செந்துறை: செந்துறை பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை யாத்திரை செல்வதற்கு முன்பாக பூக்குழி இறங்கினர். செந்துறை அருகே மணக்காட்டூரில் தர்ம சாஸ்தா கோயில் உள்ளது. இங்கு சுற்றுப்பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் காலை பக்தர்கள் இருமுடி கட்டினர். மாலையில் ஐயப்ப சுவாமியின் அலங்கார தேர்பவனி நடந்தது.நேற்று காலை சுவாமிக்கு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தர்கள் இறங்கினர். சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பகலில் அன்னதானம் நடந்தது. மாலையில் பக்தர்கள் யாத்திரை புறப்பட்டனர். இப்பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பழநி: ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பழநியில் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சிறப்பு விளக்கு பூஜை, அன்னதானம் நடந்தது. பழநி அடிவாரத்தில் கேரள ஆகமவிதி முறைகளின்படி ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு வாழைமரம் கொண்டு கோயில்அமைத்து சிறப்பு அலங்காரம், அர்ச்சனை செய்யப்பட்டது. மகா தீபாராதனை பூஜைகள் நடந்தது. பகல் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6.30 மணிக்குமேல் பட்டத்துவிநாயகர் கோயிலில் விளக்குபூஜை, பஜனைகள் செய்யப்பட்டது. ஐயப்ப சுவாமியை அலங்காரத்தில் தேர் பவனி வந்தார். அதன்பின் பெண்கள் விளக்கு ஏந்தி கேரள பஞ்சவாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவந்தனர். இதில் நுாற்றுக்குமேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பழநி ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்தனர்.