவனது உள்ளத்தில் கீழ்மையுணர்ச்சி உதயமாகிறது. அகசியான இடத்தில் வசிப்பவனுக்கு மனத்தகத்தும் மாசு படிகிறது. மேலான எண்ணங்களை ஊட்டவல்ல சூழ்நிலையே யோகிக்கு உகந்த இருப்பிடமாகும். மரத்தில் கட்டித் தொங்கும் ஊஞ்சல் உறுதியானதன்று; அது அசையும் தன்மையுடையது. புற்குவியல், அடுக்கி வைக்கப்பட்ட மரக்கட்டை, குவிக்கப்பட்ட கூழாங்கற்கள் இவைகளாலும் ஸ்திரமான ஆஸனம் அமையாது. இயற்கையாக அமைந்த பாறை, கட்டுவிக்கப்பட்ட மேடை இவைகளே சிறந்தவைகளாம். பூமி மட்டத்துக்கு மேல் ஆஸனம் அதிக உயரமாய்ப் போனால் உட்காருதற்கு அச்சத்தை உண்டுபண்ணும்; மயங்கி அல்லது தூங்கி விழுந்தால் காயமாகும். ஆக, பூமி மட்டத்துக்கு இரண்டு அடிக்குமேல் போகலாகாது. பூமி மட்டத்தில் இருந்தால் புழு பூச்சிகள் வரும். அதனால் இடைஞ்சல் ஏற்படும். பூமி மட்டத்துக்குக் கீழே போனால் ஆரோக்கியத்துக்குக் கேடு வரும். ஆகையால் ஆஸனம் மிகத் தணிந்திருக்கலாகாது. மேடையின் மீது தர்ப்பாஸனம், அதன் மேல் மான்தோல் அல்லது புலித்தோல், அதன்மேல் துணி விரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். அது மிக மிருதுவாயும் இராது; மிகக் கடினமாயும் இராது. இந்நிபுந்தனைகளுக்கு உட்பட்ட ஆஸனம் சாதனத்துக்குத் தகுதியுடையது ஆகும். மிக மிருதுவான ஆஸனம் நிமிர்ந்து உட்காருதற்கு உதவாது. சுக ஜீவனத்தைப்பற்றிய எண்ணத்தை அது ஊட்டுவதாகும். கடினமான ஆஸனமோ உடலை உறுத்தி வலியை உண்டுபண்ணும். ஆக, அது உதவாது. இரண்டுக்கும் இடைநிலையில் ஆஸனம் இருப்பது முறை. அத்தகைய ஆஸனத்தமர்ந்து யோகி என்ன செய்ய வேண்டும்? பகவான் பதில் அளிக்கிறார்.

12. தத்ரைகாக்ரம் மந​: க்ருத்வா யதசித்தேந்த்ரியக்ரியா​:
உபவிஸ்யாஸநே யுஞ்ஜ்யாத்யோகமாத்மவிஸுத்தயே

தத்ர ஆஸநே உபவிஸ்ய-அந்த ஆசனத்தில் அமர்ந்து, யதசித்த இந்த்ரிய க்ரி, ய:-உள்ளத்தையும் புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி, மந​: ஏகாக்ரம் க்ருத்வா-மனதை ஒருமுகமாக்கி, ஆத்மவிஸுத்தயே-ஆத்மா நன்கு தூய்மையடையும்படி, யோக யுஞ்ஜ்யாத்-யோகத்திலே பொருந்தக் கடவான்.

பொருள் : அங்கு மனதை ஒருமுகமாக்கி, உள்ளத்தையும் புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி, ஆசனத்தமர்ந்து ஆத்மா நன்கு தூய்மையடையும்படி யோகத்திலே பொருந்தக் கடவான்.

இந்திரியங்கள் வாயிலாக மனது வெளி விஷயங்களில் செல்லுகிறவளவு அது தன் பரிசுத்தத்தை இழக்கிறது. சேற்றில் புரண்டோடும் பிரவாஹம் போன்று அது தன் நீர்மையைப் பறிகொடுக்கிறது. கருவி கரணங்களை மீட்டெடுத்து ஆத்ம சொரூபத்தில் வைக்கின்றவளவு சித்தம் சுத்தியடைகிறது. ஆத்மாவைச் சார்ந்திருப்பது அதன் எதார்த்த நிலை; அதன் கலப்பற்ற பாங்கு. வெளி விஷயாதிகளைச் சார்ந்திருப்பது மாசு படிந்தநிலை. மாசு படிந்திருக்குமளவு அதன் பேராற்றல் குன்றுகிறது. தூயதாகுமளவு அதன் அருள் சக்தி வலுக்கிறது.

ஆரம்பத்தில் ஒருவன் தன்னந்தனியனாக உட்கார்ந்துகொண்டு மனதை ஒருமுகப்படுத்த, அதாவது ஏகாக்ர சித்தத்தையடைய முயலவேண்டும். இல்லாவிட்டால் மனம் பற்பல விஷயங்களில் ஓடிச் சஞ்சலத்துக்குள்ளாகும். பாலையும் ஜலத்தையும் ஒன்றாக்கி வைத்தால் இரண்டும் நன்றாகக் கலந்துவிடுவது நிச்சயம். ஆனால், பாலைக் கடைந்து வெண்ணெயை எடுத்து ஜலத்தில் போட்டு வைத்தால் அவ்வெண்ணெய் ஜலத்துடன் கலக்காமல் அதன் மேலே மிதக்கும். அதுபோல இடைவிடாத பழக்கத்தால் ஒருவனுக்கு ஏகாக்கிர சித்தம் நிலைக்குமானால், அவன் எங்கிருந்த போதிலும் சரியே, அவனுடைய மனம் சுற்றிலுமுள்ள பொருள்களின்மீது சொல்லாமல் ஈசுவரனிடத்திலேயே செல்லும்.

மனவொடுக்கத்துக்கு உடலைப்பற்றிய நியமனம் ஏதேனும் உண்டா? உண்டு. அது வருமாறு :

13. ஸமம் காயஸிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர​:
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திஸஸ்சாநவலோகயந்

காய ஸிரோ க்ரீவம் ஸமம்-உடம்பையும், தலையையும் கழுத்தையும் சமமாக, ச அசலம் தாரயந்-அசைவின்றி வைத்துக்கொண்டு, திஸ: அநவலோகயந்-திசைகளை நோக்காமல், ஸ்வம் நாஸிகாக்ரம்-தன்னுடைய மூக்கு நுனியை, ஸம்ப்ரேக்ஷ்ய-பார்த்துக் கொண்டு.

பொருள் : உடம்பையும், தலையையும் கழுத்தையும் சமமாக அசைவின்றி வைத்துக்கொண்டு, உறுதி சான்றவனாய், மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு, திசைகளை நோக்காமல்,

உடல், கழுத்து, தலை ஆகியவைகள் நேராயிருக்கும்போது மேருதண்டம் அல்லது முதுகின் முள்ளந்தண்டும் நேராகிறது. சுவாசம் ஒழுங்காகப் போகவும் வரவும் செய்யும். சிறந்த எண்ணங்கள் மனதில் உண்டாவதற்கு அத்தகைய உடல் நிலை முற்றிலும் வேண்டப்படுகிறது. யோகி ஆஸனத்தமரும்போது மேருமலைபோன்று அசையாது உறுதியாயிருக்கவேண்டும். அதனால் உடலைப்பற்றிய உணர்ச்சி தானே அகன்றுபோம். அவயவங்களைத் துன்புறுத்துகிற பாங்கில் அமரலாகாது. சுகமாக இருக்கும் பாங்கில் அமர்ந்திருக்கவேண்டும். மனது ஒடுங்குகிறவளவு கண் விழிகளும் அசைவற்றவைகளாகின்றன. ஓயாது இங்கும் அங்கும் பார்க்கும் இயல்பும் தானே குறைகிறது. இனி, தியானத்தமரும்பொழுது கண்கள் மூக்கு நுனியைப் பார்ப்பவைகள் போல் தென்படுகின்றன. உண்மையில் மூக்கைப் பார்த்தால் மூக்கைப் பற்றிய ஞாபகம்தான் மனதில் வரும். அந்தக்கரணம் ஆத்ம சொரூபத்தில் திளைத்திருக்கிற வேளையில் உடலைப்பற்றிய எண்ணம் உண்டாகாது. மனதில் அந்நிலை வரும்பொழுது கண்கள் மூக்கு நுனியைப் பார்ப்பவைகள் போல் தென்படும்.

தன் முட்டையின்மீது உட்கார்ந்து அடைகாக்கும் குருவி புறப்பொருள் ஒன்றையும் பாராது வெறுமனே விழித்துட்கார்ந்திருக்கிறது. யோகியினுடைய கண்ணும் அத்தகையதாகிறது.

தியானத்தில் தீவிரமான ஏகாக்ரம் உண்டாகிறது; அப்போது வேறொன்றும் கண்ணுக்குப் புலப்படாது; காதுகளிலும் சப்தம் விழாது; ஸ்பரிச உணர்ச்சியும் அகன்றொழிகிறது. அப்போது பாம்பு ஒன்று சரீரத்தின்மீது ஊர்ந்து போனாலும் அது தெரிவதில்லை. தியானிப்பவர்க்குப் பாம்பைப்பற்றிய உணர்ச்சி இருப்பதில்லை; பாம்புக்கும் அம்மனிதனைப்பற்றிய உணர்ச்சியிராது.

இனி உள்ளத்தை எப்படி ஒழுங்குபடுத்துவது?

14. ப்ரஸாந்தாத்மா விகதபீர்ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித​:
மந​: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர​:

ப்ரஸாந்தாத்மா விகதபீ-நன்கு சாந்த மெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி, ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித​:-பிரம்மச்சாரி விரதத்தில் நிலைகொண்டு, மந​: ஸம்யம்ய-மனதை வசப்படுத்தி, 
மச்சித்த: மத்பர​:-என்னிடத்தே சித்தத்தை இசைத்து, என்னையே அடையத்தக்க கதி எனக்கொண்டு, யுக்த: ஆஸீத-யோகத்திலிருக்கக் கடவான்.

பொருள் : நன்கு சாந்த மெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி, பிரம்மச்சாரி விரதத்தில் நிலைகொண்டு, மனதை வசப்படுத்தி, என்னிடத்தே சித்தத்தை இசைத்து, எனக்கு ஈடுபட்டு யோகத்திலிருக்கக் கடவான்.

தேங்கிய தடாகம் போன்று மனது தெளிவும் அமைதியும் அடையப்பெறுமிடத்து அது பிரசாந்தாத்மா எனப்படுகிறது. அந்த அமைதியில் வீரமும் சேர்ந்திருக்கிறபடியால் அச்சத்துக்கு ஆங்கு இடமில்லை. சிற்றின்ப போகம் எதிலும் ஈடுபடாதிருப்பது பிரம்மசரிய விரதம். குருவுக்கும் உலகுக்கும் சேவைபுரிவதன் மூலம் மனதினின்று காம எண்ணங்கள் அடியோடு அகற்றப்படுகின்றன. அதன் பிறகு மனதை அடக்குதல் எளிதாகிறது. அடங்கிய மனதில் ஈசுவரனைப்பற்றிய எண்ணமே குடிகொண்டிருக்குமானால் கீழான எண்ணங்கள் அங்குத் தலையெடுக்க மாட்டா. ஈசுவரன் ஒருவனே ஒப்பற்ற பொருள் என்றும், அவனை அடைதலே வாழ்வின் முடிவான நோக்கம் என்றும் கருதியிருப்பவன் நல்ல யோகியாகிறான்.

ஒருவன் பன்னிரண்டு வருஷங்கள் வழுவாத பிரம்மசரிய விரதம் அனுசரித்தால் அவனிடம் மேதாநாடி தோன்றுகிறது. அதாவது எதையும் அறிந்துகொள்ளும் சக்தி மலர்கிறது. வெகு சூக்ஷ்மமான விஷயங்களையும் அவன் சுலபமாக அறிந்துகொள்வான். அவ்வித அறிவால் ஒருவன் ஈசுவர தரிசனத்தையும் அடையக்கூடும். இவ்விதம் பரிசுத்தமடைந்த தெளிந்த அறிவுள்ளவர்களாலேயே கடவுளையடைய முடியும்.

