பழநி:பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் திருவாதிரை உற்சவவிழா காப்புக்கட்டுதலுடன் துவங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. பழநி ஞானதண்டாயுதபாணிசுவாமிகோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பெரியநாயகியம்மன் கோயிலில் தனுர்மாத மார்கழி வழிபாடு அதிகாலை 4.30 மணிக்கு தினமும் நடக்கிறது. திருவாதிரை ஆரூத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று மாலை சாயரட்சை பூஜைக்குபின் பெரியநாயகியம்மன், சிவன், மாணிக்கவாசகருக்கு காப்புகட்டுதல் நடந்தது. அதன்பின் அம்மன், மாணிக்கவாசகர் எதிரே வைத்து ஓதுவார்கள் திருவெண்பாவை பாடினர். பின் சிறப்பு அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி வரும் ஜன.,11 திருவாதிரை ஆருத்ரா தரிசனம் வரை காலை, மாலை வேளையில் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர்(பொறுப்பு) மேனகா செய்கின்றனர்.