யோகத்தினின்று விளையும் ஆக்கம் இனி விளக்கப்படுகிறது :

15. யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமாநஸ​:
ஸாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தாமதிகச்சதி

நியதமாநஸ​:-மனதைக் கட்டுப்படுத்தி, யோகீ ஏவம்-யோகி இவ்விதம், ஆத்மாநம் ஸதா யுஞ்ஜந்-ஆத்மாவை இடையறாது (பிரம்மத்துடன்) இணைத்துக் கொண்டு, மத்ஸம்ஸ்தாம் நிர்வாணபரமாம்-என்பால் நிலை பெற்றதாகிய மிகச்சிறந்த விடுதலையிலுள்ள, ஸாந்திம் அதிகச்சதி-ஆறுதலை அடைவான்.

பொருள் : இங்ஙனம் எப்போதும் மனதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவில் யோகமுற்றிருக்கும் யோகி, என்பால் நிலை பெற்றதாகிய மிகச்சிறந்த விடுதலையிலுள்ள ஆறுதலையறிவான்.

புசித்தவனுக்குப் பசி யடங்குகிறது. மேலே சொல்லியபடி யோக சாதனம் செய்து மனது அடங்கப்பெற்றவனுக்கு இயல்பாக சாந்தி உதயமாகிறது. அக்னியில் சூடு இருப்பதுபோன்று ஸர்வேசுவரனிடத்து சாந்தி நிலவுகிறது. அதை அடையுமளவு ஒருவன் முக்த புருஷனாகிறான். இறைவனை அடைதல், சாந்தி பெறுதல், முக்தி சேர்தல் இவையாவும் ஒன்றாம். இதுவே யோகத்தின் பயனாகிறது.

பட்டணத்துக்குப் புதிதாக வருபவன் ராத்திரி வேளையில் தங்குதற்கு வசதியான விடுதியொன்றை முதலில் தேடி அதில் தன் சாமான்களை வைக்கவேண்டும். பிறகு அவன் ஊர் சுற்றி வேடிக்கை பார்க்கலாம். இல்லாவிட்டால் இருளில் இடம் தேடுவதில் சிரமப்படுவான். அதுபோல இவ்வுலகுக்குப் புதிதாக வருபவனும் ஈசுவரனாகிய நித்திய விடுதியைத் தேடிவைத்துவிட்டு, பயமின்றி இவ்வுலகில் திரிந்து, தான் செய்யவேண்டிய காரியங்களை யெல்லாம் செய்யலாம். இல்லாவிட்டால் மரணமாகிய பயங்கரமான அந்தகாரம் வரும்பொழுது மிகுந்த துயரங்களை அவன் அனுபவிக்க நேரும்.

வாழ்க்கையில் யோகி எத்தகைய நியமனங்களுக்கு உட்பட்டு நடக்கவேண்டும்? விடை வருகிறது :

16. நாத்யஸ்நதஸ்து யோகோऽஸ்தி ந சைகாந்தமநஸ்நத​:
ந சாதிஸ்வப்நஸீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந

அர்ஜுந!-அர்ஜுனா! அத்யஸ்நத து யோக: ந அஸ்தி-மிகைபட உண்போனுக்கு யோகமில்லை, அநஸ்நத​: ச ஏகாந்தம் ந-உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது, ந ச அதிஸ்வப்நஸீலஸ்ய-மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை, ஜாக்ரத: ஏவ ந-மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை.

பொருள் : மிகைபட உண்போனுக்கு யோகமில்லை; உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது. மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை; அர்ஜுனா, மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை.

விணையின் தந்தியை அளவுக்கு மீறி இறுக்கினால் அது உடைந்துபோம்; மிக இளக்கினால் அதில் ஓசை வராது. உடலோ வீணை போன்றது. உணவு, உறக்கம் இவைகளில் மிகைபடுதலும் குறைபடுதலும் கூடாது. அந்தந்த சரீரத்துக்கு ஏற்ற உணவு எது, அளவு எது என்பதை அவரவரே தீர்மானம் செய்யவேண்டும். மிகைபட உண்பதால் சோம்பல் வருகிறது. குறைபட உண்பதால் மெலிவு ஏற்படுகிறது. அரை வயிறு உணவு, கால் வயிறு நீர், கால்வயிறு காற்றோட்டத்துக்கு இடம் இப்படி அமைப்பது சிறந்தது. உறக்கம் உடலைப் புதுப்பித்துத் தெளிவுபடுத்துகிறது. ஆனால் மிகைபட்ட அல்லது குறைபட்ட உறக்கம் தமோ குணத்தை வளர்க்கிறது. அதனால் தியானம் தடைப்படுகிறது.

பகற்பொழுதில் திருப்தியாகப் போஜனம் செய். ஆனால் இரவில் உட்கொள்ளும் உணவு குறைவாயும் இலேசாயுமிருக்கட்டும்.

சரீரத்துக்கு உஷ்ணத்தையும் மனதுக்குச் சஞ்சலத்தையும் எந்த உணவு கொடுக்காதோ அந்த உணவைத்தான் சாதகன் உட்கொள்ளவேண்டும். யோக சித்தி கைகூடும் முறை வருகிறது :

17. யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு
யுக்தஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி து​:கஹா

யுக்த ஆஹார விஹாரஸ்ய- ஒழுங்குக்கு உட்பட்ட உணவு உண்டு நடமாடுகிறவனுக்கு
கர்மஸு யுக்தசேஷ்டஸ்ய-வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட முயற்சி செய்கிறவனுக்கும்
ஸ்வப்ந அவபோதஸ்ய யுக்த-உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின்
து​:கஹா யோக: பவதி-துயரை அழிக்கும் யோகம் கை கூடுகிறது

பொருள் : ஒழுங்குக்கு உட்பட்ட உணவும், விளையாட்டும் உடையோனாய், வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது.

உடற்பயிற்சி யோகிக்கு முற்றிலும் தேவையானது. ஆனால் அதை அளவுடன் செய்யவேண்டும். குறித்த வேளையில் குறித்த காரியங்களை அளவெடுத்துச் செய்யவேண்டும். சந்திர சூரியன் செயல்களெல்லாம் ஒழுங்காக நடைபெறுவது போன்று யோகியின் வாழ்க்கை முறையும் பெருந்திட்டத்துக்கு உட்பட்டிருக்கிறது. அதனால்தான் தியானம் செய்வது எளிதாகிறது. நெறியான வாழ்க்கையுடைய யோகிக்கு உடல் உணர்ச்சியே இல்லாது போய்விடுகிறது. துக்கம் துடைக்கப்படுவதும் அதனாலேயாம். யோகி தியானத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறான் என்று உறுதி கூறுவது எப்பொழுது? உத்தரம் உரைக்கப்படுகிறது:

18. யதா விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்டதே
நி​:ஸ்ப்ருஹ​: ஸர்வகாமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா

விநியதம் சித்தம்-தன்வசப் பட்டுள்ள உள்ளம், யதா ஆத்மநி ஏவ-எப்பொழுது தனதுள்ளேயே, அவதிஷ்டதே-நிலைபெற்றிருகிறதோ, ததா ஸர்வகாமேப்ய: நி​:ஸ்ப்ருஹ​:-அப்போது எந்த விருப்பத்திலும் பற்று நீங்கிய மனிதன், யுக்த: இதி உச்யதே-யோக முற்றான் எனப் படுவான்.

பொருள் : உள்ளம் கட்டுக்கடங்கித் தனதுள்ளேயே நிலைபெற, ஒருவன் எந்த விருப்பத்திலும் வீழ்ச்சியற்றானாயின், யோக முற்றானெனப் படுவான்.

காற்று அடிக்கும்போது கடல் கொந்தளிப்பால் நிலை குலைந்ததாகிறது. காமம் என்னும் காற்று வீசும்போது சித்தமும் நடுநிலையினின்று வழுவுகிறது. சித்தத்தில் எண்ணங்கள் உதிக்குமளவு அது தன் அமைதியை இழக்கிறது. மனம் தேங்கித் தூய தாயிருக்குமிடத்து யோகம் வலுக்கிறது. அசையாத மனதையுடையவன் யோகத்தில் மிக மேலேறியவன் ஆகிறான்.

கிழிந்த மூட்டையிலிருந்து சிதறி நாலாபக்கங்களிலும் ஓடிய கடுகைப் பொறுக்கி யெடுப்பது சிரமம். அதுபோல, உலக விஷயங்கள் பலவற்றிலும் உழலும் மனதைக் குவியச் செய்வது எளிதன்று. மனம் குவிந்து ஒருமைப்படுவதே தியானம்.

ஒருமைப்பட்ட மனது எத்தகையது என்பது விளக்கப்படுகிறது :

19. யதா தீபோ நிவாதஸ்தோ நேங்கதே ஸோபமா ஸ்ம்ருதா
யோகிநோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோகமாத்மந​:

நிவாதஸ்த: தீப:-காற்றில்லாத இடத்தில் விளக்கு, யதா ந இங்கதே-எப்படி அசையாமல் இருக்குமோ, ஸா உபமா-அதே உவமை, ஆத்மந: யோகம் யுஞ்ஜத: யோகிந:-ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகியினுடைய, யதசித்தஸ்ய ஸ்ம்ருதா-வெற்றி கொள்ளப பட்ட மனதிற்கும் சொல்லப் பட்டது.

பொருள் : சித்தத்தைக் கட்டி ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகிக்குக் காற்றில்லாத இடத்தில் அசைவின்றி நிற்கும் விளக்கை முன்னோர் உவமையாகக் காட்டினர்.

தியானத்தில் அமர்ந்திருப்பவன் தானே ஜோதி சொரூபம் என்றும், சுத்த சைதன்யம் என்றும் பாவித்தல் வேண்டும். காற்று அடிக்காத இடத்தில் ஏற்றிவைத்த தீபம் தனது நிலை பிறழாது வரைந்த சித்திரம் போன்று நின்று எரிகிறது. ஆசை என்ற காற்று அடியாதிருக்கும் போது யோகியின் சித்தமும் அங்ஙனம் அசைவற்றிருக்கிறது.

தியானத்தில் முதிர்ந்தவனுக்கு முக்தி வெகு சமீபம் என்பது ஒரு பழமொழி. தியானத்தில் ஒரு மனிதனுக்கு எப்போது முதிர்ச்சி உண்டாகிறது தெரியுமா? அவன் தியானத்துக்கு உட்கார்ந்தவுடன் திவ்வியதேஜஸ் அவனைச் சுற்றிக் கொள்கிறது. அவனுடைய ஆத்மா ஈசுவரனுடன் கலந்துகொள்கிறது.

யோக முதிர்ச்சியால் வரும் வேறு பல அனுபவங்களும் இருக்கின்றன. அவைகளாவன :

20. யத்ரோபரமதே சித்தம் நிருத்தம் யோகஸேவயா
யத்ர சைவாத்மநாத்மாநம் பஸ்யந்நாத்மநி துஷ்யதி

யோகஸேவயா-யோகப் பயிற்சியினால், நிருத்தம் சித்தம்-கட்டுண்ட சித்தம், யத்ர உபரமதே-எங்கு ஆறுதல் எய்துமோ, ச யத்ர ஆத்மநா ஆத்மாநம் பஸ்யந்-எங்கு ஆத்மாவினால் ஆத்மாவையறிந்து, ஆத்மநி ஏவ துஷ்யதி-ஆத்மாவில் மகிழ்ச்சியடைகிறானோ.

பொருள் : எங்கு சித்தம் யோக ஒழுக்கத்தில் பிடிப்புற்று ஆறுதலெய்துமோ, எங்கு ஆத்மாவினால் ஆத்மாவையறிந்து ஒருவன் ஆத்மாவில் மகிழ்ச்சியடைகிறானோ

மனம் அடங்கி அமைதிபெறுகிறவிடத்து ஆனந்தம் மிளிர்கிறது என்பதற்கு சுழுத்தியவஸ்தையே சான்று. ஆனால் சுழுத்தியில் ஆத்ம தரிசனம் மிகக் குறைவு. யோக சாதனத்தால் சித்த சுத்தி யடையுங்கால், தெளிவடைந்த மனதால் ஆத்ம சொரூபம் நன்கு அறியப்படுகிறது. ஆத்ம ஞானமே ஆத்ம திருப்தியாகிறது.

இன்னும் என்ன அடையப்பெறுகிறது?

21. ஸுகமாத்யந்திகம் யத்தத்புத்திக்ராஹ்யமதீந்த்ரியம்
வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்திதஸ்சலதி தத்த்வத​:

அதீந்த்ரியம்-புலன்களைக் கடந்து நிற்பதும், புத்திக்ராஹ்யம்-புத்தியால் தீண்டத்தக்கதும், யத் ஆத்யந்திகம் ஸுகம்-எந்த முடிவற்ற பேரின்பத்தை, தத் யத்ர வேத்தி-அதை எங்கு காண்பானோ, யத்ர ஸ்தித-எங்கு நிலைபெறுவதால், தத்த்வத​: ந ஏவ சலதி-இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ.

பொருள் : புத்தியால் தீண்டத்தக்கதும், புலன்களைக் கடந்து நிற்பதுமாகிய பேரின்பத்தை எங்குக் காண்பானோ, எங்கு நிலைபெறுவதால் இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ,

சுகம் வெளியுலகில் இல்லை; அது ஆத்ம சொரூபத்திலேயே இருக்கிறது. உள்ளே இருப்பதை உணர இந்திரியங்களுக்கு இயலாது. தெளிவடைந்த புத்தியே அதைத் தெரிந்துகொள்கிறது. அது ஆத்ம சுகமாதலால் அது முடிவில்லாதது. ஆத்ம சொரூபத்திலே நிலைபெற்ற யோகி நீருக்குள்ளே திரும்பவும் இடம் பெற்ற மீன் போன்றவன். மீன் நீரினின்று நிலம் போக விரும்புவதில்லை. தெவிட்டாத ஆத்மானந்தத்தை அனுபவிப்பவன் தெவிட்டுகிற விஷய ஆனந்தத்துக்குப் போவதில்லை.

உண்மையான சமாதியடையும்போது ஒருவன் தன் இயல்பான சச்சிதானந்த சாகரத்தில் ஆழ மூழ்குகிறான். அவன் கருவி கரணங்கள் ஒடுங்குகின்றன.

22. யம் லப்த்வா சாபரம் லாபம் மந்யதே நாதிகம் தத​:
யஸ்மிந்ஸ்திதோ ந து​:கேந குருணாபி விசால்யதே

யம் லாபம் லப்த்வா-எதனை யெய்தியபின், தத: அபரம் அதிகம் ந மந்யதே ச-அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ, யஸ்மிந் ஸ்தித:-எங்கு நிலை பெறுவதால், குருணா து​:கேந அபி-பெரிய துக்கத்தாலும், ந விசால்யதே-சலிப்பெய்த மாட்டானோ.

பொருள் : எதனை யெய்தியபின் அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ, எங்கு நிலை பெறுவதாய் பெரிய துக்கத்தாலும் சலிப்பெய்த மாட்டானோ,

அடையப் பெறாத உலகப் பொருள் ஒன்று பெரியதாகத் தோன்றுகிறது. அடைந்தவுடனே அது சிறியதாய்விடுகிறது. பிறகு அதனினும் பெரியதாக வேறு ஒரு பொருள் தோன்றுகிறது. இப்படி இவ்வுலகம் தருகிற நிலையற்ற இன்பம் ஒரு பொருளிலிருந்து மாறி இன்னொரு பொருளுக்குப் போய்க் கொண்டே யிருக்கிறது. பிரபஞ்சத்துக்கு அப்பால் உள்ள பரப்பிரம்மத்தை அடைந்தான பிறகு அதற்கு ஒப்பானது ஒன்றும் தென்படுவதில்லை. இனி, அதற்கு மிக்கதொரு பொருள் தோன்றுவது எங்ஙனம்? கடலை அடைந்த மின் அதிலும் பெரியது எதைப் பெறமுடியும்? அகண்ட சச்சிதானந்தத்தைப் பெற்ற பிறகு அதற்குமேல் பெறுதற்கு ஒன்றுமில்லை. துக்கமெல்லாம் உடல் சம்பந்தமானவைகள். பிரம்மானந்தத்தில் திளைத்திருப்பவர்களுக்குத் தேகவுணர்ச்சி வருவதில்லை. நிழல்போன்று தேகம் யோகியைச் சார்ந்திருக்கிறது. நிழலைக் கத்தியால் வெட்டுவதால் மனிதனுக்குத் துன்பம் வருவதில்லை. தேகத்தைச் சிதைப்பதால் ஆத்மஞானிக்குத் துன்பம் வருவதில்லை.

சரீரத்தில் அனுபவிக்கும் துன்பங்களும் இன்பங்களும் எப்படிப் பட்டவையாயினும் உண்மையான பக்தனுக்கு ஞானம், பக்தி இவைகளின் மஹிமையும் சக்தியும் ஒருபோதும் குறைவதில்லை. பாண்டவர்கள் அனுபவித்த கஷ்டங்கள் எவ்வளவு கொடியனவாக இருந்தன! என்றாலும் ஒரு நிமிஷங்கூட அவர்களுடைய ஞான ஒளி மங்கின தில்லை.

23. தம் வித்யாத்து​:கஸம்யோகவியோகம் யோகஸம்ஜ்ஞிதம்
ஸ நிஸ்சயேந யோக்தவ்யோ யோகோऽநிர்விண்ணசேதஸா

து​:க ஸம்யோக வியோகம்-துன்பத்துடன் கலத்தலை விடுதலை, தம் யோகஸம்ஜ்ஞிதம்-அந்நிலையே யோக நிலையென்று, வித்யாத்-உணர், ஸ யோக:-அந்த யோகத்தை,
அநிர்விண்ணசேதஸா-உள்ளத்தில் ஏக்கமின்றி, நிஸ்சயேந யோக்தவ்ய:-உறுதியுடன் பற்றி நிற்கக் கடவான்.

பொருள் : அந்நிலையே துன்பத்துடன் கலத்தலை விடுதலாகிய யோக நிலையென்று உணர். உள்ளத்தில் ஏக்கமின்றி உறுதியுடன் அந்த யோகத்தை ஒருவன் பற்றி நிற்கக் கடவான்.

மனிதன் உண்மையில் சுக சொரூபி. அறியாமையினால் தன்னைத் துக்கத்தோடு இணைத்துக்கொண்டிருக்கிறான். வருவிக்கப்பட்ட துக்கத்தை விலக்கிவிட்டால் தனது எதார்த்தநிலை விளங்குகிறது. சொப்பனத்தில் வருந்துகின்ற ஒருவனை எழுப்பி ஜாக்கிர தாவஸ்தையோடு யோகம் பண்ணிவைப்பது போன்றது இது. யோகம் என்பதற்கு இணைத்தல் அல்லது சேர்த்துவைத்தல் என்று பெயர். எக்காரணத்தை முன்னிட்டாவது விசனப்படுபவன் யோகத்துக்குத் தகுதியுடையவன் ஆகான். அகமகிழ்வுடனும் குன்றாத ஊக்கத்துடனும் யோக சாதனம் செய்பவனுக்கு அது கைகூடும். ஏனென்றால் தனது நிஜசொரூபத்தை யணுகுதற்கு அத்தகைய மனபரிபாகம் முற்றிலும் அவசியமானது.

பாத்திரத்தின் அடியில் நெருப்பு எரிந்துகொண்டிருக்கும் வரையில், அதிலுள்ள பால் கொதித்துப் பொங்கும். நெருப்பை எடுத்து விட்டாலோ, பொங்குதல் நின்றுவிடும். அதுபோல ஸாதன மார்க்கத்தில் இருக்கும் வரையில்தான் புதிய ஸாதகனது மனம் குதூகலத்தால் பொங்கும்.

யோகசாதனத்தில் இன்னும் சில அம்சங்கள் இருக்கின்றன. அவையாவன :

24. ஸங்கல்பப்ரபவாந்காமாம்ஸ்த்யக்த்வா ஸர்வாநஸேஷத​:
மநஸைவேந்த்ரியக்ராமம் விநியம்ய ஸமந்தத​:

ஸங்கல்பப்ரபவாந்-சங்கல்பத்தினின்றும் எழும், ஸர்வாந் காமாந் அஸேஷத​: த்யக்த்வா-எல்லா விருப்பங்களையும் மிச்சமற துறந்துவிட்டு, மநஸா இந்த்ரியக்ராமம் ஸமந்தத​: ஏவ விநியம்ய-மனதினால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி.

பொருள் : சங்கல்பத்தினின்றும் எழும் எல்லா விருப்பங்களையும் மிச்சமறத் துறந்துவிட்டு, எல்லாப் பக்கங்களிலும் மனத்தால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி,

சங்கல்பம் என்பது மனதில் வரும் எண்ணம். அது விதை போன்றது. ஆசையோ செடிபோன்றது. விறகுக் கட்டைகளுக்கிடையிலுள்ள சிறு தீ, பிறகு பெருந்தீயாகப் பரிணமிப்பது போன்று மனதில் ஆசை கொஞ்சம் மிச்சமிருந்தால் அது நாளடைவில் சாதகனுக்கும் தெரியாது பேராசையாகத் தடித்து விடும். ஆசைக்குச் சிறிதும் இடம் தரலாகாது. விவேகம் வைராக்கியத்தோடு கூடிய மனதால் இந்திரியங்களை அறவே அடக்குதல் வேண்டும்.

புகைசூழ்ந்த அறையில் எவ்வளவு ஜாக்கிரதையுடன் நீ இருந்தாலும் உனது சரீரத்தில் கொஞ்சமாவது கரியேறத்தான் செய்யும். அதுபோல ஒருவன் எவ்வளவு சாமர்த்தியமாயும் ஜாக்கிரதையாயும் இருந்தாலும் இந்திரிய விஷயங்களுக்கிடையில் வாசம் செய்வதால் அவனுக்குக் காம இச்சை கொஞ்சமாவது உண்டாவது நிச்சயம்.

25. ஸநை​: ஸநைருபரமேத்புத்த்யா த்ருதிக்ருஹீதயா
ஆத்மஸம்ஸ்தம் மந​: க்ருத்வா ந கிஞ்சிதபி சிந்தயேத்

ஸநை​: ஸநை: உபரமேத்- மெல்ல மெல்ல ஆறுதல் பெறச் செய்து, த்ருதி க்ருஹீதயா புத்த்யா-துணிந்த மதியுடன், மந​: ஆத்மஸம்ஸ்தம் க்ருத்வா-மனதை ஆத்மாவில் நிறுத்தி, கிஞ்சித் அபி ந சிந்தயேத்-எதற்கும் கவலையுறாதிருக்கக் கடவான்.

பொருள் : துணிந்த மதியுடன் மனதை ஆத்மாவில் நிறுத்தி மெல்ல மெல்ல ஆறுதல் பெறக் கடவான்; எதற்கும் கவலையுறாதிருக்கக் கடவான்.

த்ருதி அல்லது தைரியம் என்பது நெறியான வாழ்க்கையினின்று வரும் வல்லமை. ஊசிப்புல் ஊசியைவிடக் கூர்மையாயிருக்கும். ஆனால் குத்தித் தைப்பதற்கு அது உதவாது. விஷய வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள சிலருக்கு நுண்ணறிவு உண்டு. தங்களுடைய புத்திக் கூர்மையினால் நித்திய அநித்திய வஸ்து விவேகம் மிகச் சாமர்த்தியமாகச் செய்வார்கள். ஆனால் ஆசையை அடக்கும் வல்லமை அவர்களுக்கில்லை. மனவலிவும் தைரிய புத்தியும் படைத்தவர்க்கே அது சாத்தியம். மனம் ஆத்மாவில் நிலைபெறுகிறவளவு அது விஷயங்களில் போகாது. விஷய போகங்களை எண்ணலாகாது. ஈசுவர சிந்தனையே மெள்ள மெள்ள வலுக்கவேண்டும்.

மனம்தான் எல்லாம். அது தனது சுயேச்சையை இழக்குமானால் நீயும் உனது சுயேச்சையை இழப்பாய். மனம் சுயேச்சையோடு இருக்குமானால் நீயும் சுயேச்சையோடு இருப்பாய். மனதை, வண்ணானிடமிருந்து வந்த வெளுப்பு வஸ்திரத்தைப் போல, எந்தச் சாயத்திலும் தோய்த்தெடுக்கலாம். ஆங்கில பாஷையைப் படித்தால் உனது சம்பாஷணையில், நீ தடுக்க முயன்றாலும் ஆங்கிலச் சொற்கள் கலந்துவிடும். சம்ஸ்கிருதம் படித்த பண்டிதன் நிச்சயமாய் சுலோகங்களை மேற்கோளர்க எடுத்துக் காட்டுவான். கெட்டவர்களோடு சகவாசம் செய்தால் மனமும் வாக்கும் கெட்டுப்போம். பக்தர்களின் மத்தியிலிருந்தால் மனம் ஈசுவரனைப் பற்றிச் சிந்திப்பது நிச்சயம். சகவாசத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி மனதின் சுபாவம் மாறுபடும்.

சிறிது சிறிதாகப் பழகவேண்டும் என்று பகவான் சொல்லியிருப்பதால் சாதகன் ஒருவன் தீவிரமான முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. பல பிறவிகளுக்குப் பிறகு யோகானு பூதி வந்தமைந்தால் போதும் என்று எண்ணி முயற்சியைக் குறைக்கலாம். அத்தகைய சந்தேகம் வாராதிருத்தற்பொருட்டு அதன் உட்கருத்தை பகவான் மேலும் விளக்குகிறார் :

26. யதோ யதோ நிஸ்சரதி மநஸ்சஞ்சலமஸ்திரம்
ததஸ்ததோ நியம்யைததாத்மந்யேவ வஸம் நயேத்

யத: யத:-எங்கெங்கே, எதத் அஸ்திரம்-இந்த நிலையில்லாத, சஞ்சலம் மந: நிஸ்சரதி -சஞ்சலமான மனம் அலைகிறதோ, தத: தத: நியம்ய-அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி, ஆத்மநி ஏவ வஸம் நயேத்-ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க.

பொருள் : எங்கெங்கே மனம் சஞ்சலமாய் உறுதியின்றி உழலுகிறதோ, அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க.

ஓடும் தன்மையுடைய மனது ஒரு பொருளிடத்திருந்து விலக்கி யெடுக்கப்பட்டவுடன் மற்றொரு பொருளிடத்து அது பாய்கிறது. அப்படிக் பாய்தற்குத் தக்க காரணத்தையும் அந்த மனதே கண்டுபிடிக்கிறது. அரசாங்கம் உண்டுபண்ணும் சட்டத்துக்கு உட்பட்டவர்கள் போன்று பாசாங்கு செய்துகொண்டே தங்கள் சுயநலத்துக்காக அதை மீறி நடக்கும் குணக்கேடர் பலர் உளர். அவர்கள் செய்யும் ஒவ்வொரு புதிய அடாத செயலையும் சட்டத்துக்கு உட்படுத்தப் புதிய சட்டங்கள் அமைப்பது அவசியமாகிறது. விஷயங்களில் செல்லும் மனது செய்கிற தொழிலும் அத்தகையது. அப்போதைக்கப்போது அதற்கு விவேகத்தை ஊட்டுதல் அவசியம். இச்செயலைத்தான் சிறிது சிறிதாக வசப்படுவது என்று பகவான் பகர்கிறார். ஆத்மாவில் ஊன்றி மனது உறுதிபெறும் வரையில் அதனோடு ஓயாது போராடியாக வேண்டும்.

இச்சையானது கடுகளவு இருந்தாலும் ஈசுவரனைக் காணமுடியாது. ஆதலால் உன்னிடத்துள்ள குற்றமற்ற சிறிய இச்சைகளைத் திருப்தி செய்துகொண்டு, விஷயாதிகளிலுள்ள கொடிய பெரிய இச்சைகளை விவேகத்தாலும் விசாரத்தாலும் ஒழித்துவிடு.

ஆசைகளை அடக்கியபின் ஆவதென்ன?

27. ப்ரஸாந்தமநஸம் ஹ்யேநம் யோகிநம் ஸுகமுத்தமம்
உபைதி ஸாந்தரஜஸம் ப்ரஹ்மபூதமகல்மஷம்

ஹி ப்ரஸாந்தமநஸம்-ஏனெனில் மனம் சாந்தமாக, அகல்மஷம் ஸாந்தரஜஸம்-மாசு நீங்கி, ரஜோ குணம் ஆறி, ப்ரஹ்மபூதம்-பிரம்மமேயாகிய, ஏநம் யோகிநம்-இந்த யோகிக்கு, உத்தமம் ஸுகம் உபைதி-மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது.

பொருள் : மனம் சாந்தமாய், ரஜோ குணம் ஆறி, மாசு நீங்கி, பிரம்மமேயாகிய இந்த யோகிக்கு மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது.

துன்பத்துக்கு ஏதுவான பற்றுதல்களை ரஜோகுணம் உண்டு பண்ணுகிறது. அதன் வேகம் தணியும்பொழுது மனதில் பிரசாந்தம்-இனிமையோடு கூடிய அமைதி-தானாக வந்தமைகிறது. அப்பொழுது யோகி ஜீவன் முக்தனாகிறான். எல்லாம் பிரம்மம் என்று அறிகிறவன் தானே பிரம்மமாகிறான். தானே பிரம்மமானவனுக்கு இருள்சேர் இருவினையும் சேர்வதில்லை. வினையே பாபம் எனப்படுகிறது. தர்மம் அதர்மமாகிய கர்மத்தில் கட்டுப்படாதவனுக்குப் பாபமில்லை. பின்பு சித் சுகமே யாண்டும் அவனை அடுத்திருக்கும்.

தனது வேலைக்காரனது வீட்டுக்கு அதிதியாகப் போவதற்கு முன்னால், அவ்வேலைக்காரன் தன்னைத் தகுந்த மரியாதையுடன் வரவேற்று உபசரிக்க வேண்டியதற்காக அரசன் ஒருவன் தன்னுடைய பண்டகசாலையிலிருந்தே வேண்டிய ஆசனங்கள், ஆபரணங்கள், ஆகாராதிகள் இவைகளை அவ்வேலைக்காரனுக்கு அனுப்புகிறான். அதுபோல ஈசுவரன் பக்தனிடம் செல்லும் முன்னால் ப்ரேமை, பக்தி, சிரத்தை ஆகிய இவைகளை அந்த பக்தனுடைய ஆர்வமுற்ற ஹிருதயத்தில் புகும்படி அனுப்பியருள்கிறான்.

28. யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ விகதகல்மஷ​:
ஸுகேந ப்ரஹ்மஸம்ஸ்பர்ஸமத்யந்தம் ஸுகமஸ்நுதே

விகதகல்மஷ​:-குற்றங்களைப் போக்கி, ஏவம் ஸதா ஆத்மாநம் யுஞ்ஜந்-இங்ஙனம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின், ப்ரஹ்ம ஸம்ஸ்பர்ஸம்-(அந்த யோகி) பிரம்மத்தைத் தொடுவதாகிய, அத்யந்தம் ஸுகம்-மிக உயர்ந்த இன்பத்தை, ஸுகேந ஸுகம் அஸ்நுதே-எளிதில் துய்க்கிறான்.

பொருள் : குற்றங்களைப் போக்கி இங்ஙனம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின், அந்த யோகி பிரம்மத்தைத் தொடுவதாகிய மிக உயர்ந்த இன்பத்தை எளிதில் துய்க்கிறான்.

பிரம்ம ஸம்ஸ்பர்சம், பிரம்மத்தைத் தொட்டுணர்வதால் வரும் பேரானந்தம் என்பது மூலம். ஸ்பர்சமணி என்று ஒரு கல் இருப்பதாகவும், அதைக்கொண்டு எதைத் தொட்டாலும் அது பொன்னாய்விடும் என்றும் ஓர் ஐதிகம் உண்டு. பொன் ஆவது என்பதன் பொருள் கீழானது மிக மேலானதாகும் என்பதாம். பிரம்மம் தான் அந்த ஸ்பர்சமணி. அது எளிதில் அகப்படுவது அன்று. ஆயினும் அதனோடு இணக்கம் வைத்துக்கொள்பவர்களெல்லாம் அதன் சொரூபத்தை அடையப்பெறுகின்றனர். அதன் அலகிலா ஆனந்தமும் அவர்களுக்குரியதாகிறது.

ஜலத்தில் அமிழ்த்தி வைத்த பாத்திரத்தின் உள்ளேயும் வெளியிலும் ஜலம் நிரம்பியிருக்கும். அதுபோல ஈசுவரனிடம் ஆழ்ந்துள்ள ஆத்மாவானது உள்ளும் புறமும் ஸர்வவியாபகமான சைதன்யத்தைத்தான் காணும்.

தன்னகத்து ஆத்ம சொரூபத்தை அறிந்து அனுபவித்தவனுக்கு உலகக் காட்சியில் ஏதேனும் மாறுதல் ஏற்படுகிறதா? அதற்கு விடை வருகிறது :

29. ஸர்வபூதஸ்தமாத்மாநம் ஸர்வபூதாநி சாத்மநி
ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ஸந​:

யோகயுக்தாத்மா-யோகத்தில் கலந்தவன், ஸர்வத்ர ஸமதர்ஸந​:-எங்கும் சமப் பார்வையுடையவனாய், ஸர்வபூதாநி ஆத்மாநம்-எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், ஆத்மநி ச ஸர்வபூதாநி-தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும், ஈக்ஷதே-காணுகிறான்.

பொருள் : யோகத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும் காணுகிறான்.

யோகத்தில் முதிர்ச்சியடைந்துவருபவனுக்கு இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்ற வேற்றுமை யெண்ணம் போய்விடுகிறது. சிருஷ்டி கர்த்தாவாகிய பிரம்மா முதல் சிருஷ்டிப்பொருள்களில் மிகச் சிறியதாகிய புல் பரியந்தம் எல்லாவற்றையும் சிறந்தபான்மையுடன் கருதுதல் அவனுக்கு இயல்பாகின்றது. பிறகு அவன் தன்னுயிர் போன்று மன்னுயிரையும், மன்னுயிர்போன்று தன்னுயிரையும் பாராட்டுபவன் ஆகிறான். அதற்குமேல் தன் உடல் முழுவதையும் தன் சொரூபமாகக் கருதுவது போன்று, பிரம்மா முதல் புல் வரையில் எல்லா உயிர்களையும் தன் சொரூபமாகவும், தன்னை எல்லா உயிர்களின் சொரூபமாகவும் உணரும் தன்மை அவனுக்கு வந்தமைகிறது.

நான் தனிப்பட்ட ஜீவன் என்று கூறுவது கங்கைப் பிரவாகத்துக்குள் ஒரு சிறு பாகத்தை அணையிட்டுக் கட்டி அவ்வணைக்குள்ளிருக்கும் நீரைத் தன்னுடய கங்கை என்று கூறுவதற்கொப்பாகும்.

ஜீவர்கள் அனைவரும் ஒன்றுபட்டவர்கள் என்றால் இனி அவர்களுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்வு யாது? விடை வருகிறது :

30. யோ மாம் பஸ்யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஸ்யதி
தஸ்யாஹம் ந ப்ரணஸ்யாமி ஸ ச மே ந ப்ரணஸ்யதி

ய: ஸர்வத்ர மாம் பஸ்யதி-எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ, ஸர்வம் ச மயி பஸ்யதி-எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ, தஸ்ய அஹம் ந ப்ரணஸ்யாமி-அவனுக்கு நான் காணப் படாமல் போவதில்லை, ஸ ச மே ந ப்ரணஸ்யதி-எனக்கும் அவன் காணப் படாமல் போவதில்லை.

பொருள் : எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ, எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ, அவனுக்கு நான் அழியமாட்டேன்; எனக்கவன் அழியமாட்டான்.

உயிர்கள் அனைத்துக்குமிடையில் ஒற்றுமை கண்டான பிறகு அவைகள் எப்பொருளால் ஆக்கப்பெற்றவை என்ற மெய் அறிவு வருகிறது. பொன் ஆபரணங்கள் எல்லாம் பொன்னால் ஆக்கப்பட்டவை போன்று உயிர்கள் அனைத்தும் பரமாத்மாவினிடத்திலிருந்து வந்தவை என்ற ஞானம் உதிக்கிறது. நகை பொன் மயமாயிருப்பது போன்று பரமாத்மாவை அறிபவன் தானே பரமாத்மாவின் சொரூபமாயிருக்கிறான். அவன் எந்த இடத்தில் இருப்பினும், எத்தகைய மனநிலையை யுடையவனாயிருப்பினும், காலவேறுபாடு எதுவாயினும், பரமாத்மாவைப்பற்றிய ஞானம் அவனை விட்டகலுவதில்லை.

ஒரே வஸ்துவான சர்க்கரையினால் பக்ஷி போலவும், மிருகம் போலவும் வேறு வேறு உருவங்களைக்கொண்ட மிட்டாய் செய்யக்கூடும். அதுபோல ஆனந்த சொரூபியாகிய ஒரே கடவுள் பலவித நாம ரூபங்களால் பலவித கால தேசங்களில் ஆராதிக்கப்படுகிறான்.

ஞானம் தடைப்படுவதில்லை யாதலால் பரமாத்மாவுக்கும் யோகிக்கும் உள்ள தொடர்வு தெளிவுறுத்தப்படுகிறது.

31. ஸர்வபூதஸ்திதம் யோ மாம் பஜத்யேகத்வமாஸ்தித​:
ஸர்வதா வர்தமாநோऽபி ஸ யோகீ மயி வர்ததே

ய: ஏகத்வம் ஆஸ்தித-எவன் ஒருமையில் நிலைகொண்டவனாக, ஸர்வபூதஸ்திதம்-எல்லா உயிர்களிடத்திலுமுள்ள, மாம் பஜதி-என்னைத் தொழுவோன், ஸ யோகீ:-அந்த யோகி
ஸர்வதா வர்தமாந அபி-யாங்கணும் சென்றபோதிலும், மயி வர்ததே-என்னுள்ளேயே செயல் பட்டுக் கொண்டிருக்கிறான்.

பொருள் : ஒருமையில் நிலைகொண்டவனாய் எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னைத் தொழுவோன், யாங்கணும் சென்றபோதிலும், அந்த யோகி என்னுள்ளேயே இயலுகிறான்.

சிறைச்சாலையிலிருந்து விடுபட்ட ஒருவன் ஓர் அறைக்குள்ளே தன்னை மூடிவைத்துக்கொண்டாலும், கை கால்களைத் தளைத்துக் கொண்டாலும் தான் இனி பந்தப்பட்டவன் அல்லன் என்று ஐயம் திரிபு அற உணர்கிறான். பிரம்மம் ஒன்றே இத்தனைக்கும் மூலப்பொருள் என்று அறிந்தவன் பிரம்மத்தையே யாண்டும் காண்கிறான். பிரம்ம பாவனையில் அவன் நிலைத்திருப்பதால் அவன் கொள்ளுகிற இணக்கமெல்லாம் இறை வணக்கமாகிறது. ஸர்வதா என்பதன் பொருள் தியானவஸ்தை, வியவகாரம், விச்ராந்தி ஆகிய எல்லா வேளைகளிலும் நிலைகளிலும் என்பதாகிறது. ஸகஜ நிஷ்டை என்பது இதுவே. நீரில் இருப்பவன் நனைவதும், நெருப்பின் அருகில் இருப்பவன் வெப்பம் பெறுவதும் இயல்பு. பிரம்ம சன்னதியில் இருப்பவன் தானே பிரம்ம சொரூபம் ஆகிறான். ஜீவன் முக்தன் நிலை இதுவே.

வாஸ்தவமான ஞானம் வாய்ந்தவன் ஈசுவரன் வெகு தூரத்திலிருப்பதாகக் காண்பதில்லை. அவன் என்று எட்ட இருப்பது போல் அல்லாது இது என்று இங்கே அவனுடைய உள்ளத்திலேயே இருப்பதாக அவன் உணர்கிறான். ஈசுவரன் எல்லாரிடத்திலும் இருக்கிறான். ஆகவே தேடுபவர்களுடைய காட்சிக்கு அவர்களிடமே அவ் ஈசுவரன் தென்படுகிறான்.

அந்த யோகியிடத்து மேலும் அமையும் பெருமையாவது :

32. ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பஸ்யதி யோऽர்ஜுந
ஸுகம் வா யதி வா து​:கம் ஸ யோகீ பரமோ மத​:

அர்ஜுந ய:-அர்ஜுனா! எந்த யோகி, யதி ஸுகம் வா து​:கம் வா-இன்பமாயினும், துன்பமாயினும், ஸர்வத்ர ஆத்ம ஒளபம்யேந-எல்லாவற்றிலும்/எல்லாவற்றையும் தன்னைப் போலவே, ஸமம் பஸ்யதி-சமமாக பார்க்கிறானோ, ஸ: பரம யோகீ மத​:-அவன் பரமயோகியாகக் கருதப்படுவான்.

பொருள் : இன்பமாயினும், துன்பமாயினும் எதிலும் ஆத்ம சமத்துவம் பற்றி சமப் பார்வை செலுத்துவானாயின், அவன் பரமயோகியாகக் கருதப்படுவான்.

தன் உடலில் உள்ள உறுப்புகளுக்கிடையில் மனிதன் உயர்வு தாழ்வு பாராட்டுவதில்லை. அவயவத்துக்கு உண்டாகும் இன்பமும் துன்பமும் தன்னுடையது. ஏனென்றால் அவயவங்கள் வேறு, தான் வேறு அல்ல. தானே அவயவங்கள் அவயவங்களே தான். இந்த ஞானம் சாதாரண ஜீவனுக்கு உறுதியாயிருப்பது போன்று சிறந்த யோகிக்குத் தானே உலகம், உலகமே தான் என்ற அனுபவம் அசையாதது. தானும் உலகும் பரம்பொருளுக்கு அவயவங்கள் போன்றவை. தனக்குத் துன்பம் வாராது தடுப்பது போன்று உலகுக்குத் தன்னால் துன்பம் வாராது அவன் தடுக்கிறான். தனது இன்பத்தை வளர்ப்பது போன்று உலகுக்கு இன்பத்தை அவன் நல்குகிறான். இத்தகைய ஐக்கிய உணர்வால் அவன் பரமயோகி யாகிறான்.

ஒரு கிராமத்தில் ஒரு மடம் இருந்தது. அந்த மடத்திலிருந்த சந்யாஸிகள் தினந்தோறும் பிக்ஷõ பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வெளியே பிøக்ஷக்காகப் போவதுண்டு. ஒருநாள் ஒரு சந்யாஸி அப்படிப் போகும்போது ஏழைக் குடியானவன் ஒருவனை ஒரு மிராசுதாரன் கடுமையாக அடிப்பதைக் கண்டார். தயாளுவாகிய அந்தச் சாது, குடியானவனை அடிப்பதை நிறுத்த வேண்டுமென்று மிராசுதாரனைக் கேட்டுக்கொண்டார். கோபத்தால் தன்னை மறந்த மிராசுதாரன் உடனே, சாதுவின் மேல் பாய்ந்து அவரையும் அடி அடியென்று அடித்தான். அதனால் அவர் பிரக்ஞையற்றுத் தரையில் விழுந்தார். அதைக் கேள்வியுற்ற மற்ற சந்யாஸிகள் உடனே அவர் விழுந்து கிடக்குமிடத்துக்கு ஓடிவந்து, அவரை மடத்துக்குக் கொண்டுபோயினர். என்றாலும் அவருக்கு நெடுநேரம் வரையில் பிரக்ஞை வரவில்லை. ஆதலால் மற்றைய சாதுக்கள் அவருக்குக் காற்று வரும்படி விசிறி, முகத்தைக் குளிர்ந்த ஜலத்தால் துடைத்து, வாயில் பாலை வார்த்து, பிரக்ஞை வருவதற்கான சைத்யோபசாரங்களைச் செய்துகொண்டிருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக அவருக்குத் தம் நினைவு வரத் தலைப்பட்டது. அவர் கண்ணைத் திறந்து மற்றைய சந்யாஸிகளைப் பார்த்ததும், அவர்களில் ஒருவர் சுவாமீ, இப்போது தங்களுக்குப் பால் வார்த்துக்கொண்டிருப்பது யார் என்று தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு அந்த சாது, எவன் என்னை அடித்தானோ அவனே இப்போது பால் கொடுத்துக் கொண்டிருக்கிறான் என்று பதில் சொன்னார்.

ஈசுவரனே அடைந்து நன்மை தீமை, பாப புண்ணியம் இவைகளைக் கடந்து நின்றாலொழிய இப்படிப்பட்ட ஐக்கிய ஆத்மசொரூபம் ஸித்தியாகாது.

யோகம் இங்ஙனம் விளக்கப்படும்போது அர்ஜுனனுக்கு ஓர் ஐயப்பாடு உண்டாயிற்று. அதாவது :

அர்ஜுந உவாச

33. யோऽயம் யோகஸ்த்வயா ப்ரோக்த​: ஸாம்யேந மதுஸூதந
ஏதஸ்யாஹம் ந பஸ்யாமி சஞ்சலத்வாத்ஸ்திதிம் ஸ்திராம்

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், மதுஸூதந!-மதுசூதனா, அயம் யோக ஸாம்யேந-இந்த யோகம் சம பாவனையோடு கூடியதென்று, ய: த்வயா ப்ரோக்த​:-எது உங்களால் சொல்லப் பட்டதோ, ஏதஸ்ய ஸ்திராம் ஸ்திதிம்-அந்த யோகத்தினுடைய உறுதியான இருப்பை, சஞ்சலத்வாத் அஹம் ந பஸ்யாமி-எனது சஞ்சலத் தன்மையால் எனக்குத் தோன்றவில்லை.

பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, இங்ஙனம் நீ சமத்துவத்தால் ஏற்படுவதாகச் சொல்லிய யோகம், ஸ்திரமான நிலையுடையதாக எனக்குத் தோன்றவில்லை, எனது சஞ்சலத் தன்மையால்.

சமமாகப் பார்த்தல் என்பது வி÷க்ஷபங்கள் அற்று மனம் ஒடுங்கியிருத்தலாம். விதவிதமான எண்ணங்கள் வி÷க்ஷபங்கள் என்று இயம்பப்படுகின்றன. அலையில்லாத கடல்போன்ற தேங்கிய மனநிலை வி÷க்ஷபங்கள் அற்ற மனநிலையாகிறது.

34. சஞ்சலம் ஹி மந​: க்ருஷ்ண ப்ரமாதி பலவத்த்ருடம்
தஸ்யாஹம் நிக்ரஹம் மந்யே வாயோரிவ ஸுதுஷ்கரம்

ஹி க்ருஷ்ண-ஏனெனில் கண்ணா! மந​: சஞ்சலம்-மனம் சஞ்சலமுடையது, ப்ரமாதி-தவறும் இயல்பினது, பலவத் த்ருடம்-வலியது; உரனுடையது, தஸ்ய நிக்ரஹம் வாயு: இவ-அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல், ஸுதுஷ்கரம் அஹம் மந்யே-மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் நினைக்கிறேன்.

பொருள் : கண்ணா, மனம் சஞ்சலமுடையது; தவறும் இயல்பினது, வலியது; உரனுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன்.

இக்கேள்வியில் மனதின் இயல்பு முழுதும் அடங்கி யிருக்கிறது. ஓயாது அலைந்து திரிவதால் மனது சஞ்சல முடையது. மான் போன்று அது அலைகிறது எனலாம். மான் யாருக்கும் துன்பம் தருவதில்லை. மனது அத்தகையதன்று. புலிபோன்று அது உயிர்களைத் துன்புறுத்திக்கொண்டே இருக்கிறது. அவைகள் அத்துஷ்ட ஜந்துவால் கலக்கமடைகின்றன. மனதும் அப்படி மனிதனைக் கலக்கிக்கொண்டிருக்கிறது. ஆதலால் அது பிரமாதி எனப்படுகிறது. துன்புறுத்தும் கொசு ஒன்றுக்குப் பலமில்லை. ஆனால் புலிக்குப் பலமுண்டு. மனதும் அப்படிப் பலம் மிக உடையது. எனவே அது பலவத் எனப்படுகிறது. புலியைப் பட்டினி போட்டு அதன் பலத்தைக் குறைத்துவிடலாம். இரத்தத்தை உறிஞ்சும் அட்டை ஒன்றைப் பட்டினி போட்டால் அதன் தோல் அதிக வலியுடையதாகிறது. அதைக் கிள்ளித் துண்டிக்க முடியாது. மனதும் அத்தகைய அட்டை போன்றது. அது விரும்புவதைக் கொடாவிட்டால் இன்னும் பன்மடங்கு அது திடமுடையதாகிறது. ஆகையால் அது த்ருடம் என்று இயம்பப்படுகிறது. காற்றைப் போன்று அது கட்டில் அடங்காதது என்று இயம்பப்படுகிறது. நவீன மனிதன் ஒரு விதத்தில் காற்றைப் பிடித்து அடைத்துவைக்கக் கற்றிருக்கிறான். ஆனால் மனதைக் கட்டுவது மாந்தருக்குச் சாத்தியமன்று.

இனி, இத்தகைய மனதைக் கிருஷ்ணன் தான் ஒழுங்குபடுத்த வேண்டும். ஏனென்றால் அவன் பெயரே அவனது வல்லமையைக் குறிக்கிறது. கிருஷ் என்பதற்குச் சுரண்டுதல் என்று பொருள். அதைப் பகுதியாகக் கொண்டு பிறந்தது கிருஷ்ணன் என்ற சொல். கிருஷ்ணன் பக்தர்களுடைய பாபத்தைச் சுரண்டிப் போக்க வல்லவன்.

இதற்குப் பகவானது விடை வருகிறது :

ஸ்ரீ பகவாநுவாச

35. அஸம்ஸயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்
அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், மஹாபாஹோ-பெருந்தோளாய், அஸம்ஸயம் மந: சலம்-ஐயமின்றி மனம் சலனமுடையதுதான், துர்நிக்ரஹம் து-கட்டுதற்கரியது தான், கௌந்தேய! அப்யாஸேந வைராக்யேண ச-குந்தியின் மகனே! பழக்கத்தாலும், வைராக்கியத்தாலும், க்ருஹ்யதே-வசப் படுத்தப் படுகிறது.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளாய், மனம் கட்டுதற்கரியதுதான். சலனமுடையதுதான்; ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே, அதைப் பழக்கத்தாலும், விருப்பமின்மையாலும் கட்டி விடலாம்.

அப்பியாசம் என்பது பழக்கம். பழக்கத்தால் தன்னை எப்படி வேண்டுமானாலும் திருத்தியமைத்துக்கொள்ளலாம். அவரவர் பெற்றுள்ள பான்மை பழக்கத்தைப் பொறுத்தது. இடையறாப் பழக்கத்தால் எப்பான்மையை வேண்டுமானாலும் பெறலாம். நாடிய லட்சியத்தினிடத்து அல்லது வழிபடு தெய்வத்தினிடத்து மனதை அடிக்கடி திருப்புவது அப்பியாசமாகும். ஈசுவர தியானத்தை முறையாகச் செய்வது அப்பியாசம். எண்ணம் இறைவனைப் பற்றிய தாகுமளவு மனது வெளி விஷயங்களில் செல்லாது ஒருமுகப்படும். வைராக்கியம் என்பது ராகமின்மை. புலன்களில் பற்றில்லாதிருப்பது வைராக்கியம். மனம் அடங்காது ஓடுதற்குக் காரணம் யாது என்று விசாரித்துப் பார்த்தால் அது எப்பொழுதாவது எதனிடத்தாவது பற்று வைத்திருந்தால் அப்பொருளையே அது நாடியலைகிறது என்பது விளங்கும். இந்திரிய விஷயங்களிலுள்ள கேடுகளை மனதுக்கு ஞாபகமூட்டி அதை அவைகளிடத்திருந்து மீட்டெடுப்பது வைராக்கியமாம்.

நீந்தக் கற்றுக்கொள்ள விரும்புகிறவன் அதைத் தொடர்ந்து அப்பியசிக்கவேண்டும். ஒரே ஒரு நாள் அப்பியசித்தவுடன் கடலில் நீந்துவதற்கு ஒருவனும் துணியமாட்டான். அது போல பிரம்மமாகிய கடலில் நீந்தப் பிரியப்பட்டால் முதலில் அநேகம் தரம் பயன்படாத பிரயத்தனங்கள் செய்து தீரவேண்டும். அப்போதுதான் அங்கு நீந்தக் கூடிய சக்தி உனக்கு உண்டாகும். விஷமுள்ள ஒருவகைச் சிலந்திப் பூச்சியிருக்கிறது. அதனால் உண்டாகும் கடி எந்த மருந்தினாலும் எளிதில் குணமடைவதில்லை. மஞ்சள் வேரினால் கடியின் மீது குழையடித்த பிறகுதான் எந்த மருந்தும் குணங்கொடுக்க ஆரம்பிக்கும். அதுபோலக் காமமும் காசு ஆசையுமாகிய சிலந்திப்பூச்சி ஒருவனைக் கடித்துவிட்டால் வைராக்கியமென்னும் மனோசக்தி அவனிடம் முதன் முதலில் உதிக்க வேண்டும். அப்பால்தான் அவன் ஆத்ம சாதனத்துக்கு அருகனாவான்.

யோகத்தை அடைபவர் யார், அடையாதவர் யார் எனின்:

36. அஸம்யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி​:
வஸ்யாத்மநா து யததா ஸக்யோऽவாப்துமுபாயத​:

அஸம்யத ஆத்மநா-தன்னைக் கட்டாதவன், யோக: துஷ்ப்ராப-யோக மெய்துதல் அரிது, து வஸ்ய ஆத்மநா யததா உபாயத​:- தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும், அவாப்தும் ஸக்ய:-யோகத்தை அடைவதும் சாத்தியமானது, இதி மே மதி​:-என்று நான் கருதுகிறேன்.

பொருள் : தன்னைக் கட்டாதவன் யோக மெய்துதல் அரிதென்று நான் கருதுகிறேன். தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும் அதை எய்த வல்லான்.

சித்த விருத்திகளைத் தடுத்தவன் மனதை அடக்கியவன் ஆகிறான். உபாயத்தால் முயலுதல் என்பது அப்பியாசத்தையும் வைராக்கியத்தையும் முறையாக அனுஷ்டித்தல் என்பதாம். என் குழந்தைகளே, நான் அக்காலங்களில் தியானம் செய்வதற்கு முன்னால் என் மனதிலுள்ள கெட்ட எண்ணங்கள், ஆசைகள் முதலான சகல கல்மஷங்களையும் அலம்பிச் சுத்தப்படுத்தி விட்டதாகப் பாவனை செய்துகொண்டு அதன் பிறகு பகவானை அவ்விடத்தில் எழுந்தருளப் பண்ணுவேன். நீங்களும் அவ்வாறு செய்யுங்கள் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் தமது சாதன நாட்களைப்பற்றி சிஷ்யர்களிடம் கூறுவார்.

யோகத்தைப் பூர்த்திபண்ணாதவனைப் பற்றி இப்பொழுது அர்ஜுனனுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. அதாவது :

அர்ஜுந உவாச

37. அயதி​: ஸ்ரத்தயோபேதோ யோகாச்சலிதமாநஸ​:
அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், ஸ்ரத்தயா உபேத:-யோகத்தில் சிரத்தை உள்ளவனாக இருந்தும், அயதி​: யோகாத் சலிதமாநஸ​:- தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவி, யவன் யோகஸம்ஸித்திம் அப்ராப்ய-யோகத்தில் தோற்றுப் போய், காம் கதிம் கச்சதி க்ருஷ்ண!-என்ன கதியடைகிறான் கண்ணா!

பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: நம்பிக்கையுடையோ னெனினும், தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவியவன், யோகத்தில் தோற்றுப் போய், அப்பால் என்ன கதியடைகிறான், கண்ணா?

யோகம் நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது. ஆனால் மனதில் உறுதியில்லை. அதனால் பூரணத்தை அவன் அடையவில்லை. அப்படி யோகத்தில் தோல்வியடைந்து உயிர் துறப்பவன் கதி என்னவாகும்?

38. கச்சிந்நோபயவிப்ரஷ்டஸ்சிந்நாப்ரமிவ நஸ்யதி
அப்ரதிஷ்டோ மஹாபாஹோ விமூடோ ப்ரஹ்மண​: பதி

மஹாபாஹோ ப்ரஹ்மண​:-பெருந்தோளாய்! பிரம்மத்தை அடைகின்ற, பதி விமூடோ-மார்க்கத்தில் வழி தெரியாமல் மயங்கி, அப்ரதிஷ்ட:-உறுதியற்றவனாக, உபய விப்ரஷ்ட-இரண்டுங் கெட்டவனாக, சிந்ந அப்ரம் இவ-உடைந்த மேகம்போல், கச்சித் ந நஸ்யதி-அழிந்து போக மாட்டானா?

பொருள் : ஒருவேளை அவன் இரண்டுங் கெட்டவனாய், உடைந்த மேகம்போல் அழிகிறானோ? பெருந்தோளாய், உறுதியற்றவனாய், பிரம்ம நெறியிலே குழப்பமெய்திய மூடன் யாதாகிறான்?

சிதறடைந்த மேகம் மண்ணுலகில் மழையாய்ப் பெய்வதில்லை; விண்ணுலகில் உருத்தெரியாது மறைந்து போகிறது. யோகப்பிரஷ்டன் இகம் பரம் ஆகிய இரண்டினின்றும் வழுவியவன் ஆகிறான். கர்மபலத்தில் பற்று வைக்காமையால் சுகபோகத்தைப் பூவுலகிலும் வானுலகிலும் அவன் அனுபவிப்பதில்லை. பிரம்ம மார்க்கத்தில் மனத்தெளிவு அடையாமையால் அவன் பிரம்மஞானியாகவில்லை. ஆக, புத்தி, முக்தி (போகம், யோகம்) ஆகிய இரண்டையும் இழந்தவன் ஆகிறான். இதைவிடப் பரிதாபகரமான நிலை மனிதனுக்கு யாது உளது?

39. ஏதந்மே ஸம்ஸயம் க்ருஷ்ண சேத்துமர்ஹஸ்யஸேஷத​:
த்வதந்ய​: ஸம்ஸயஸ்யாஸ்ய சேத்தா ந ஹ்யுபபத்யதே

க்ருஷ்ண! மே ஏதத் ஸம்ஸயம்-கண்ணா! எனக்குள்ளே இந்த ஐயத்தை, அஸேஷத​: சேத்தும் அர்ஹஸி-மீதமின்றி போக்க (நீயே) தகுதியானவன், ஹி அஸ்ய ஸம்ஸயஸ்ய சேத்தா-ஏனெனில் இந்த சந்தேகத்தை போக்குபவர், த்வத் அந்ய​: உபபத்யதே-நின்னையன்றி வேறெவருமிலர்.

பொருள் : கண்ணா, எனக்குள்ளே இந்த ஐயத்தை நீ அறுத்து விடுக. நின்னையன்றி இந்த ஐயத்தை யறுப்போர் வேறெவருமிலர்.

தேவர்கள், ரிஷிகள் ஆகிய மேலோர் யாரும் இச் சந்தேகத்தை நீக்குதலில் உமக்கு நிகராகமாட்டார்கள். ஏனென்றால் நீர் சர்வக்ஞனான ஈசுவரன்.

யாருக்கு யார் குரு? ஈசுவரன் ஒருவனே ஜகத்குருவும் வழிகாட்டியுமாவான்.

அவதார புருஷரால் ஆகாத காரியம் ஒன்றுமேயில்லை. ஜீவனையும் ஆத்மாவையும் பற்றிய சூக்ஷ்மமான பிரச்னைகளை யெல்லாம் அவர் வெகு சுலபமாகத் தீர்த்துவிடுகிறார். அவருடைய போதனைகளை ஒரு சிறு குழந்தைகூடத் தெரிந்துகொள்ளும், அவர் கற்பகோடி காலங்களாகச் சேர்ந்துள்ள அக்ஞானத்தை அகற்றும் ஒளியையுடைய திவ்விய ஞானி சூரியன் ஆவார்.

ஸ்ரீபகவாநுவாச

40. பார்த நைவேஹ நாமுத்ர விநாஸஸ்தஸ்ய வித்யதே
ந ஹி கல்யாணக்ருத்கஸ்சித்துர்கதிம் தாத கச்சதி

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், பார்த-பார்த்தா, தஸ்ய இஹ விநாஸ ந வித்ய,தே-அவனுக்கு இவ்வுலகிலும் அழிவில்லை, அமுத்ர ஏவ ந-மேலுலகத்திலும் இல்லை, தாத-பிரியமானவனே (மகனே!), ஹி கல்யாணக்ருத்-ஏனெனில் ஆன்மீக மேம்பாட்டிற்காக,
கஸ்சித் துர்கதிம் ந கச்சதி-எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பார்த்தா, அவனுக்கு இவ்வுலகிலும், மேலுலகத்திலும் அழிவில்லை; மகனே, நன்மை செய்வோன் எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.

தாத என்றால் தகப்பன். தந்தையே பிள்ளையாகப் பரிணமிப்பதால் பிள்ளையை அப்பா என்று அழைப்பது வழக்கம். தகப்பனுக்குப் பிள்ளை போன்றவன் குருவுக்கு சிஷ்யன். ஆகையால் குரு சிஷ்யனை மைந்தா என்றோ அப்பா என்றோ அழைப்பது முறை. ஈண்டு பகவானது கிருபை சுரப்பதற்கு இச் சொல் சான்றாகிறது.

இவ்வுலகம் நலத்தை அடிப்படையாகக் கொண்டதா, அல்லது கேட்டை அடிப்படையாகக் கொண்டதா என்று யார் வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம். கடவுளே இவ்வுலகம் அனைத்தும் ஆனார். கடவுளே நலமுடையான், கேடு இலான். நலத்தினின்று வருவது நலம். இவ்வுலகில் நன்மை செய்வோன் எவனும் கேடு அடைவதே யில்லையென்பது பகவானுடைய உறுதிமொழி. பாண்டவர் உட்பட எல்லா பக்தர்களது வாழ்க்கையே இக்கோட்பாட்டுக்குச் சான்றாகும். யோகத்தில் வழுவிய ஒருவன் தான் அதுபரியந்தம் அடைந்த நிலையைவிடக் கீழான நிலைக்கு எவ்வுலகிலும் போவதில்லை. அது எப்படி யென்று பகவான் மேலும் விளக்குகிறார்.

ஒரு மனிதனுடைய எண்ணத்துக்கும் நோக்கத்துக்கும் தக்கபடி அவனுக்குச் சன்மானம் கிடைக்கிறது. ஈசுவரன் பக்தர்கள் விரும்புவனவற்றை யெல்லாம் கொடுக்கும் கற்பக விருக்ஷம் போன்றவன்.

41. ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஸாஸ்வதீ​: ஸமா​:
ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே யோகப்ரஷ்டோऽபிஜாயதே

யோகப்ரஷ்ட:-யோகத்தில் தவறியவன், புண்யக்ருதாம் லோகாந் ப்ராப்ய-புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி, ஸாஸ்வதீ​: ஸமா​: ஊஷித்வா-அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, ஸுசீநாம் ஸ்ரீமதாம் கேஹே-தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில்
அபிஜாயதே-பிறக்கிறான்.

பொருள் : யோகத்தில் தவறியவன், புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி, அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில் பிறக்கிறான்.

போகமும் யோகமும் ஒன்றோடொன்று பொருந்தாது. போகத்தில் ஆசை கொண்டவன் யோகத்திலிருந்து தவறியவன் ஆகிறான். தான் விரும்பின சுகபோகங்களை அவன் சுவர்க்கத்துக்குச் சென்று நெடுங்காலம் அனுபவிக்கிறான். இப்பூலோகத்தில் பிறக்கும்பொழுதும் ஆக்கம் நிறைந்த வாழ்க்கைக்கு ஏற்ற செல்வர்கள் வீட்டில் பிறக்கிறான். செல்வமுடையவர்களுள் தூய வாழ்க்கை வாழ்பவர் மிகச் சிலர். அத்தகைய நல்லொழுக்கமுடைய ஐசுவரியவான்கள் வீட்டிலேயே யோகப்ரஷ்டன் பிறக்கிறான். ஏனென்றால் யோகியின் இயல்பு எப்பொழுதும் தூயதானது. ஒவ்வொரு ஜீவனும் அதனதன் தன்மைக்கும் வினைக்கும் ஏற்ற இடத்தில் பிறப்பெடுப்பது இயல்பு.

மற்றொரு பாங்குடைய யோகப்ரஷ்டன் இருக்கிறான். இனி, அவன் வரலாறு விளக்கப்படுகிறது.

42. அதவா யோகிநாமேவ குலே பவதி தீமதாம்
ஏதத்தி துர்லபதரம் லோகே ஜந்ம யதீத்ருஸம்

அதவா தீமதாம் யோகிநாம்-அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின், குலே ஏவ பவதி-குலத்திலேயே பிறக்கிறான், ஈத்ருஸம் யத் எதத் ஜன்ம-இதுபோன்ற பிறவியெய்துதல்
ஹி லோகே துர்லபதரம்-ஐயமின்றி மிகவும் அரிது.

பொருள் : அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான். இவ்வுலகில் இதுபோன்ற பிறவியெய்துதல் மிகவும் அரிது.

முற்பிறப்பில் யோகம் நிறைவேறப்பெறாத ஒருவன் அதை நிறைவேற்றிக்கொள்ளுதற்காகப் பொருள் உடையார் வீட்டில் பிறப்பதைவிட அருள் உடையார் வீட்டில் பிறப்பது சாலச் சிறந்தது. அதற்குக் காரணம் மேலும் விளக்கப்படுகிறது.

43. தத்ர தம் புத்திஸம்யோகம் லபதே பௌர்வதேஹிகம்
யததே ச ததோ பூய​: ஸம்ஸித்தௌ குருநந்தந

தத்ர தம் பௌர்வதேஹிகம்-அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய, புத்திஸம்யோகம்-புத்தியைப் பெறுகிறான், குருநந்தந-குருநந்தனா, தத: பூய​: ஸம்ஸித்தௌ-அப்பால் அவன் மறுபடியும் வெற்றிக்கு, யததே-முயற்சி செய்கிறான்.

பொருள் : அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய புத்தியைப் பெறுகிறான். குருநந்தனா, அப்பால் அவன் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி செய்கிறான்.

பொருளானது மனிதனைப் போகத்தில் ஈடுபடுத்தி யோகத்தைத் தற்காலிகமாக மறைத்து வைத்துவிடுகிறது. ஆசைகள் நிறைவேறியபின் யோகத்தைப் பற்றிய ஞாபகம் வருகிறது. அதைவிட மேலானது பிறந்தது முதல் தனியாக யோகத்திலே முயலுதல். முற்பிறப்பில் செய்த சாதனங்கள் சம்ஸ்காரமாக மனதில் புதைந்து மறைந்து கிடக்கின்றன. யோகிகள் குலத்தில் பிறந்து அவர்கள் செய்யும் சாதனங்களைப் பார்க்கும்போது பால யோகிக்குத் தன் பூர்வ ஜன்ம சாதனங்கள், பழைய பாடம் ஞாபகத்துக்கு வருவது போன்று மனதில் உதிக்கும். இடம், பொருள், ஏவல் இவைகளின் சகாயத்தால் முற்பிறப்பில் செய்த சாதனங்களைவிட இன்னும் தீவிரமாக அவன் இப்பிறப்பில் செய்கிறான். மீன் நீரை நாடுவது போன்று அவன் முக்தியை நாடுவது இயல்பாகிறது.

சுவாமி விவேகானந்தரும் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரும் யோகாரூடர்கள். பிறவியிலிருந்தே பரிபூரணத் தன்மை அவர்களிடம் பொலிந்துகொண்டிருந்தது. அவர்களுடைய வாழ்க்கையே வேதாந்தத்துக்கு விளக்கமாகும். சுவாமி விவேகானந்தர் செல்வம் நிறைந்த நல்லோர்க்குப் பிள்ளையாகப் பிறந்து பூவுலக சம்பத்துக்களில் வாழ்ந்திருந்து யோகத்துக்கு வருகிறார். ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சரோ யோகியர் குலத்தில் பிறந்து மேலும் யோக சாதனத்தில் ஈடுபடுகிறார். கீதா சாஸ்திரப் பிரகாரம் இருவர் பிறப்புகளும் மேலானவை. ஆனால் சுவாமி விவேகானந்தர் பிறப்பைவிட ஸ்ரீ ராமகிருஷ்ணர் பிறப்பு பெறுவதற்கு அரிதாம்.

44. பூர்வாப்யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவஸோऽபி ஸ​:
ஜிஜ்ஞாஸுரபி யோகஸ்ய ஸப்தப்ரஹ்மாதிவர்ததே

ஸ: அவஸ:-அவன் தன் வசமின்றியும், தேந பூர்வாப்யாஸேந ஏவ ஹ்ரியதே-பண்டைப் பழக்கத்தால் இழுக்கப்படுகிறான், யோகஸ்ய ஜிஜ்ஞாஸு அபி-யோகத்தை அறிய வேண்டுமென்று விரும்பவன் கூட, ஸப்த ப்ரஹ்ம-ஒருவன் ஒலியுலகத்தைக் (வேதத்தையும்) கடந்து, அதிவர்ததே-செல்லுகிறான்.

பொருள் : பண்டைப் பழக்கத்தால் அவன் தன் வசமின்றியும் இழுக்கப்படுகிறான். யோகத்தை அறிய வேண்டுமென்ற விருப்பத்தாலேயே ஒருவன் ஒலியுலகத்தைக் கடந்து செல்லுகிறான். திரள் திரளாக ஜனங்கள் தேவாலயத்துக்குள் நுழையும் போது அக்கூட்டத்தில் கலந்துகொள்பவன் சுயப்பிரயத்தனமின்றி ஆலயத்துக்குள் இழுத்துச் செல்லப்படுவான். அங்ஙனம் முற்பிறப்பில் செய்த யோகாப்பியாசம் வலிவுடைய சம்ஸ்காரங்களாக மனதில் புதைத்திருந்து இப்பிறப்பில் யோகப்ரஷ்டனைப் பரிபூரண நிலையின்கண் இழுத்துச் செல்கிறது. புதிதாகச் செய்த அதர்மம் சிறிதுகாலத்துக்கு அவனது சாதனத்தைத் தடைப்படுத்தினும், அதர்மத்தின் வலிவு குறைந்தவுடன் யோக சாதன சம்ஸ்காரம் அவனைச் சமாதி நிலைக்குக் கொண்டு சேர்க்கும்.

இரண்டு போர்வீரர்கள் எதிரியின் கையில் அகப்பட்டுக் கொண்டார்கள். அவர்களில் ஒருவன் தன் தாய்நாட்டை மறந்து விட்டு அடிமையாய் எதிரிகளுக்குக் குற்றேவல் செய்வதிலேயே கண்ணுங் கருத்துமாயிருக்கிறான். மற்றவன் எதிரிகளை விட்டுத் தப்பித்துக்கொண்டு தன் தேசம் போவது எப்படி என்று எண்ணிப் பார்க்கிறான். அங்ஙனம் எண்ணுபவன் அடிமையைவிட மேலானவன். இனி முயற்சி பண்ணுபவன் அவனிலும் மேலானவன். வேதம் ஓதுபவர், வேதம் புகட்டுகிற கர்மகாண்டத்தில் ஈடுபடுபவர் முக்குணமயமான இயற்கைக்கு அடிமைகளாய் முடிவில்லாத பிறவிப் பிணியில் வருந்துபவர். அவர்களைவிட மேலோர் யோக ஜிக்ஞாசு அல்லது யோக ஆராய்ச்சி செய்பவர். ஏனென்றால் இவர்களுக்கு விரைவில் விமோசனம் கிடைக்கும். யோகத்தில் பன்முறை முயன்று தவறிப்போன யோகப்ரஷ்டர்கள் யோக ஜிக்ஞாசுகளிலும் மேலோர். ஏனென்றால் முயற்சியுடைய இவர்கள் இன்னும் விரைவில் யோகாரூடர்கள் அல்லது முக்தர்கள் நிலையை அடைவார்கள்.

கர்ம காண்டத்தில் உழல்பவனைவிட யோக சாதனம் செய்பவனது வாழ்க்கை எவ்விதத்தில் சிறந்தது? விடை வருகிறது :

45. ப்ரயத்நாத்யதமாநஸ்து யோகீ ஸம்ஸுத்தகில்பிஷ​:
அநேகஜந்மஸம்ஸித்தஸ்ததோ யாதி பராம் கதிம்

ஸம்ஸுத்த கில்பிஷ​:-பாவம் நீங்கியவனாய், து ப்ரயத்நாத் யதமாந-முழு முயற்சியுடன் பயிற்சி செய்யும், யோகீ அநேகஜந்ம ஸம்ஸித்த:-யோகி பல பிறவிகளின் வெற்றிப் பயனாகிய
தத: பராம் கதிம் யாதி-அக்கணமே பரகதியை அடைகிறான்.

பொருள் : பாவம் நீங்கியவனாய், ஊன்றி முயல்வானேயாயின், யோகி பல பிறவிகளின் வெற்றிப் பயனாகிய பரகதியை அப்போதடைகிறான்.

கல்வியும் செல்வமும் இரண்டொரு நாளில் சேகரிக்கப்படுபவைகளல்ல. அவைகளின் பொருட்டு இடையறாத முயற்சி எடுத்துக்கொள்ளவேண்டும். கல்வி கற்கும்பொழுதே ஒருவன் கற்றவனாகக் கருதப்படுகிறான். செல்வம் சேர்ந்துகொண்டிருக்கும்போதும் ஒருவன் தனவான் எனப்படுகிறான். யோகம் தருகிற மோக்ஷமோ ஒப்பற்றது; நித்தியமானது. இனி, அதன் பொருட்டு அநேக ஜன்மங்களில் முயலவேண்டும் என்றால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அங்ஙனம் முயலுகிற மனிதன் யோகி எனப்படுகிறான். இப்படி யோகி தன்னை நெடிது பண்படுத்தி முக்தியடைகிறான்.

புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டி நிற்கக் கற்றுக் கொள்ளுவதற்கு முன்னால், தட்டித் தள்ளாடிப் பல தடவை கீழே விழுகின்றது. அதுபோல சாதன மார்க்கத்தில் கடைசியாக ஜயம் பெறுவதற்கு முன்னால் அனேகம் தோல்விகள் நேரிடும்.

அப்படியானால் பெருநிலையடைதற்கு யோகத்தைப் புறக்கணித்துவிட்டு வேறு ஏதாவது உபாயத்தைக் கையாளலாகாதா? விடை வருகிறது :

46. தபஸ்விப்யோऽதிகோ யோகீ ஜ்ஞாநிப்யோऽபி மதோऽதிக​:
கர்மிப்யஸ்சாதிகோ யோகீ தஸ்மாத்யோகீ பவார்ஜுந

யோகீ தபஸ்விப்ய: அதிக​:- யோகி தவஞ் செய்வோரைக் காட்டிலும் சிறந்தோன், ஜ்ஞாநிப்ய: அபி அதிக​: மத:-ஞானிகளிலும் அவன் சிறந்தோனாக கருதப்படுகிறான், ச கர்மிப்ய: யோகீ அதிக​:-கர்மிகளிலும் அவன் சிறந்தோன், தஸ்மாத் யோகீ பவ அர்ஜுந!-ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக.

பொருள் : தவஞ் செய்வோரைக் காட்டிலும் யோகி சிறந்தோன்; ஞானிகளிலும் அவன் சிறந்தோனாகக் கருதப்படுகிறான்; கர்மிகளிலும் அவன் சிறந்தோன்; ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக.

வெறும் சாஸ்திர ஞானம் உடைத்திருப்பவனைவிட அதில் பகர்ந்துள்ளபடி யோகம் பயிலுவதனால் யோகி சிறந்தவனாகிறான். காமிய தபசு, காமிய கருமம் இவைகளை நெடுநாளாக வருந்திச் செய்து, இம்மையிலும் மறுமையிலும் மாந்தர் சுகபோகம் பெற முயலுகின்றார்கள். சாந்திராயணம் முதலிய தபசு புரிகின்றவர்களும், அக்னிஹோத்திரம் முதலிய கர்மம் செய்கிறவர்களும் அதற்குச் சான்றாவார்கள். அவர்கள் அப்படி வருந்தியடையும் சுவர்க்கப் பதவியும் பூலோகப் பதவியும் யோகப்ரஷ்டனுக்குத் தற்செயலாய் வந்தமைகின்றன. அதற்குக் காரணமுண்டு. நிராசையில் நிலைத்திருப்பவன் யோகி. ஆசையில்லாத மனதுக்குப் பேராற்றல் தானே உண்டாகிறது. பேராற்றல் படைத்துவரும் அவனுக்கு இன்னும் பரிபூரணம் அடையும்முன் ஆசை இடையில் தோன்றுமாகில் அவன் யோகப்ரஷ்டன் ஆகின்றான். சுத்தியடைந்த அவனது சித்தத்தில் உதிக்கும் இச்சை உடனே நிறைவேறப்பெறுகிறது. யோக சாதனத்தால் மனது எவ்வளவுக் கெவ்வளவு தூயதாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதில் உதிக்கும் ஆசையானது விரைவில் நிறைவேறுவதாகிறது. இது வாழ்க்கை சம்பந்தமான ஒரு பேருண்மையாகும். ஆகையால் தான் புண்ணிய கர்மம் செய்பவர்கள் அடையும் லோகமாகிய சுவர்க்கமும் பூலோகத்தில் பெருவாழ்வும் யோகிக்கு விளையாட்டாக வந்தமைகின்றன. இனி யோகாரூடனுக்கு ஒப்பற்ற பிரம்ம ஞானம் உண்டாகிறது. யோகப்ரஷ்டனுக்கோ இகபரமிரண்டிலும் பெரும் பதவியும் யோகமும் எளிதில் கிட்டுகின்றன.

ராஜகுமாரன் ஒருவன் அரசனாகாவிட்டாலும் மற்ற உத்தி யோகத்தை நாடுபவர்களையெல்லாம்விட மேலானவன். அதே பாங்கில் யோகப்ரஷ்டனுக்கு இம்மையிலும் மறுமையிலும் பெரும் பேறு கிட்டுகிறது. ஆக, யோகத்தில் முயலுதல் ஒன்றே வாழ்க்கையின் பெரும் லட்சியமாகிறது.

சாஸ்திர ஞானத்தால் மட்டும் என்ன பயன்? பண்டிதர்களுக்கு கிரந்தங்களிலும் சுலோகங்களிலும் நல்ல பரிச்சயமிருக்கலாம். ஆனால் அவைகளைத் திருப்பித் திருப்பிச் சொல்வதில் பிரயோஜனமென்ன? கிரந்தங்களில் சொல்லியவற்றையெல்லாம் அனுபவத்துக்குக் கொண்டுவரவேண்டும். ஒருவனுக்கு உலகப் பற்றுள்ள வரையில் அதாவது காமமும் காசாசையும் இருக்கும் வரையில், கேவலம் படிப்பு மட்டும் ஞானத்தையாவது மோக்ஷத்தையாவது தராது.

லௌகிகன் ஒருவன் ஒரு ஞானியைப் போலவே மேலான அறிவையும் புத்தி வன்மையையும் பெற்றிருக்கலாம். அவன் ஒரு யோகியைப் போல சாதனத்தில் மிகவும் சிரமப்படலாம்; அல்லது சந்யாசியைப் போல எளிய வாழ்க்கை வாழக்கூடியவனாயும் இருக்கலாம். என்றாலும் அவனுடைய முயற்சிகளெல்லாம் பயனற்றவையே. ஏனெனில் அவனுடைய சக்திகள் வேறு மார்க்கத்தில் செலுத்தப்படுகின்றன. மேற்கூறியவைகளை யெல்லாம் அவன் ஈசுவரனுக்காக அல்லாமல், கௌரவம், அந்தஸ்து, செல்வம் இவைகளைப் பெறுவதற்காகவே செய்கிறான்.

இனி யோகிகளுள் சிறந்தவன் யார் எனின் அதற்கு விடை வருகிறது :

47. யோகிநாமபி ஸர்வேஷாம் மத்கதேநாந்தராத்மநா
ஸ்ரத்தாவாந்பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத​:
 
ய: ஸ்ரத்தாவாந்-எவனொருவன் சிரத்தையுடைய யோகியோ, மத்கதேந அந்ராத்மநா -என்னிடம் ஈடுபாடு கொண்ட உள்ளத்தால், மாம் பஜதே-என்னை போற்றுகிறானோ, ஸ: மே யுக்ததம மத​:-அந்த யோகியே மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.

பொருள் : மற்றெந்த யோகிகளெல்லாரிலும், எவனொருவன் அந்தராத்மாவில் என்னைப் புகுத்தி என்னை நம்பிக்கையுடன் போற்றுகிறானோ அவன், மிக மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.

தியான யோகிகள் எல்லாரும் மேலோரே. அவர்கள் எதைத் தியானிக்கிறார்களோ அதுவாகிறார்கள். சுத்தியடைந்து ஒருமுகப்பட்ட மனது தியானிக்கப்பட்ட லட்சியத்தை விரைவில் அடைகிறது. கீழான லட்சியங்களைத் தியானிக்கின்ற யோகிகளை விட மனதை முற்றும் சர்வேசுவரன்பால் செலுத்தி அவனையே சிரத்தையுடன் தியானிக்கின்ற யோகிகள் மிக மேலானவர்கள். ஏனென்றால் அத்தகைய தியானத்தால் அவர்கள் சர்வேசுவரனையே அடைகிறார்கள். அதற்குமேல் அவர்களால் அடையப்படுவது ஒன்றுமில்லை.

நித்தியமாயுள்ள ஞானத்தையும் ஆனந்தத்தையும் பற்றித் தியானம் செய். அப்போது உனக்கு ஆனந்தம் உண்டாகும். ஆனந்தமோ எப்பொழுதும் சாசுவதமானது; ஆனால் அக்ஞானத்தினால் அது மூடுபட்டு மறைந்துள்ளது. விஷய சுகங்களில் உனது ஆசை குறையுமளவு ஈசுவரனிடம் உனக்குப் பிரேமை அதிகமாகும்.

இதுவரையில் ஆறு அத்தியாயங்களில் ஜீவதத்துவம் விளக்கப்பெற்றது. ஜீவன் எவ்வளவு மேலோன் ஆகக்கூடும் என்பதும் காட்டப்பட்டது. மேன்மையுற்ற ஜீவன் பரமாத்மாவிடம் பக்தி பண்ணுதற்கு நிகரான செயல் வேறொன்றுமில்லை. இனி வரும் ஆறு அத்தியாயங்களில் பரமாத்ம சொரூபம் விளக்கப்பெறுகிறது. பக்தியும் படிப்படியாக வளர்க்கப்படுகிறது. ஆறாவது அத்தியாயத்தின் கடைசி சுலோகமாகிய இது கடந்த ஆறு அத்தியாயங்களில் உள்ள விஷயத்துக்கும், வரப்போகும் ஆறு அத்தியாயங்களில் உள்ள விஷயத்துக்கும் இணைப்பை உண்டுபண்ணுகிறது. இளைஞன் வாலிபன் ஆவது போன்று ஒரு யோகம் மற்றொன்றாகப் பரிணமிப்பதும் இதில் அடங்கியுள்ளது. கர்மயோகம் தியானயோகமாக வடிவெடுத்தது. இனி அது பக்தியோமாக மாறப்போகிறது.

இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
த்யானயோகோ நாம ஷஷ்டோऽத்யாய:

பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீக்ருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின்கண் ஸந்யாஸ யோகம் என்ற ஆறாம் அத்தியாயம்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar