Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பத்தாம் அத்தியாயம்
பகவத்கீதை | விபூதி யோகம்
Share
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 அக்
2011
11:37

பக்தியுடன் தியானம் செய்வதற்காகக் கடவுளின் பெருமை இதில் விரித்துக் கூறப்படுகின்றது. கடவுளே எல்லாவற்றிற்கும் பிறப்பிடம். அவரிடமிருந்தே எல்லாம் வெளிவரும். அவரே அழியா வீடு. அவரே அமரர்க்கும் முன்னோர். அவரே பிறப்பிலர். அவரே இறைவன். அவரே உயிர்களனைத்தின் உள்ளத்தில் நிறைந்திருக்கும் ஆத்மா. அவரே வேதங்களுள் சிறந்த சாம வேதம். தேவரில் இந்திரன், ருத்திரர்களில் சங்கரன். மலைகளில் மேருமலை, சப்தங்களுள் பிரணவம். ஸ்தாவரங்களுள் இமயமலை. மரங்களுள் அரச மரம். மனிதர்களுள் அரசன்.

பசுக்களில் காமதேனு. அசுரருள் பிரகலாதன். பறவைகளுள் கருடன். வீரர்களுள் ராமன். எழுத்துகளுள் அ என்னும் முதலெழுத்து, மாதங்களுள் மார்கழி. மேற்கூறியவையெல்லாம் உதாரணமாக ஒவ்வொன்றிலும் சிறந்தவையாக எடுத்துக் கூறப் பட்டிருக்கின்றன. அவரின் பெருமையைத் தனித்தனியே முற்றிலும் கூறுவது இயலாத காரியம். எந்த அசைபொருளும் அசையாப் பொருளும் அவரை விட்டுத் தனித்து நிற்க முடியாது. அனைத்துக்கும் ஆதிமூலமாயிருப்பவர் பகவான் 1-6 -ஈசனது விபூதியைப் பற்றிய ஞானம் பக்தியை வளர்க்கிறது 7-9 -அதனால் புத்தியோகம் உண்டாகிறது 10-11 -தெவிட்டாத இன்பம் தருவது பகவானது விபூதி 12-18 -தமது சிறப்பு இயல்புகளை பகவான் விளக்குகிறார் 19-40 -விபூதிகளின் ஸாரம் 41-42.

ஸ்ரீபகவாநுவாச

1. பூய ஏவ மஹாபாஹோ ஸ்ருணு மே பரமம் வச:
யத்தேऽஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா  

ஸ்ரீபகவாநுவாச-பகவான் சொல்லுகிறான், மஹாபாஹோ-பெருந்தோளுடையாய், ப்ரீயமாணாய-மிகவும் அன்பு கொண்டவனான, தே அஹம்-உனக்கு நான், ஹிதகாம்யயா-உன் நலம் கருதி, யத் பூய ஏவ வக்ஷ்யாமி-எதை மீண்டும் கூறுவேனோ, மே-என்னுடைய
பரமம் வச:-மிகவும் உயரிய அந்த வாசகத்தை, ஸ்ருணு-கேள்.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளுடையாய், பின்னுமோர் முறை நான் சொல்லப் புகும் மிகவுயர் சொல்லினைக் கேளாய்; நீ எனக்கு உகந்தவன்; ஆதலால், நினது நலம் வேண்டி இங்கதனை விளம்புவேன் நினக்கே.

பகவத் விபூதியைக் கேட்பதில் அர்ஜுனன் கொண்டுள்ள பிரியத்தை பகவான் பெரிதும் பாராட்டுகிறார். கேள்வியில் முயற்சியுடையார்க்கு அதை எடுத்துச் சொல்லுதலில் சொல்லுபவர்க்கு ஊக்கம் பிறக்கும். அதை இங்குக் காண்கிறோம். புகட்டுபவர் அதிசயிக்கத் தகுந்த மேலானவர்; அதைக் கேட்கப் பெறும் சிஷ்யன் கெட்டிக்காரன் என்ற வேதாந்த வாக்கியம் ஸ்ரீ கிருஷ்ணார்ஜுனனாகிய இவ்விருவர் மூலம் நிரூபிக்கப்படுகிறது. அமிர்தபானம் பண்ணுவது போன்று அர்ஜுனன் அவரது அருள்மொழியைக் கேட்கின்றான்.

ஏழாவது அத்தியாயத்திலும் ஒன்பதாவது அத்தியாயத்திலும் பகரப்பட்ட பொருள் இங்கு மீண்டும் விளக்கப்படுகிறது. உருக்கிய பொன்னைத் திரும்பவும் உருக்கினால் அது மாசு நீங்கி ஒளிவீசும். அவ்வாறே பகவத் விபூதியை ஆராய ஆராய உபாசனை வலுக்கிறது; பக்தி பெருகுகிறது; தியானம் தெளிவுபடுகிறது; பரமவஸ்துவைப்பற்றிய மெய்ம்மொழியாதலால், அச் சொல்லும் பரம வசனமெனப்படுகிறது. விளைநிலத்தின் நலம் கோலும் வேளாளன் அதைப் பண்படுத்துகிறான். அங்ஙனமே பார்த்தனது ஹிதத்தில் காமுற்ற கிருஷ்ண பகவான் பரம வசனத்தைப் பகர்கிறார்.

அப்படி ஒரு மனிதனோடு பேசிக்கொண்டிருப்பதனால் காலதேச வர்த்தமானத்தில் கட்டுப்பட்டவர்போன்று தென்படுகிற இறைவனது உண்மை இயல்பு இத்தகையது என்பதை அவரே ஈண்டு இயம்புகிறார் :

2. ந மே விது: ஸுரகணா: ப்ரபவம் ந மஹர்ஷய:
அஹமாதிர்ஹி தேவாநாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஸ:  

ஸுரகணா: மே ப்ரபவம் ந விது:-வானவர் கணங்கள் என் மகிமையை உணரார், மஹர்ஷய: ந-பெருந்தகை முனிவருமுணரார், ஹி அஹம் ஸர்வஸ:-ஏனெனில் நான் எல்லாவிதங்களிலும், தேவாநாம் மஹர்ஷீணாம் ச ஆதி-வானோர்கட்கும் மகரிஷிகட்கும் ஆதி நானே.

பொருள் : வானவர் கணங்கள் என் மகிமையை உணரார்; பெருந்தகை முனிவருமுணரார்; யாங்கணும், வானோர்கட்கும் மகரிஷிகட்கும் ஆதி நானே.

பிள்ளையின் பிறப்பு முதலியவைகளைப் பிதா அறிகிறார். ஆனால் பிதாவின் பிறப்பு, பால்யம் முதலியவைகளைப் புத்திரன் ஒருநாளும் அறியான். பரம புருஷனிடத்திருந்து பிரம்மா முதலிய தேவர்களும், பிருகு முதலிய ரிஷிகளும் தோன்றினார்கள். சூரியனிடத்திருந்து கிளம்பிய கிரணம் சூரியனை முற்றும் அளந்து அறிய இயலாதது. அதுபோன்று தங்களுக்கு முதற்காரணமாயுள்ள பரம புருஷனுக்கு உற்பத்தி காண தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் இயலாது.

உண்மையில் அவனுக்கு உற்பத்தி இல்லவே இல்லை. பிறவாத அவன் பிறப்பவன் போன்று அவதாரங்களில் காட்டுகிறான். அப்படி மனித வடிவெடுத்திருக்கையிலும் அவனது மகிமையை முழுதும் யார் அறிவார்? பிரபவம் என்பதற்கு மகிமை என்று பொருள் உண்டு. அனைத்துக்கும் முதற்காரணனாகிய அவள் பெருமையை அவன்தான் உணர்வான்.

பிரம்மமாகிற சமுத்திரத்திலிருந்து வீசும் காற்று, அது மோதும் ஒவ்வொரு ஹிருதயத்தையும் விகஸிக்கச் செய்கின்றது. ஸனகர், ஸனந்தனர் முதலிய பூர்வ ரிஷிகள் இந்தக் காற்றினால் பக்குவமாயினர். ஈசுவர பிரேமையால் பைத்தியங்கொண்ட நாரதர் கொஞ்ச தூரத்திலிருந்து அதை ஸமுத்திரத்தைத் தரிசித்தனர் போலும்! அது காரணமாக அவர் தம்மையே மறந்து சதா சர்வகாலமும் ஸ்ரீ ஹரியின் புகழைப் பாடிக்கொண்டு, பித்தரைப் போல உலகமெங்கும் திரிகின்றார். பிறவித் துறவியான சுகதேவர், அந்த மஹாஸமுத்திர ஜலத்தை மூன்றுதரம் கையினால் தொட்ட மாத்திரத்தில் பரிபூரண ஆனந்தத்தினால் குழந்தையைப்போல் அங்கும் இங்கும் ஓடியாடிக்கொண்டிருக்கிறார். லோக குருவாகிய மஹாதேவர், அந்த ஸமுத்திர ஜலத்தில் மூன்று கை அள்ளிக் குடித்ததனால், திவ்யானந்தப் பித்தேறி, பிணம்போல அசைவற்றுக் கிடக்கிறார். இந்த மஹா சமுத்திரத்தின் ஆழத்தையோ அல்லது அபூர்வ சக்தியையோ எவரால் கண்டுபிடிக்க முடியும்?

அவனைப்பற்றி ஒன்றுமே தெரிந்துகொள்ள முடியாதோ என்ற கேள்விக்கு விடை வருகிறது :

3. யோ மாமஜமநாதிம் ச வேத்தி லோகமஹேஸ்வரம்
அஸம்மூட: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே  

அஜம் அநாதிம் லோகமஹேஸ்வரம் ச-பிறப்பற்றவன், அநாதியானவன், உலகங்களுக்குத் தலைவன் என்று, ய: வேத்தி-எவர் அறிகிறாரோ, மர்த்யேஷு அஸம்மூட: ஸ-மானிடருக்குள்ளே மயக்கம் தீர்ந்த – தெளிந்த அறிவுடைய அவர், ஸர்வபாபை: ப்ரமுச்யதே-பாவமனைத்தினும் விடுதலைப்பட்டான்.

பொருள் : பிறப்பதில்லான், தொடங்குதலிலாதான், உலகின் பெருமுதலான என்றனையுணர்வோன், மானிடருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான், பாவமனைத்தினும் விடுதலைப்பட்டான்.

இயற்கையில் காணப்படும் பொருள்களெல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றியவைகள். மரத்திலிருந்து விதை உண்டாகிறது. பிறகு விதையிலிருந்து மரம் உண்டாகிறது. இவ்வாறு காரண காரிய மயமாக அவைகளிடத்துப் பெருந் தொடர்பு உண்டு. இக்கோட்பாட்டின்படி பரமாத்மாவினிடத்திருந்து தேவர்களும் ரிஷிகளும் உண்டானார்களானால், அப்பரமாத்மா யாரிடத்திருந்து உண்டானார் என்ற கேள்வி பிறக்கக்கூடும். இதற்கு விடையாக அவர் தம்மை அனாதி என்று சொல்லுகிறார். அவருக்குத் துவக்கம் கிடையாது. ஆகையால் அவர் பிறவாதவர் ஆகிறார். கானலில் நீர் தோன்றுவதுபோன்றும், சூரியனிடத்திருந்து கிரணங்கள் வருவது போன்றும், கடலிலிருந்து ஆவியாக நீர் வருவதுபோன்றும் சர்வேசுவரனிடத்திருந்து சரம் அசரம் ஆகிய அனைத்தும் தோன்றுகின்றன. அதனால் அவரிடத்து ஒரு குறையும் ஏற்படுவதில்லை. யாண்டும் நிறைபொருளாகவே இருக்கிறார். அவருடைய முன்னிலையில் இந்த உலகங்களின் நடைமுறை கோணலின்றிக் காரியப்படுகிறது. அணுவும் அவரது ஆணையை மீறி நடப்பதில்லை. ஆதலால் அவர் லோக மகேசுவரன் என்று அழைக்கப்படுகிறார்.

மடியும் தன்மையுடைய மக்களுக்கு மடியாப் பொருளைப் பற்றிய உண்மை தெரிவதில்லை. பக்தி சாதனத்தால் சித்த சுத்தி அடையப் பெறுபவர் சர்வேசுவரனது விபூதியைச் சிறிது அறிகின்றனர். அழியும் பொருள்களுக்கு ஆதாரமாயுள்ள அழியாப் பொருள் அவர் என்பது ஓரளவு விளங்குகிறது. அகண்டாகாரத்தில் விரிந்தோடுகிற வெட்டவெளியை ஒரு சிறு துவாரத்தின் வாயிலாகப் பார்ப்பது போன்றது அது. சுவானுபூதியில் அவரது விபூதியை அறிபவனுக்கு மயக்கம் ஏற்படுவதில்லை. சர்வேசுவரனுக்குப் புறம்பாக உலகத்தையும் வாழ்க்கையையும் பொருள்படுத்துவதே பாபம். மயக்கத்திலிருந்து தெளிவடைந்து ஈசுவரக் காட்சியைக் காண்பவன் பாபத்திலிருந்து விடுபடுகிறான்.

மேலே மொழிந்தது அவருடைய அபிராகிருத விபூதியாம். அதாவது இயற்கைக்கு அப்பாற்பட்டது. பிரகிருதியோடு சேர்ந்த விபூதிகளும் பல உண்டு. அவையாவன :

4. புத்திர்ஜ்ஞாநமஸம்மோஹ: க்ஷமா ஸத்யம் தம: ஸம:
ஸுகம் து:கம் பவோऽபாவோ பயம் சாபயமேவ ச  

5. அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்தபோ தாநம் யஸோऽயஸ:
பவந்தி பாவா பூதாநாம் மத்த ஏவ ப்ருதக்விதா:  

புத்தி: ஜ்ஞாநம் அஸம்மோஹ:-மதியும், ஞானமும், மயக்கமின்மையும், க்ஷமா ஸத்யம் தம: ஸம:-பொறுத்தலும், வாய்மையும், அடக்கமும், அமைதியும், ஸுகம் து:கம் பவ: அபாவ:-இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும், பயம் ச அபயம் ஏவ ச-அச்சமும், அஞ்சாமையும்.

அஹிம்ஸா ஸமதா துஷ்டி-துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும், தபோ தாநம் யஸ: அயஸ:-தவமும், ஈகையும், புகழும், இகழும், பூதாநாம் ப்ருதக்விதா: பாவா-உயிரினங்களுடைய வெவ்வேறான மனப்பாங்குகள் இயல்புகள், மத்த: ஏவ பவந்தி-என்னிடமிருந்தே உண்டாகின்றன.

பொருள் : மதியும், ஞானமும், மயக்கமின்மையும், பொறுத்தலும், வாய்மையும், அடக்கமும், அமைதியும், இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும், அச்சமும், அஞ்சாமையும்,

பொருள் : துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும், ஈகையும், தவமும், இகழும், புகழும், இங்ஙனம் பலமிடுமியல்புகளெல்லாம் என்னிடம் பெறுவன உயிர்கள். (4-5)

புத்தி-நுண்ணறிவு அல்லது ஆழ்ந்த கருத்துக்களை வாங்க வல்ல அந்தக்கரணம். ஞானம்-ஆத்மாவை அறியவல்ல இயல்பு. அஸம்மோஹம்-எந்த நெருக்கடியிலும் மனக்குழப்பம் ஏற்படாமை. க்ஷமை-பொறுமை அல்லது பிறரால் தாக்கப்படும் போதும் மனம் நோகாதிருத்தல். சத்தியம்-வாய்மை அல்லது பார்த்தும் கேட்டும் அனுபவித்தும் அறிந்தவைகளை அப்படியே பிறர்க்கெடுத்துப் பகர்தல். தமம்-புறக்கரணங்களாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவைகளை அடக்குதல். சமம்-அந்தக்கரணங்களாகிய மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவைகளிடத்து அமைதியேற்படுதல். சுகம்-இன்பம் அல்லது ஆஹ்லாதம். துக்கம்-துன்பம் அல்லது சந்தாபம். அஹிம்சை-ஓருயிர்க்கும் தீங்கு செய்யாமை. ஸமதா-விருப்பு வெறுப்புகளை விளைவிக்கும் செயல்களுக்கிடையில் மனது நடுநிலை பிறழாதிருத்தல். துஷ்டி-திருப்தி, சந்தோஷம் அல்லது போதுமென்ற மனநிலை. தபசு-இந்திரியங்களை ஒடுக்குதல், அல்லது உடலை அடக்கியாளுதல். தானம்-தனக்குப் பயன்படும் பொருள்களை மற்றவர்களுக்கும் உவந்தளித்தல். யச:-தர்மம் செய்வதால் வரும் புகழ்ச்சி. அயச:- அதர்மம் செய்வதால் வரும் இகழ்ச்சி.

மின்சாரத்தை ஒரு அடுப்பு, ஒரு தணுப்பைத் தரும் கருவி, ஒரு விசிறி, ஒரு விளக்கு, ஒரு யந்திரம் ஆகிய இவைகளுள் அதனதன் அமைப்புக்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம். அதுபோன்று, ஜீவர்கள் இவ்வித விபூதிகளை ஈசுவரனிடத்திருந்து அவரவர் வினைக்கேற்றபடி வாங்கிக்கொள்கின்றனர்.

ஈசுவரனுடைய விபூதிகளை ஏராளமாக ஏற்றவர்கள் யார் எனின்:

6. மஹர்ஷய: ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா
மத்பாவா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா:  

லோகே இமா: ப்ரஜா:-உலகில் இந்த பிரஜைகள் அனைவரும், யேஷாம் ஜாதா-எவரிடம் இருந்து உண்டானார்களோ அந்த, ஸப்த மஹர்ஷய: பூர்வே-சப்த ரிஷிகளுக்கும் முந்தையவர்களான, சத்வார: ததா-சனகர் முதலான நான்கு முனிவர்களுக்கும் அவ்வாறே,
மநவ: மாநஸா: மத்பாவா ஜாதா:-மனுக்களும் மனத்தால் என்னியல்பு எய்தினர்.

பொருள் : முன்னை மகரிஷிகள் எழுவரும் நான்கு மனுக்களும் மனத்தால் என்னியல்பு எய்தினர். அவர்களுடைய மரபினரே இம்மக்களெல்லாரும்.

ஏழு மஹரிஷிகளின் பெயர்கள்-பிருகு, மரீசி, அத்ரி, புலகர், அங்கிரஸ், கிரது, புலஸ்தியர். நான்கு மனுக்களின் பெயர்கள்-சுவாரோசிஷர், சுவாயம்புவர், ரைவதர், உத்தமர்.

ஈசுவரனுடைய மனதிலிருந்து அவனுடைய மானச புத்திரர்களாக ஏழு மஹரிஷிகளும் பதினான்கு மனுக்களில் முக்கியமானவர்கள் நால்வரும் உண்டானார்கள். தங்களுடைய மனதை அவர்கள் எப்பொழுதும் சர்வேசுவரனிடத்தே வைத்திருந்தபடியால் ஈசுவர பிரபாவம் அவர்களுக்கு உண்டாயிற்று. மனது எதை உபாசிக்கிறதோ அதன் தன்மைகளை எடுத்துக்கொள்ளவல்லது. ஆகையால்தான் அது ஈசுவரனிடத்தே வைக்கப்படவேண்டும்.

ஈசுவரனிடத்திருந்து உதித்த ஞானத்தைக்கொண்டு ஏழு ரிஷிகள் உலகில் ஞானத்தைப் பரப்பி வந்தார்கள். அவனிடத்திருந்து வந்த ஐசுவரியத்தைக்கொண்டு நான்கு மனுக்கள் உலகையெல்லாம் ஆண்டுவந்தார்கள். இன்னும் அந்த ஏழு ரிஷிகள் உயிர்வகைகள் அனைத்தையும் சிருஷ்டித்தார்கள். மனுக்களோ அவைகளைப் பரிபாலித்தார்கள். இங்ஙனம் சிருஷ்டிக்கிரமம் நடைபெறுகிறது. ஏழு பிறப்பு என்பது ஏழு படித்தரங்களாயுள்ள ஞான பூமிகளாம். சராசரங்களாகிய உயிர்வகைகள் அனைத்தும் ஏழு ஞான பூமிகளில் அடங்கப்பெறுகின்றன. அவைகளின் உருவகமாயிருப்பவர்கள் ஏழு ரிஷிகள். ஆக, எல்லா உயிர்களுக்கும் மூலமாக இந்த ரிஷிகள் அமைகிறார்கள்.

ஈசுவரனுடைய இத்தகைய வல்லமையைத் தெரிந்துகொள்பவனுக்கு உண்டாவது யாது? விடை வருகிறது:

7. ஏதாம் விபூதிம் யோகம் ச மம யோ வேத்தி தத்த்வத:
ஸோऽவிகம்பேந யோகேந யுஜ்யதே நாத்ர ஸம்ஸய:  

ய: மம-எவன் என்னுடைய, ஏதாம் விபூதிம் யோகம் ச-இத்தகைய எனது பெருமையும் யோகந்தனையும், தத்த்வத: வேத்தி-உள்ளவாறு உணர்வோன், ஸ: அவிகம்பேந யோகேந யுஜ்யதே-அவன் அசைவில்லாது யோகத்தில் அமர்கிறான், அத்ர ஸம்ஸய: ந-இவ்விஷயத்தில் ஐயமில்லை.

பொருள் : இத்தகைத்தாகும் எனது பெருமையும் யோகந்தனையும் உள்ளவாறுணர்வோன் அசைவிலா யோகத்தமர்வான்; இதிலோர் ஐயமில்லை.

பகவானே இத்தனை விதமான விரிவுகளை அடையவல்லவனாதலால் அவை யாவும் அவனுடைய விபூதிகளாகின்றன. இத்தனையுமாய் விரிந்தபின் அவன் அவைகளோடு எத்தகைய இணக்கம் வைத்திருக்கிறான் என்பதை ஆராயுங்கால் அவனுடைய யோகம் அறியப்படுகிறது. தீயின் தன்மையை உள்ளபடி அறிகிறவர்கள் அதில் கையை வைத்துக் காந்திப்போக விடமாட்டார்கள். ஆனால் அதைச் சமைப்பதற்கென்று நன்கு பயன்படுத்துவார்கள். ஈசுவரனுடைய விபூதிகளையும் யோகத்தையும் உள்ளபடி பேரறிவுகொண்டு அறிகிறவர்கள் அவனிடத்துத் தளராத இணக்கம் அல்லது அசையாத யோகம் வைப்பார்கள்.

எண்ணெய் இல்லாதுபோனால் விளக்கு எரியாது. அதுபோல ஈசுவரனில்லாமற் போனால் மனிதன் ஜீவித்திருக்க முடியாது.

அசையாத யோகம் என்றால் என்ன? விடை வருகிறது :

8. அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே
இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமந்விதா:  

அஹம் ஸர்வஸ்ய ப்ரபவ:-நான் அனைத்திற்கும் தொடக்கம், மத்த: ஸர்வம் ப்ரவர்ததே-என்னிடமிருந்தே எல்லாம் இயங்குகிறது, இதி மத்வா-என்று புரிந்து கொண்டு, பாவஸமந்விதா: புதா:- நம்பிக்கையும் பக்தியும் கொண்ட அறிஞர்கள், மாம் பஜந்தே-என்னை தொழுவார்.

பொருள் : நான் அனைத்திற்கும் தொடக்கம். என்னிடமிருந்தே எல்லாம் இயலும். இங்ஙன முணர்ந்த புலவர் என்னை அன்புடன் தொழுவார்.

செடிகளின் வளர்ச்சிக்கு முதற்காரணம் பூமி என்று அறியும் கிருஷிகர் அந்தப் பூமியைப் பண்படுத்தலிலேயே கண்ணுங் கருத்துமாயிருக்கின்றனர். உலகு அனைத்துக்கும் முதற்காரணம் கடவுள் என்றும், கடவுளிடத்து மனதைத் திருப்புகிறவர்களுக்கே தெய்வப்பெற்றிகள் யாவும் வந்தமைகின்றன வென்றும் அறியும் சான்றோர் அன்புடன் தங்கள் மனதைக் கடவுளிடத்துத் திருப்புகிறார்கள். ஏது நிகழ்ந்திடினும் அவர்கள் மனது கடவுளைவிட்டு மாறுவதில்லை. செடி பூமியைப் பற்றிக்கொண்டிருப்பதுபோன்று அவர்களது இயல்பு முழுதும் ஈசனையே பற்றிக்கொண்டிருக்கிறது. அப்படி அவனைப் பற்றுமளவு யோகம் அசைவற்றதாகிறது.

வாழ்க்கையில் மனிதன் கொண்டுள்ள வெவ்வேறு இயல்புகளுக்கு ஈசுவர உபாசனையில் இடமில்லையா? விடை வருகிறது :

9. மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம்
கதயந்தஸ்ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச  

மத்சித்தா-அகத்தினை என்பால் வைத்து, மத்கதப்ராணா-உயிரை என்னுள்ளே புகுத்தி, பரஸ்பரம்-தங்களுக்குள்ளே, போதயந்த: ச-விளக்கிக் கொண்டும், கதயந்த: ச-(என்னுடைய புகழைப் பற்றி) பேசிக் கொண்டும், நித்யம் துஷ்யந்தி ச மாம் ரமந்தி-எப்போதும் மகிழ்கிறார்கள்; என்னிடமே இன்புறுகிறார்கள்.

பொருள் : அகத்தினை என்பால் வைத்து, உயிரை என்னுள்ளே புகுத்தி, ஒருவரை யருவர் உணர்விப்பாராய், எக்காலுந் தம்முள் என்னைக் குறித்தியம்புவார்; அன்னோர் மகிழ்ச்சியும் இன்பமும் அடைவார்.

விரும்பிய பொருளில் மனதை வைப்பது மிக எளிது. தாய் தந்தையர்களிடத்திருந்து தங்களுக்கு எல்லாம் வந்தமைந்தனவென்று அறியும் குழந்தைகள் முழுமனதையும் அவர்களிடத்தே திருப்புகின்றனர். தனக்குத் தோற்றமும் இருப்பிடமும் பகவான் என்பதை அறிகிற பக்தன் தன்னுடைய உள்ளத்தை இறைவன் பால் வைக்கிறான். தான் வளர்ந்தபின் பெற்றோரைப் பேணப் பிள்ளை ஒருவன் தன் உயிரையே கொடுக்கிறான். உயிரினும் மிக்க தொன்று யாருக்குமில்லை. பக்தன் அதைப் பகவானுக்குக் கொடுக்கிறான். காதலன் காதலிக்கு உயிர்கொடுப்பது போன்றது அல்ல பக்தன் செயல். காதலில் தனி நலமும் தனியுரிமையும் இருக்கிறது. பக்தியில் மற்றவர்கள் எல்லாரும் சேர வேண்டுமென்று, தான் பகவானைக் காண்கிறவாறு மற்றவர்களுக்கு பக்தன் விளக்குகிறான். மற்றவர் புகட்டுவதையும் தெவிட்டாது சுவைக்கிறான். அதைப் பலதடவை சொல்லுதலிலும் கேட்பதிலும் மகிழ்வு வருகிறது. ஆனால் சிற்றின்பம் போன்று அது முடிவில் மனக்கிலேசத்தையோ, குறையையோ உண்டுபண்ணுவதில்லை. பக்தியினால் என்றைக்கும் நிறை மனது அமையப்பெறுகின்றது. அந்த நிறைவில் ஆனந்தமும் ஓயாது ஊற்றெடுக்கிறது.

வெறுங் கண்ணாடியில் யாதொரு உருவமும் பதிவதில்லை. ஆனால் தகுந்த ரசாயனப் பொருளை அக்கண்ணாடியின்மேல் பூசிய பிறகு, படங்களை எழுதலாம். அதுபோல பக்தியாகிய ரசாயனப் பொருளை ஹிருதயத்தின்மீது தடவினால், ஆங்கு ஈசுவரனுடைய ரூபத்தைப் பதியச் செய்யலாம்.

இங்ஙனம் பக்தி பண்ணுகிறவர்களிடத்து பகவான் எப்படி நடந்துகொள்கிறார்? விடை வருகிறது :

10. தேஷாம் ஸததயுக்தாநாம் பஜதாம் ப்ரீதிபூர்வகம்
ததாமி புத்தியோகம் தம் யேந மாமுபயாந்தி தே  

ஸததயுக்தாநாம்-எப்போதும் யோகத்தில் இருப்பாராகில், ப்ரீதிபூர்வகம் பஜதாம்-அன்புடன் என்னை வழிபடும், தேஷாம்-அவர்களுக்கு, யேந-எந்த உபாயத்தின் மூலம், மாம் உபயாந்தி-என்னை அடைவார்களோ, தம் புத்தியோகம் ததாமி-அந்த ஞான வடிவாகிய யோகத்தை அளிக்கிறேன்.

பொருள் : எப்போதும் யோகத் திருப்பாராகில் அன்புடன் என்னை வழிபடும் அன்னோர்க்கு யான் புத்தியோகம் அளிப்பேன். இதனால் என்னை யவர் எய்துவார்.

சர்க்கரையை நாவில் வைத்தால் அது தித்திக்கிறது என்பது தெரிகிறது. பிறகு அந்தச் சர்க்கரையை என்னென்ன வகைப் பட்சணங்களாகச் செய்தால் அதன் சுவையை நன்கு ரசிக்கலாம் என்று அறிவது சர்க்கரையைப் பற்றிய புத்தியோகமாகிறது. உள்ளன்போடும் உறுதியாகவும் யோகத்தில் நுழைபவர்க்கு இறைவனது மகிமை கொஞ்சம் விளக்குகிறது. அது யோகத்துக்கு இன்னும் தூண்டுகோலாகிறது. பகவான் தந்து கொண்டே வருகிற புத்தியோகத்தால் அவருடைய சொரூபம் மேலும் மேலும் அறியப்படுகிறது. அவருடைய சொரூபத்தைத் தொடர்ந்து அறியுமளவு பக்தன் இன்னும் அதிகமாகப் பகவானைச் சார்ந்து நிற்கிறான். இங்ஙனம் புத்தியோகத்தின் மூலம் பக்தி வளர்கிறது.

ஒரு சிறு துவாரத்தின் வழியாக ஒரு இருட்டறைக்குள் ஒரு கிரணம் வெளிச்சம் வருகிறது. அவ்வறைக்குள்ளிருப்பவனுக்கு வெளிச்சத்தைப் பற்றியிருக்கும் அபிப்பிராயமானது அந்தக் கிரணத்தின் அளவுக்குத் தகுந்தபடிதானிருக்கும். கதவுகளிலும் ஜன்னல்களிலும் துவாரங்கள் அதிகமாக இருந்தால் இன்னும் அதிகமான வெளிச்சம் வரும். அதைப்பற்றிய அறிவும் அதிகரிக்கும். அக்கதவுகளையும் சாளரங்களையும் நன்றாகத் திறந்துவிட்டால் வெளிச்ச மயமாக அவ்வறை இருப்பதை அவன் காண்பான். ஆனால் வெட்ட வெளியில் நிற்பவனோ வெளிச்சத்திலேயே இருக்கிறான். அதுபோல பக்தர்களுடைய சுபாவத்துக்கும் சக்திக்கும் தகுந்தபடி ஈசுவரன் தன்னைத் தோற்றுவித்தருள்கிறான்.

பகவான் கொடுக்கிற புத்தியோகத்தால் பக்தன் அடையும் நன்மை யாது? விடை வருகிறது :

11. தேஷாமேவாநுகம்பார்தமஹமஜ்ஞாநஜம் தம:
நாஸயாம்யாத்மபாவஸ்தோ ஜ்ஞாநதீபேந பாஸ்வதா  

தேஷாம் அநுகம்பார்தம்-அவர்களுக்கு இரங்கி நான், ஆத்மபாவஸ்த:-அவர்கள் உள்ளத்தில் நிலைத்து நின்று, அஹம் ஏவ-நானே, அஜ்ஞாநஜம் தம:-அறியாமையால் உண்டான இருளை, பாஸ்வதா-ஒளிமயமான, ஜ்ஞாநதீபேந-ஞான வடிவான விளக்கினால், நாஸயாமி-அழிக்கிறேன்.

பொருள் : அன்னவர்க்கிரங்கி யான் அன்னவர் ஆத்ம இயல்புயானாகி ஒளியுடை ஞானவிளக்கால் அவரிடை அஞ்ஞானத்தால் தோன்றுமிருளைத் தொலைப்பேன்.

அன்பர்களது உள்ளத்தில் நீங்காது குடியிருந்து, அவர்கள் நன்மையடைய வேண்டும் என்று கருதுவது கடவுளின் கருணையாகும். அவர் ஏற்றிவைக்கும் ஞான தீபத்தின் தத்துவங்களாவன: விவேகம் அந்த விளக்கின் உருவமாகிறது. பக்தியினின்று வரும் மனத்திருப்தியே அதற்கு எண்ணெய். விஷக்காற்றில் விளக்கு எரியாது. ஆழ்ந்த ஈசுவரத் தியானமே இவ்விளக்கை எரிப்பதற்கான தூய காற்று ஆகிறது. தடைப்படாத பிரம்ம சரிய விரதத்தால் வளரும் பிரக்ஞை இதற்குத் திரியாகிறது. ஓய்வடைந்த அந்தக்கரணமே இதற்கு அகலாக அமைகிறது. பெருங் காற்று வீசி தீபத்தை அணைத்துவிடலாகாது. விருப்பு வெறுப்பற்ற தெளிந்த மனது அதற்கேற்ற வீடாக அமைகிறது. தங்கு தடையற்ற ஒருமுகப்பட்ட தியானத்தினின்று உதிக்கும் நிறை காட்சியே இத்தீபத்தின் ஒளிப்பிழம்பாகும். இதுவே பக்தனது உள்ளத்தில் ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் ஞான தீபமாகும். இதனால் அவன் கடவுள் காட்சியை உள்ளபடி அடையப்பெறுகிறான்.

தாணாக்காரன் தனது விளக்கின் வெளிச்சம் எவர்மீது படும் படி திருப்புகிறானோ அவரைப் பார்க்கக்கூடும். ஆனால் அந்த விளக்கைத் தன்மீது திருப்பாதிருக்கும் வரையில் அவனை ஒருவராலும் பார்க்க முடியாது. அதுபோல ஈசுவரன் எல்லாரையும் பார்க்கிறான். ஆனால் தனது கிருபை மூலமாக அவன் தன்னைத் தோற்றுவிக்கும் வரையில் ஒருவராலும் அவனைக் காணமுடியாது.

ஈசுவர விபூதியைப்பற்றியும் ஐசுவரியத்தைப்பற்றியும் தான் கேட்டறிந்து கொண்டதன் கருத்தை இப்பொழுது அர்ஜுனன் சொல்கிறான் :

அர்ஜுந உவாச

12. பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவாந்
புருஷம் ஸாஸ்வதம் திவ்யமாதிதேவமஜம் விபும்  

13. ஆஹுஸ்த்வாம்ருஷய: ஸர்வே தேவர்ஷிர்நாரதஸ்ததா
அஸிதோ தேவலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்ரவீஷி மே

அர்ஜுந உவாச-அர்ஜுனன் சொல்லுகிறான், பவாந்-நீங்கள், பரம் ப்ரஹ்ம பரம்தாம-பரப்பிரம்மம்; பரம பதம் (வீடு பேறு), பரமம் பவித்ரம்-தூய்மை அனைத்திலும் சிறப்புடைய தூய்மை, ஸாஸ்வதம் திவ்யம் புருஷம்-என்றும் உள்ளவர் – என்றும், தெய்வீகமான புருஷன் என்றும், ஆதிதேவம் அஜம் விபும்-ஆதி தேவன் என்றும்; பிறப்பற்றவன் என்றும்; எங்கும் நிறைந்தவர் என்றும்.

ஸர்வே ருஷய: த்வாம் ஆஹு-முனிவரெல்லாரும் உன்னைப் பற்றி கூறுகிறார். ததா தேவர்ஷி: நாரத-அவ்வாறே தேவரிஷி நாரதரும், அஸிதோ தேவலோ வ்யாஸ: ச-அசிதரும் தேவலரும் வியாசரும் (கூறுகிறார்கள்), ஸ்வயம் ஏவ மே ப்ரவீஷி-நீயும் அதையே என்னிடம் கூறுகிறாய்.

பொருள் : அர்ஜுனன் சொல்லுகிறான்: நீயே பரப்பிரம்மம், நீயே பரவீடு, தூய்மை யனைத்தினுஞ் சிறப்புடைய தூய்மை நீ. நின்னையே நித்திய புருஷ னென்றும், ஆதிதேவனென்றும், பிறப்பிலானென்றும், இறைமைக் கடவுளென்றும்,

பொருள் : முனிவரெல்லாரும் மொழிகிறார்; தேவரிஷி நாரதருமங்ஙனே நவில்கிறார். அசிதரும் தேவலரும் வியாசரும் அங்ஙனமே செப்புகிறார். இங்கு நீ நேரே எனக்கு அதை உரைக்கின்றாய்.

பர பிரம்மம் - நிர்க்குண நிருபாதிக பிரம்மம்.

அபர பிரம்மம் - சகுண சோபாதிக பிரம்மம் அல்லது ஈசுவரன்.

பரம் தாமம் - சினிமாப் படம் முழுதுக்கும் திரை இருப்பிடமாவது போன்று சராசரம் அனைத்துக்கும் பிரம்மம் முடிவான இருப்பிடமாகிறது. அனைத்தையும் விளக்கவல்ல பரஞ்ஜோதியும் அதுவே.

ஆதி தேவன் - மற்ற தேவர்களெல்லாம் தோன்றுதற்கு முன்பே இருந்தவன்.

பரமம் பவித்ரம் - நீர், நிலம், தீ முதலியவைகள் தற்காலிகமாகப் பொருள்களைத் தூய்மைப்படுத்த வல்லவைகள். பரபிரம்மத்தைச் சாருமளவு ஜீவர்கள் பிரம்ம சொரூபமாகிறார்கள். அவர்களது குற்றமெல்லாம் அகலுகிறது. ஆகையால் ஜீவர்களைப் புனிதமாக்குபவைகளில் பரபிரம்மம் தலையாயது.

ரிஷி - மனதையும் இந்திரியங்களையும் அடக்கிப் பர தத்துவத்தை சுவானுபவத்தில் கண்டறிந்தவர். தேவ ரிஷிகளில் சிறந்தவர் நாரதர். (12-13)

14. ஸர்வமேதத்ருதம் மந்யே யந்மாம் வதஸி கேஸவ
ந ஹி தே பகவந்வ்யக்திம் விதுர்தேவா ந தாநவா:  

கேஸவ-கேசவா! யத் மாம் வதஸி-எதை என்னிடம் கூறுகிறாயோ, ஏதத் ஸர்வம் ருதம் மந்யே-இந்த அனைத்தும் உண்மையே என்று எண்ணுகிறேன், பகவந் தே வ்யக்திம்-பகவானே! உங்களுடைய ஸ்வரூபத்தை, தாநவா: ந விது:-அசுரர்கள் அறிந்து கொள்ளவில்லை, தேவா ஹி ந-தேவர்கள் கூட அறிந்து கொள்ள வில்லை.

பொருள் : கேசவா, நினது கிளவி யனைத்தையும் மெய் யெனக் கொண்டேன். பகவனே, விண்ணவரும் அசுரரும் நின் விளக்கத்தை யறிவரோ?

யாரிடத்தில் பலம், தர்மம், ஐசுவரியம், வீரியம், வைராக்கியம், தேஜஸ் ஆகிய இவைகள் ஆறும் நிறைந்திருக்கின்றனவோ அவர் பகவான். பகவான் என்பதற்கு ஷட்குண சம்பன்னன் என்னும் பொருள் உண்டு. இந்த ஆறுவித குணங்களை ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், வீரியம், ஸ்ரீ, கீர்த்தி என்று பொருள்படுத்துவதும் உண்டு. ஜீவர்களுடைய முக்கால நிலையை அறியும் வல்லமை அவருக்குண்டு. பகவானுடைய வியக்தியென்பது அவருடைய பிரபாவம் அல்லது தோற்றம். அவர் அவதரிப்பதன் உட்கருத்து தேவர்களுக்கே விளங்குவதில்லை; இனி, தானவர்கள் அல்லது அசுரர்கள் எப்படி அறியப்போகிறார்கள் ! நல்லோரைக் காப்பதற்கும் கெட்டவர்களை அழிப்பதற்கும் அவர் அவதரிக்கிறார் என்பது ஓரளவு சில பக்தர்களுக்குப் புலப்படுகிறது.

சூரியன் பூமியைக் காட்டிலும் பன்மடங்கு பெரியதாயினும், வெகுதூரத்துக்கப்பாலிருப்பதால் ஒரு சிறிய தட்டைப் போலக் காணப்படுகிறது. அதுபோலவே, ஈசுவரன் அளவற்ற மகத்துவமுடையவனாயிருந்தும், நமக்கும் அவனுக்குமிடையே உள்ள தூரத்தினால் நாம் அவனுடைய உண்மையான மகத்துவத்தை அறியச் சக்தியற்றவர்களாக இருக்கிறோம்.

எல்லாவற்றிற்கும் அவனே மூலகாரணமாதலால்:

15. ஸ்வயமேவாத்மநாத்மாநம் வேத்த த்வம் புரு÷ஷாத்தம
பூதபாவந பூதேஸ தேவதேவ ஜகத்பதே  

புரு÷ஷாத்தம! த்வம்-புரு÷ஷாத்தமா நீ, ஆத்மநா ஆத்மாநம்-தன்னால் தன்னை, ஸ்வயம் ஏவ வேத்த-தானே அறிய வல்லவன், பூதபாவந-பூதங்களானாய், பூதேஸ-பூதத் தலைவனே,
தேவதேவ-தேவ தேவ, ஜகத்பதே-வையத்து இறைவா!

பொருள் : புரு÷ஷாத்தமா, உன்னை நீயே அறிவாய். பூதங்களானாய்! பூதத் தலைவனே! தேவ தேவ! வையத் திறைவா!

புருஷர்களில் இவர் ஒருவரே அழிவற்றவர், ஒப்பற்றவர்; ஆதலால் இவர் புரு÷ஷாத்தமர். உயிர்களுக்கெல்லாம் இவர் முதற் காரணமாதலால் இவர் பூதபாவனன். படைத்தபின் அவைகளுக்குத் தலைவராயிருக்கிறார். ஆதலால் அவர் பூதேசன். பின்பு, அவைகளையெல்லாம் ஆளுகிறபடியால் அவர் ஜகத்பதி. தமது முழுமகிமையை அவர் தாமே அறிந்துகொள்கிறார். அனந்த கல்யாண குணங்களையுடைய அப்புரு÷ஷாத்தமனை மற்றவர்கள் உள்ளபடி அறிந்துகொள்ள இயலாதவர்கள்.

வைரம் ஒன்றை ஒருவன் கடைத்தெருவுக்கு விற்பனைக்கு எடுத்துச் சென்றான். அது என்ன விலைபெறும் என்று அவன் ஒரு கத்தரிக்காய்க்கடையில் கேட்டான். கத்தரிக்காய்க் கடைக்காரன் அதற்கு ஒரு கூடை கத்திரிக்காய் கொடுக்கலாம் என்றான். அரிசிக் கடைக்காரன் அந்த வைரத்துக்கு ஒரு மூட்டை அரிசி கொடுக்கலாம். இப்படி ஒவ்வொருவனும் தன் அறிவுக்கு எட்டியபடி அதை மதிப்பிட்டான். பிறகு ஒரு வைர வியாபாரி அது பத்து லட்சம் ரூபாய் பெறும் என்று மதிப்பிட்டான். இப்படி பிரம்மத்தையும் அவரவர் அறிவுக்கு எட்டியபடி மதிப்பிடுகிறார்கள். பிரம்மமே பிரம்மத்தை முழுதும் அறியும்.

16. வக்துமர்ஹஸ்யஸேஷேண திவ்யா ஹ்யாத்மவிபூதய:
யாபிர்விபூதிபிர்லோகாநிமாம்ஸ்த்வம் வ்யாப்ய திஷ்டஸி  

யாபி: விபூதிபி:-எந்த மகிமைகளால், இமாந் லோகாந் வ்யாப்ய திஷ்டஸி-நீ இவ்வுலகங்களைச் சூழ்ந்து நிற்கிறாயோ, திவ்யா: ஆத்மவிபூதய:- தெய்வீக சிறப்புடைய பெருமைகளை, த்வம் ஹி-நீயேதான், அஸேஷேண வக்தும் அர்ஹஸி-முழுமையாக கூறுவதற்கு திறமை உள்ளவன்.

பொருள் : எந்த மகிமைகளால் நீ இவ்வுலகங்களைச் சூழ்ந்து நிற்கிறாயோ, அந்த நின் மகிமைகள் தேவத்தன்மையுடையன. அவற்றை எனக்கு மிச்சமின்றி உணர்த்த வேண்டுகிறேன்.

சங்கீதத்தின் மகிமையை சங்கீத வித்வானே நன்கு விளக்க வல்லவன். யானையின் பலத்தை யானையே தன் செயலால் விளக்கவல்லது. அரசனுடைய ஐசுவரியத்தை அரசனே நன்கு எடுத்துச் சொல்ல வல்லவன். அங்ஙனம் ஈசுவர விபூதிகளை ஈசுவர அவதாரமே நன்கு விளக்க வல்லதாகிறது.

ஈசுவரன் தனது கிருபையாலேயே தன்னைத் தோற்றுவிக்கிறான். அவன் ஞான சூரியன். அவனுடைய ஒற்றைக் கிரணமே இவ்வுலகம் முழுமைக்கும் அறிவைக் கொடுத்துள்ளது. அதனால் தான் நாம் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ளவும் பலவிதமான ஞானங்களைப் பெறவும் வல்லவர்களாய் இருக்கிறோம். அவன் தனது ஒளியைத் தனது திருமுகத்திலே திருப்பிக்கொள்ளும் பொழுதுதான் நம்மால் அவனைக் காணமுடியும்.

17. கதம் வித்யாமஹம் யோகிம்ஸ்த்வாம் ஸதா பரிசிந்தயந்
கேஷு கேஷு ச பாவேஷு சிந்த்யோऽஸி பகவந்மயா  

யோகிந்-யோகியே! கதம் ஸதா பரிசிந்தயந்-எவ்வாறு எப்போதும் தியானித்து, அஹம் த்வாம் வித்யாம்-நான் உன்னை உணருவேன்? பகவந்!-பகவனே! கேஷு கேஷு பாவேஷு ச-எந்தெந்த ஸ்வரூபங்களில், மயா சிந்த்ய: அஸி-என்னால் தியானிக்குமாறு இருக்கிறாய்.

பொருள் : யோகி! எப்போதும் உன்னையே சிந்தித்து நின்னை யுணருமாறெங்ஙனே? பகவனே! எவ்வெப் படிகளில் நின்னை யான் கருதல் வேண்டும்?

என் மனம் வெளி விஷயங்களில் போய்க்கொண்டிருந்தாலும் அவ்விஷயங்களை நான் எங்ஙனம் பொருள்படுத்தினால் என் எண்ணம் உம்மைப்பற்றியதாக மாறும்? தாய் ஒருத்திக்குத் தன் குழந்தைகளின் விளையாட்டுக் கருவிகளைப் பார்த்தாலும் குழந்தையின் ஞாபகம் வந்தமைகிறது. எனக்கு அப்படி உலகினை இந்திரியங்கள் மூலமாகப் பார்ப்பதற்கிடையில் உம்மைப்பற்றிய சிந்தனையை வருதற்கு ஏதேனும் உபாயம் உண்டா?

விளையாட்டுப் பழமும் விளையாட்டு யானையும் வாஸ்தவமான பழத்தையும் யானையையும் நினைப்பூட்டுவதைப்போல, ஆராதிக்கப்படும் விக்கிரகங்கள் நித்தியனும் அரூபுயுமான ஈசுவரனை நினைப்பூட்டுகின்றன.

18. விஸ்தரேணாத்மநோ யோகம் விபூதிம் ச ஜநார்தந
பூய: கதய த்ருப்திர்ஹி ஸ்ருண்வதோ நாஸ்தி மேऽம்ருதம்  

ஜநார்தந-ஜனார்த்தனா, ஆத்மந: யோகம் விபூதிம் ச-உன்னுடைய யோகத்தையும் பெருமையையும், விஸ்தரேண-விரிவாக, பூய: கதய-மற்றொரு முறை சொல்க, ஹி அம்ருதம் ஸ்ருண்வத:-ஏனெனில் அமுதம் போன்ற சொற்கள், மே த்ருப்தி நாஸ்தி-எனக்கு திருப்தி ஏற்படவில்லை (மேலும் கேட்க வேண்டும் போல இருக்கிறது).

பொருள் : ஜனார்த்தனா, நின் யோகத்தையும் பெருமையையும் விரித்து மற்றொரு முறை சொல்க. அமிர்தம் போன்ற நின் சொற்கள் எனக்குத் தெவிட்டவில்லை.

புக்தி, முக்தி ஆகிய இரண்டின் பொருட்டு ஜனங்களால் ஆராதிக்கப்படுபவர் ஜநார்தனர். இங்கு யோகம் என்பது அனைத்தையும் அறியும் தன்மை, ஆளும் தன்மை ஆகிய இரண்டு இயல்பையும் குறிக்கிறது. எந்தெந்த வஸ்துவின் மூலம் அவன் உபாஸிப்பதற்குத் தகுந்தவனோ, அவையெல்லாம் அவனுடைய விபூதிகளாம். உலகப்பொருள்களெல்லாம் தெவிட்டும் தன்மையுடையவைகள். பகவத் விஷயம் ஒன்றுதான் தெவிட்டாதது. நிலத்திலிருந்து சேறு, சேற்றினின்று சிறு பாண்ட நீர், அதினின்று பெரு நீர்நிலை இவைகளுக்குப் போகப்போக மீன் ஒன்று தன் இயல்பையே இன்னும் உறுதியாகப் பெறுகிறது. அங்ஙனம் ஜீவன் ஈசுவரனுடைய விபூதிகளில் சிந்தையைச் செலுத்துமளவு தன் பேரியல்பையே பெறுகிறான். அதில் போதுமென்ற மனநிலை வருவதில்லை.

ஈசுவரனுக்கும் மனிதனுக்கும் உள்ள சம்பந்தம் காந்தத்துக்கும் இரும்புக்குமுள்ள சம்பந்தத்தைப் போன்றது.

ஸ்ரீபகவாநுவாச

19. ஹந்த தே கதயிஷ்யாமி திவ்யா ஹ்யாத்மவிபூதய:
ப்ராதாந்யத: குருஸ்ரேஷ்ட நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே  

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், குருஸ்ரேஷ்ட-குரு குலத்தில் சிறந்தவனே! ஆத்மவிபூதய: திவ்யா:-என் பெருமைகள் தெய்வீகமானவை, ஹந்த-இப்பொழுது,
தே-உனக்கு, ப்ராதாந்யத:-பிரதானமானவற்றை, கதயிஷ்யாமி-சொல்லுகிறேன், ஹி மே-ஏனெனில் என்னுடைய, விஸ்தரஸ்ய-விரிவுக்கு, அந்த: நாஸ்தி-முடிவு இல்லை.

பொருள் : ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அச்ச! என் ஆத்மப் பெருமைகள் தேவத்தன்மை உடையனவே. அவற்றுள் பிரதானமானவற்றை நினக்குச் சொல்லுகிறேன். எனது விஸ்தாரத்துக்கு முடிவில்லை.

இயற்கையின் சிறப்பு அனைத்தும் ஈசுவர விபூதிகளே. அவைகளைச் சொல்லில் அடக்குவது ஈசுவரனுக்கே இயலாது. ஆங்காங்கு முக்கியமான சிலவற்றை மட்டும் எடுத்து மொழிய முடியும். அவைகளினின்று மற்றவைகளை யூகித்து அறிந்து கொள்ளலாம்.

கிரந்தங்களைப் படித்துவிட்டு மட்டும் ஈசுவரனை விவரிக்க முயலுவது தேசப்படத்தில் மட்டும் காசியைப் பார்த்துவிட்டு, அந்நகரைப்பற்றி இன்னொருவனுக்கு விவரிக்க முயல்வதை ஒக்கும்.

உலகைப்பற்றிய முடிவான உண்மையை முதலிலேயே தெரிந்துகொள். அதாவது :

20. அஹமாத்மா குடாகேஸ ஸர்வபூதாஸயஸ்தித:
அஹமாதிஸ்ச மத்யம் ச பூதாநாமந்த ஏவ ச  

குடாகேஸ-அர்ஜுனா, ஸர்வபூத ஆஸயஸ்தித: ஆத்மா அஹம்-உயிர்கள் அனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான், பூதாநாம் ஆதி ச-அவ்வுயிர்களின் ஆதி, மத்யம் ச-இடையும்
அந்த: ச அஹம் ஏவ-அவற்றின் இறுதியும் நானே தான்.

பொருள் : அர்ஜுனா, உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதி நான். இடையும் அவற்றின் இறுதியும் யானே.

குடாகேசன் என்றால் தூக்கத்தை வென்றவன் அல்லது அடர்ந்த கூந்தலையுடையவன் என்று பொருள். தூக்கத்தை வென்று, ஆன்மபோதத்தில் விழிப்பு அடையப் பெறுபவர்க்கே பரமாத்மாவின் வியாபகம் விளங்கும். உயிர்கள் தோன்றுவதும் நிலைபெற்றிருப்பதும் ஒடுங்குவதும் பரமாத்மாவினிடத்திலேயாம்.

ஏகமாய் இருக்கும் என் தாய் பராசக்தி பல்வேறு தோற்றத்துடன் விளங்குகிறாள். அளவில்லாத சக்தியுடைய அவள் ஜீவனாகவும் ஜகத்தாகவும் பேதப்பட்டு, சரீரம் புத்தி சன்மார்க்கம் ஆத்மார்த்தம் முதலிய வேறுபட்ட சக்திகளையுடைவளாய்க் காணப்படுகிறாள். சக்தி, வேதாந்தத்தில் கூறப்படும் பிரம்மமே தவிர வேறல்ல. கட்புலனாகாத பிரம்மத்தின் பிரத்யக்ஷ ஸ்வரூபமே அவள்.

21. ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமாந்
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸஸீ  

ஆதித்யாநாம் விஷ்ணு-ஆதித்யர்களில் நான் விஷ்ணு, ஜ்யோதிஷாம் அம்ஸுமாந் ரவி:-ஒளிகளில் நான் கதிர்களுடன் கூடிய சூரியன், மருதாம் மரீசி:-வாயு தேவர்களில் நான் மரீசி, நக்ஷத்ராணாம் அஹம் ஸஸீ அஹம் அஸ்மி-நட்சத்திரங்களுள் சந்திரனாக நான் இருக்கிறேன்.

பொருள் : ஆதித்யர்களில் நான் விஷ்ணு; ஒளிகளில் நான் கதிர் சான்ற ஞாயிறு; காற்றுகளில் மரீசி; நக்ஷத்திரங்களில் சந்திரன்.

விளைபொருள்கள் யாவும் ஒரே பூமியைச் சேர்ந்தவைகள் எனினும், அவைகளுள் மிக முக்கியமானவைகளையே பொருட் காட்சிகளில் வைத்துக் காட்டுவது வழக்கம். அனைத்தும் பகவானுடைய விபூதி எனினும், எவை விசேஷமாக பகவானை ஞாபக மூட்டுபவைகளாக அல்லது மனதைக் கவர வல்லவைகளாக இருக்கின்றனவோ அவைகளைத் தனியாகப் பொறுக்கி யெடுத்துத் தம் சொரூபம் என்று பகவான் சொல்லுகிறார்.

பன்னிரண்டு மாதங்களுக்குப் பன்னிரண்டு ஆதித்தியர்கள் இருக்கிறார்கள். ஒருவரே பன்னிரண்டு பெயர் பெற்றுப் பன்னிரண்டு விதமாகத் தொழில் புரிகிறார். அவர்களின் வரிசைக் கிரமம் :-சித்திரைக்கு அம்சு, வைகாசிக்கு தாதா, ஆனிக்கு இந்திரன், ஆடிக்கு அரியமா, ஆவணிக்கு விவசுவான், புரட்டாசிக்கு பகன், ஐப்பசிக்கு பர்ஜந்நியன், கார்த்திகைக்கு துவஷ்டா, மார்கழிக்கு மித்திரன், தைக்கு விஷ்ணு, மாசிக்கு வருணன், பங்குனிக்கு பூஷா என்று அமைந்துள்ளது. இத்தகைய பன்னிரண்டு ஆதித்தியர்களுள் தை மாதத்தில் உத்தராயண புண்ணிய காலத்தை யுண்டுபண்ணி, பனியைக் குறைத்து, வெப்பத்தை அளவுபட வளர்க்கும் விஷ்ணுவாகிய ஆதித்யன் எல்லாராலும் பெரிதும் விரும்பப்படுகிறான்.

விஷ்ணு சஹஸ்ர நாமம் 258வது பெயர், நகர்வதால் அவர் விஷ்ணு என்று அழைக்கப்படுகிறார் என்பதாகும். விஷ்ணுவே சூரியன் ஆனதாக ஐதிகம் உண்டு. நாற்பத்தொன்பது மருத்து தேவதைகளுள் (வாயு தேவதைகளுள்) மரீசி என்பவன் பகவான். காற்று வீசுவது உலக நடை முறைக்குப் பெரிதும் பயன்படுகிறது. அவைகளுள் மிக முக்கியமானது ஈண்டு அவர் சொரூபமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. பகலில் ஒளிர்பவைகளுள் சிறந்தது சூரியன், இரவில் ஒளிர்பவைகளுள் சிறந்தது சந்திரன். அது உண்மையில் நக்ஷத்திரம் அல்லவெனினும் நாம் அடையும் பயனை முன்னிட்டு அது முன்னணியில் வைக்கப்படுகிறது. ஆக, அவ்விரண்டும் பகவத் சொரூபமாகக் கருதப்படுபவைகளாம்.

22. வேதாநாம் ஸாமவேதோऽஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ:
இந்த்ரியாணாம் மநஸ்சாஸ்மி பூதாநாமஸ்மி சேதநா  

வேதாநாம் ஸாமவேத: அஸ்மி-வேதங்களில் நான் சாமவேதமாக இருக்கிறேன், தேவாநாம் வாஸவ: அஸ்மி-தேவரில் இந்திரனாக இருக்கிறேன், இந்த்ரியாணாம் மந அஸ்மி-புலன்களில் மனமாக இருக்கிறேன், ச பூதாநாம் சேதநா அஸ்மி-மேலும் உயிர்களிடத்தே உணர்வாக இருக்கிறேன்.

பொருள் : வேதங்களில் யான் சாமவேதம்; தேவரில் இந்திரன்; புலன்களில் மனம் யான்; உயிர்களிடத்தே உணர்வு நான்.

மஹா விஷ்ணுவுக்கே ஸாமக அதாவது ஸாமவேதம் ஓதுபவர் என்ற பெயர், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் அமைந்துள்ளது.

இசையோடு கூடியிருப்பதால் ஸாமவேதம் பொருள் விளங்காதவர்களுக்கும் உள்ளத்தைக் கவர வல்லதாகிறது. ஈசுவர எண்ணத்தை விரைவில் கொண்டுவர வல்லதாகையால், அது முதன்மை வகிப்பதாகச் சொல்லப்படுகிறது. தேவர்களுக்குத் தலைவனாயிருப்பதால் இந்திரனிடம் ஈசுவர சம்பத்து அதிகமாக இருக்கிறது. நூறு யாகங்களைச் செய்தவன் தேவேந்திரன் ஆகிறான் என்பது அவனது மேன்மையை விளக்குகிறது.

மனம் இல்லாது மற்ற இந்திரியங்கள் தொழில் புரிவதில் பயன் இல்லை. மனம் எங்கேயோ போய்விடும் பொழுது காதால் கேட்டாலும் கண்ணால் பார்த்தாலும் ஒன்றும் பொருள்படுவதில்லை. மனதின் உதவியில்லையெனின் ஓர் இந்திரியமும் உதவாது. உயிரற்றதற்கும் உயிர் உற்றதற்கும் வித்தியாசம் உணர்வில் அல்லது அறிவில் இருக்கிறது. சேதனம் அல்லது அறிவு அதிகரிக்குமளவு உயிர் மேலானதாகிறது. இறுதியில் தூய அறிவே தெய்வமாகிறது. செல்வத்தின் மூலம் செல்வனைத் தெரிந்து கொள்ளுதல்போன்று, இந்த விபூதிகள் மூலம் இறைவனைத் தெரிகிறோம்.

23. ருத்ராணாம் ஸங்கரஸ்சாஸ்மி வித்தேஸோ யக்ஷரக்ஷஸாம்
வஸூநாம் பாவகஸ்சாஸ்மி மேரு: ஸிகரிணாமஹம்  

ருத்ராணாம் ஸங்கர:-ருத்திரர்களில் நான் சங்கரன், யக்ஷரக்ஷஸாம் வித்தேஸ:-இயக்கர் அரக்கருள் குபேரன், வஸூநாம் பாவக:-வசுக்களில் நான் தீ, ச ஸிகரிணாம் அஹம் மேரு: அஸ்மி-மலைகளில் மேருவாக இருக்கிறேன்.

பொருள் : ருத்திரர்களில் நான் சங்கரன்; இயக்கர் அரக்கருள் யான் குபேரன். வசுக்களில் நான் தீ; மலைகளில் மேரு.

ருத்திரர்கள் பதினோரு பேர் இருக்கிறார்கள். அவர்களின் பெயர் புராணங்களில் பல இடங்களில் பலவிதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அஜைகபதன், அஹிர்புத்னியன், வீரபத்ரன், கிரீசன், சங்கரன், அபராஜிதன், ஹரன், அங்காரகன், பிநாகன், பகன், சம்பு என்பன அவர்களின் வெவ்வேறு பெயர்களாம். அவர்கள் எல்லாரும் சிவனுடைய அம்சங்களாகின்றனர். ருத்திரன் என்பதன் பொருள் ரோதனம் உண்டுபண்ணுபவன், அழச்செய்பவன் என்பதாம். ராவணன் என்னும் சொல்லுக்கும் அதே பொருள். ஆனால் இவ் இருவர் உண்டுபண்ணும் அழுகையில் வரும் பயன் வெவ்வேறானவைகள். கொலை களவு செய்பவன் மக்களுக்கு நஷ்டத்தை உண்டுபண்ணி அழச் செய்கிறான். ராவணன் அங்ஙனம் உயிர்களுக்குக் கேடு உண்டுபண்ணி, மக்களை அழச் செய்கிறான். ரண வைத்தியனோடு உடலை அறுத்து அழச் செய்கிறான் எனினும் அதனால் உயிர்கள் பிணி நீங்கப்பெறுகின்றன. ருத்திரன் மக்களை அழச்செய்தவன் மூலம் அவர்களைப் பண்படுத்தி மேலோராக மாற்றுகிறான். சங்கரன் என்றால் மங்களத்தைச் செய்பவன் என்று பொருள். ருத்திரர்களுள் நான் சங்கரனாக இருக்கிறேன் என்பதன் கருத்து துன்பத்தின் மூலம் மக்களைப் பண்படுத்துபவன் என்பதாம். இடையறாது ஈசன் இச் செயலைச் செய்துவருவது வெளிப்படை.

யக்ஷஸர்கள் ரக்ஷஸர்கள் ஆகிய இருவரும் தேவகணத்தைச் சேர்ந்தவர்கள். விரைந்தோடிப் பொருள்தேடும் தன்மையுடையவர்கள் யக்ஷஸர்கள். பொருளைக்காக்கும் இயல்புடையவர்கள் ரக்ஷஸர்கள். இவ்விருதரத்தாரும் குபேரனுடைய சேனைகளாகின்றனர். செல்வம் யாரிடம் சேருகிறதோ அவன் குபேரனாகிறான். எங்கு உழைப்பும் சேமிப்பும் இருக்கின்றனவோ அங்குச் செல்வம் பெருகுகிறது. செல்வம், ஐசுவரியம் அல்லது வல்லமையைத் தருகிறபடியால் அது ஈசுவர ஸம்பத்து எனப்படுகிறது.

வஸுக்கள் எட்டுப்பேர். நிலம், நீர், நெருப்பு, வளி, வெளி, சந்திரன், சூரியன், நக்ஷத்திரம் ஆகிய இவையெட்டும் ரூபகப்படுத்தி வஸுக்கள் என்று இயம்பப்படுகின்றன. அக்கினி வெவ்வேறு வடிவெடுத்து உயிர்களை ஓம்புவதால் வஸுக்களுள் நாள் அக்கினி என்கிறார் பகவான்.

சிகரத்தையுடைய மலைகளுள் பொன்மலையாகிய மேருவானது சந்திர சூரியன் ஆகிய அனைத்துக்கும் நடு நாயகமானது. அத்யாத்மிகத்தில் பிரம்ம தண்டம் அல்லது சுஷும்னை நாடி ரூபகப்படுத்தி மேருமலை யெனப்படுகிறது. பொன்னின் ஒளியானது சைதன்யத்தோடு கூடிய சுஷும்னைக்குத் தக்க சான்றாகிறது. தேவர்களெல்லாம் மேருவைச் சார்ந்திருப்பதுபோன்று சரீரத்தில் இந்திரியங்கள், பிராணன் யாவும் சுஷும்னை நாடியைச் சார்ந்திருக்கின்றன. ஆதலால் இயற்கையின் அமைப்பிலும் மானுட உடல் அமைப்பிலும் மேருமலை முக்கியமான இடம் பெற்றிருக்கிறது.

24. புரோதஸாம் ச முக்யம் மாம் வித்தி பார்த ப்ருஹஸ்பதிம்
ஸேநாநீநாமஹம் ஸ்கந்த: ஸரஸாமஸ்மி ஸாகர:  

புரோதஸாம் ப்ருஹஸ்பதிம்-புரோகிதர்களில் தலைவனாகிய பிரகஸ்பதி, மாம் வித்தி பார்த-என்று என்னை அறிந்து கொள் பார்த்தா! ஸேநாநீநாம் அஹம் ஸகந்த: -படைத்தலைவரில் நான் கந்தன், ஸரஸாம் ஸாகர: அஸ்மி-நீர் நிலைகளில் நான் கடலாக இருக்கிறேன்.

பொருள் : பார்த்தா, புரோகிதர்களில் தலைவனாகிய பிரகஸ்பதி நான் என்றுணர். படைத்தலைவரில் நான் கந்தன். நீர் நிலைகளில் நான் கடல்.

நல்வழியில் நடப்பவர்கள் தேவர். அவர்களுக்குத் தலைவன் இந்திரன். இந்திரனுக்கே வழிகாட்டியாக பிரஹஸ்பதி யிருப்பதால் அவர் புரோகிதர்களுள் முக்கியமானவராகிறார். வியாழ பகவான் என்றும் அவரை இயம்புகிறோம். ஈசுவர விபூதியைச் சிறப்பாக அத்தகையவரிடத்துக் காண்பது எளிது. படை ஒன்றின் வெற்றியானது சேனாபதியின் வல்லமையைப் பொருத்ததாகும். தக்க செயலைத் திறமையுடன் காலத்தில் செய்தலே வல்லமையாம். சிவனது குமாரர்களுள் கணபதி அறிவு சொரூபம்; சுப்ரமண்யர் அல்லது முருகக் கடவுள் ஆற்றலே வடிவெடுத்தவர். ஸ்கந்தன் என்னும் சொல் துள்ளிக்குதிப்பவன் எனப் பொருள்படுகிறது. அறிவும் ஆற்றலும் உடையவரே இறைவனையடைவர். ஆற்றல் வடிவினன் ஆகிய ஸ்கந்தன் என்று கிருஷ்ணன் தன்னைப் பகர்வது பொருந்தும். இயற்கையாக அமைந்த நீர் நிலைகளில் தெய்வப்பற்றியுண்டு. அவைகளில் பெரியது கடல். அதில் மகிமை காண்பவர் கடவுள் சான்னித்தியத்தை உணர்கின்றனர்.

25. மஹர்ஷீணாம் ப்ருகுரஹம் கிராமஸ்ம்யேகமக்ஷரம்
யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோऽஸ்மி ஸ்தாவராணாம் ஹிமாலய:  

மஹர்ஷீணாம் ப்ருகு அஹம்-மகரிஷிகளில் நான் பிருகு, கிராம் ஏகம் அக்ஷரம் அஸ்மி-வாக்குகளில் நான் ஓம் என்ற ஓரெழுத்தாக இருக்கிறேன், யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோ அஸ்மி-யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம், ஸ்தாவராணாம் ஹிமாலய:-மலைகளில் நான் இமாலயம்.

பொருள் : மகரிஷிகளில் நான் பிருகு; வாக்குகளில் நான் ஓம் என்ற ஓரெழுத்து; யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம்; ஸ்தாவரங்களில் நான் இமாலயம்.

பிரம்மாவின் மானஸ புத்திரர்களில் தவத்தில் சிறந்தவர் பிருகு. ஆதலால் அவரிடத்து ஈசுவர விபூதி ஓங்கப் பெற்றிப்பது இயல்பு. எழுத்துக்கள் சேர்ந்து சொல் ஆகிறது. பிரணவம் என்னும் ஏகாக்ஷர பதத்துக்கு அர்த்தம் பிரம்மம். அது அனைத்தும் அடங்கப் பெற்றது. அந்த ஏகாக்ஷரத்தையே நாத பிரம்மம் என்கிறோம். ஆக அதற்கு ஒப்பான சொல் இல்லை. எனவே, அது ஈசுவர சொரூபம் . ஜீவன் தன்னைப் பரமாத்மாவுக்குக் கொடுத்துவிடுகிற கர்மம் எதுவோ அது யக்ஞம். அத்தகைய யக்ஞங்கள் எல்லாவற்றிலும் மிக எளிதில் செய்யக்கூடியது ஈசுவர நாம ஜபமாகிய யக்ஞம். எல்லாரும் எப்பொழுது வேண்டுமானாலும் அதைச் செய்யலாம். மற்ற யக்ஞங்களிலெல்லாம் நன்மை, தீமை இரண்டும் ஓரளவில் கலந்திருக்கின்றன. ஜபயக்ஞத்திலோ கேடு எதற்கும் இடமில்லை. ஈசுவர எண்ணத்தில் ஜீவன் தன்னை இழந்துவிடுதல் என்ற நன்மையானது நன்கு அமையப்பெறுகிறது. ஆக, யக்ஞங்களுள் ஈசன் தானே ஜப யக்ஞமாக இருப்பது மிகப் பொருத்தமானது. ஸ்தாவரம் என்பது நிலைத்திணை. பூமியில் முளைத்து, அவ்விடத்திலேயே உயிரோடிருப்பது எதுவோ அது ஸ்தாவரம். மலைக்கு உயிருண்டு என்பது அறிஞர் கொள்கை. ஆக பூமியில் முளைத்து உயிரோடிருப்பவைகளில் மிகப் பெரியது ஹிமாலயம் என்பது தேற்றம். ஹிமாலயத்தைக் காண்பது இறைவனைக் காண்பதற்கு ஒப்பாகும். மலையில் ஈசுவர மஹிமை காண விரும்புபவர் ஹிமாலயம் காண்க.

26. அஸ்வத்த: ஸர்வவ்ருக்ஷõணாம் தேவர்ஷீணாம் ச நாரத:
கந்தர்வாணாம் சித்ரரத: ஸித்தாநாம் கபிலோ முநி:  

ஸர்வவ்ருக்ஷõணாம் அஸ்வத்த:-மரங்களனைத்திலும் நான் அரசமரம், ச தேவர்ஷீணாம் நாரத:-தேவரிஷிகளில் நான் நாரதன், கந்தர்வாணாம் சித்ரரத:-கந்தர்வருள்ளே நான் சித்ரரதன்,
ஸித்தாநாம் கபிலோ முநி: -சித்தர்களில் கபில முனி.

பொருள் : மரங்களனைத்திலும் நான் அரசமரம். தேவரிஷிகளில் நான் நாரதன்; கந்தர்வருள்ளே நான் சித்ரரதன்; சித்தர்களில் கபில முனி.

அரசமரம், அதன் இலை, காய், பூ முதலியன ஒன்றுக்கும் உதவாவெனினும், தொன்று தொட்டு ஆத்ம சாதனங்கள் யாவும் அரசமரத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. அதைக் காணுந்தோறும் வேறு ஞாபகம் இல்லாது ஈசுவர சிந்தனையே தோன்றும். ஆதலால் பகவான் அம்மரத்தைத் தமது விசேஷ விபூதி என்கிறார்.

தேவர்கள் நரர்களிலும் மிக்கார். ஆனால் தேவர்கள் எல்லாரும் ரிஷிகள் ஆகார். அவர்களில் தத்துவ தர்சனம் அடையப்பெற்றவர்களே ரிஷிகள். தேவரிஷிகளுள் நாரதர் மிக முக்கியமானவர். ஏனென்றால் அவர் பக்தர் கூட்டத்தில் தலை சிறந்து விளங்குகிறார். மேலும் அவர் கிளப்பும் கலகங்களெல்லாம் இறுதியில் மங்களத்தையே உண்டுபண்ண வல்லவைகள். நோய் தோன்றி, உடலை நலப்படுத்துவது போன்று அவரது கலகங்களெல்லாம் நன்மை பயப்பனவாம்.

கந்தர்வர்கள் தேவகணத்தில் ஒரு பிரிவினர். சோம பானத்தைப் பாதுகாப்பது அவர்களுடைய முக்கிய வேலை வைத்தியத்தில் அவர்கள் வல்லவர்கள்; இசை ஞானத்தில் அலாதித் தேர்ச்சியுடையவர்கள். காமத்தில் அவர்கள் பெரிதும் ஈடுபட்டவர்கள். ஆதலால் விவாகத்துக்கு அவர்களுடைய துணை நாடப்படுகிறது. சூதாட்டத்தில் கந்தர்வர்கள் நிபுணர்கள். சூதாடுபவர் அவர்களின் உதவியை நாடுகின்றனர். வேதம் அவர்களால் விளக்கப்பட்டது. ரிஷிகளுக்கு ஆச்சாரியர்களாக அவர்கள் அமைவதுண்டு. அவர்களுக்கு அரசன் சித்ரரதன். ஆதலால் பகவான் தம்மைக் கந்தர்வர்களுள் சித்ரரதன் என்பது பொருத்தம்.

பிறவியிலேயே விசேஷமான தர்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம் ஆகியவைகளையுடையவர்கள் சித்தர்கள் எனப்படுகின்றனர். மனன சீலத்தை யுடையவர் அல்லது ஜப யக்ஞத்தில் உறுதி பெற்றவர் முனி எனப்படுகின்றார். ஆறு தர்சனங்களில் ஒன்றாகிய சாங்கிய தர்சனத்தை விளக்கியவர் கபிலர். இவர் மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவர் எனப்படுகிறார். நித்திய சித்தராய் இவர் இருப்பதால் பகவான் தம்மைச் சித்தர் கணத்தில் கபில முனி என்கிறார்.

27. உச்சை:ஸ்ரவஸமஸ்வாநாம் வித்தி மாமம்ருதோத்பவம்
ஐராவதம் கஜேந்த்ராணாம் நராணாம் ச நராதிபம்  

அஸ்வாநாம் அம்ருத உத்பவம்-குதிரைகளிடையே நான் அமிர்தத்தில் பிறந்த, உச்சை:ஸ்ரவஸம்-உச்சை சிரவம் என்றுணர், கஜேந்த்ராணாம் ஐராவதம் ச-யானைகளில் என்னை ஐராவதமென்றும், நராணாம் நராதிபம் மாம் வித்தி-மனிதரில் அரசனென்றும் என்னை தெரிந்து கொள்.

பொருள் : குதிரைகளிடையே நான் அமிர்தத்தில் பிறந்த உச்சை சிரவமென்றுணர். யானைகளில் என்னை ஐராவதமென்றும், மனிதரில் அரசனென்றும் அறி.

இன்பம் என்னும் அமிர்தத்துக்காக வாழ்க்கை என்னும் பாற்கடலை நல்லாரும் பொல்லாரும் கடைந்தார்கள். அமிர்தத்துடன் வாழ்க்கைக்கு இன்றியமையாத பல திரவியங்கள் உண்டாயின. அவைகளுள் இந்திரன் ஏற்றுக்கொண்ட உச்சைசிரவஸ் என்கிற அழகிய குதிரையும், ஐராவதம் என்கிற வெள்ளை யானையும் அடங்கப்பெறுகின்றன. இராவதியின் குழந்தை ஐராவதம் என்பது ஐதிகம்.

மக்களைக் காக்கவும் ஆளவும் வல்லவன் அரசன். பிறப்பு உரிமையினால் அரசனாக உபசரிக்கப்பட்டு, வெறுமனே சிம்மாசனத்து வீற்றிருப்பவன் அரசன் ஆகான். இறைமை யாரிடத்து இருக்கிறதோ அவன் அரசன். ஆகையால்தான் ராஜா, விஷ்ணுவினுடைய அம்சம் என்ற கொள்கை எழலாயிற்று. சிறந்த பரி, கரி, நரன் ஆகியவர்களிடத்துத் தெய்வப்பெற்றி பொலிவதை பகவான் இங்கு ஞாபகமூட்டுகிறார்.

28. ஆயுதாநாமஹம் வஜ்ரம் தேநூநாமஸ்மி காமதுக்
ப்ரஜநஸ்சாஸ்மி கந்தர்ப: ஸர்பாணாமஸ்மி வாஸுகி:  

ஆயுதாநாம் அஹம் வஜ்ரம்-ஆயுதங்களில் நான் வஜ்ரம், தேநூநாம் காமதுக் அஸ்மி - பசுக்களில் நான் காமதேனுவாக இருக்கிறேன், ப்ரஜந: கந்தர்ப: அஸ்மி-பிறப்பிப்போரில் நான் மன்மதன், ச ஸர்பாணாம் வாஸுகி: அஸ்மி-மேலும் பாம்புகளில் வாசுகியாக இருக்கிறேன்.

பொருள் : ஆயுதங்களில் நான் வஜ்ரம்; பசுக்களில் நான் காமதேனு; பிறப்பிப்போரில் நான் மன்மதன்; பாம்புகளில் வாசுகி.

விஷ்ணுவினுடைய ஆயுதங்களாகிய கதை, சக்கரம் ஆகியவைகளை பகவான் இங்குக் குறிப்பிடவில்லை. ஏனென்றால் அவைகள் உண்டுபண்ணப்பட்டவைகளல்ல. ஈசுவர சொரூப லக்ஷணத்தில் அவைகள் நித்தியமாய், உருவகமாக அடங்கப் பெற்றவைகள். உண்டுபண்ணப்பட்ட ஆயுதங்களில் இந்திரன் கையாளும் வஜ்ராயுதம் தலைசிறந்தது. விருத்திராசுரனைக் கொல்லுதற்கென்றே அது ஆயத்தப்படுத்தப்பட்டது. ததீசி என்ற முனிவரது எலும்பினின்று அது உண்டாக்கப்பட்டது. அந்த மஹரிஷியின் நைஷ்டிக பிரம்மசரியமும், தபோவலிவும், அவர் பெற்ற ஈசுவரப் பிரசாதமும் சேர்ந்து அவரது எலும்புக்கே அலாதி சக்தியை உண்டுபண்ணின. அசுரரை அடக்குதல் என்ற தேவ காரியத்துக்கு ஆயுதமாக அவரது எலும்பு வேண்டியிருக்கிறது என்று விண்ணவர் விண்ணப்பித்தவுடனே, ததீசி மனமுவந்து தேகத் தியாகம் செய்தார். பிறகு அவரது எலும்பினின்று வஜ்ராயுதம் செய்யப்பட்டது. மனிதன் தூய வாழ்க்கை வாழ்ந்து அதை உலக நன்மைக்காக ஒப்படைக்கவேண்டும் என்ற சிறந்த லட்சியத்தின் சின்னமாக வஜ்ராயுதம் அமைந்துள்ளது. மக்கள் இதை வாழ்க்கைக்குக் குறிக்கோளாக வைப்பது அவசியம்.

பாற்கடலில் அமிர்தம் கடைந்தபொழுது உண்டான திரவியங்களுள் ஒன்று காமதேனு. வேண்டிய பொருள்களை யெல்லாம் வேண்டியவாறு அது வழங்கவல்லது. வசிஷ்டமஹரிஷி ஆச்ரமத்தில் அது நிறைந்த செல்வத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. நல்ல மனதுடன் முறையாக உழைத்தலே காமதேனுவாகிறது என்று கீதை மூன்றாம் அத்தியாயம் பத்தாவது சுலோகத்தில் விளக்கப்பட்டது. நல்ல மனமும் பேருழைப்புமே ஈசுவர விபூதியாகின்றன.

பிரஜா விருத்தி சம்பந்தமான ஆசையே மன்மதன் அல்லது கந்தர்ப்பன் என்று உருவகப்படுத்திய பெயர் பெறுகிறது. இந்த ஆசையின் வலிவால்தான் உயிர்கள் விரிவடைந்து வருகின்றன. ஜகத் சிருஷ்டிக்கே மூல காரணமாயிருப்பது இந்த இச்சா சக்தியாம். கடவுள் காதல் சொரூபம் என்பது உண்மை.

சர்ப்பம் விஷமுடையது; ஒற்றைத் தலையோடு இருப்பது. எல்லாத் தெய்வங்களோடும் பாம்பு ஏதேனும் ஒருவிதத்தில் இணைக்கப்பட்டுள்ளது. கடவுளின் சக்திக்கு இது ஒரு சின்னம். மனிதனிடத்துள்ள சக்தியும் குண்டலினி என்னும் சர்ப்ப வடிவெடுத்திருக்கிறது. சக்தியினின்று இன்ப துன்பம் இரண்டும் தோன்றுகின்றன. துன்பத்தைக் குறிப்பது விஷம். துன்பம் எல்லார்க்கும் பொதுவானது. ஆகையால் அது ஒற்றைத் தலையுடையது. கடல் கடைவதற்கு வாசுகி என்ற விஷப் பாம்பு பயன்பட்டது. சிரமப்பட்டுச் சக்தியைப் பயன் படுத்தினால்தான் உயிர்வாழ முடியும். பிறகு, அவ் உயிர் வாழ்க்கையிலிருந்து மரணம் என்னும் விஷமும் வருகிறது. ஈசுவர சிருஷ்டியில் கேட்டுக்கும் இடமுண்டு. நலம், கேடு ஆகிய இரண்டும் கலந்தது உலகம்.

29. அநந்தஸ்சாஸ்மி நாகாநாம் வருணோ யாதஸாமஹம்
பித்ரூணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாமஹம்  

அஹம் நாகாநாம் அநந்த:-நான் நாகர்களினிடையே அநந்தன், யாதஸாம் வருண: ச அஸ்மி-நீர் வாழ்வோரில் வருணனாக இருக்கிறேன், பித்ரூணாம் அர்யமா ச அஸ்மி-பிதிர்க்களில் நான் அரியமான், ஸம்யமதா: அஹம் யம:-அடக்கி ஆள்பவர்களில் நான் யமன்.

பொருள் : நாகர்களினிடை நான் அநந்தன்; நீர் வாழ்வோரில் வருணன்; பிதிர்க்களில் நான் அரியமான்; தம்மைக் கட்டினவர்களில் நான் யமன்.

விஷமில்லாததும் பல தலைகளையுடையதும் நாகம். அவைகளுள் நாகராஜாவாயிருப்பது அனந்தன். அது மகாவிஷ்ணுவுக்குச் சயனம். அது ஐந்து தலையோடிருப்பது, மாயாசக்தி முழுதும் பஞ்சபூத சொரூபம் என்பதை விளக்கும். ஐந்துதலை நாகம் ஹரிக்குச் சயனமாய் அமைந்திருப்பதுமல்லாது, அவர் தலைக்குமேல் குடையாகவும் அமைந்திருக்கிறது. சிலந்திப்பூச்சி தன் உடலினின்று வந்த வலையிலேயே வசிப்பது போன்று, தன்னிடத்திருந்து உண்டான பிரகிருதியிலேயே பகவான் வீற்றிருக்கிறான் என்பதை சயனம் விளக்குகிறது. நாகமே குடையாயமைவது, வழிபாடு எப்பொழுதும் பிரகிருதிக்கு உட்பட்டது என்பதை விளக்குகிறது. பகவானுக்கு அனந்தன் சேஷம் ஆதலால் அதை அவருடைய விபூதி என்பது தகும்.

வேதங்களில் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ள தேவர்களில் ஒருவன் வருணன். அவனுக்கு விண்ணுலகம், மண்ணுலகம் இரண்டிலும் ஆதிக்கம் உண்டு. அறிவில் சிறந்தவன் அவன். நாளடைவில் அவன் ஜல தேவதைகளோடு இணைக்கப்பட்டு, அவர்களுக்கு அரசனாகிறான். சிந்துபதி அல்லது கடல் வேந்தன் என்ற பட்டமும் அவனுக்கு அளிக்கப்படுகிறது. மேற்குத் திசைக்குத் திக்பாலனாக அமைந்திருப்பவனும் வருணன். ஜல தேவதைகளுக்குள் அவனே அரசனாயிருப்பதால், அவன்பால் ஈசுவர விபூதி விளங்குதல் இயல்பு.

மரணத்தின் வாயிலாகப் பித்ரு லோகத்துக்குச் சென்ற முன்னோர்களுள் முதலானவன் அரியமான். ஆதலால் அவன் பித்ருக்களுக்கெல்லாம் தலைமை வகிக்கிறான். பித்ருக்களை வணங்குபவர்களெல்லாம் அவனையும் வணங்குவதுண்டு. ஆதலால் பித்ருக்களுள் தான் அரியமான் என்று கிருஷ்ணன் சொல்லுவது பொருத்தம்.

தானே தன்னையடக்கி ஆளுதற்கு யமம் என்று பெயர். அடக்கம் அமையாதவிடத்து அது தண்டனையாகிறது. மனிதன் தன் வாழ்க்கையிலேயே இவ்வுண்மையைக் காணலாம். துக்கமாகத் தனக்கு வந்து அமையும் தண்டனைக்கெல்லாம் காரணம் தான் அடக்கம் பழகாமையேயாம். அஷ்டாங்க யோகத்தில் யமம் முதல் அங்கமாகிறது. ஏனென்றால் அடக்கமில்லாது யோகமில்லை.

மனிதர்களுள் யுதிஷ்டிரன் தர்மராஜா என்று அழைக்கப்படுகிறான். தேவர்களுள் யமன் தர்மராஜா என்று அழைக்கப்படுகிறான். தர்மன் என்றாலும் யமனையே குறிக்கிறது. அவனது ஆட்சி செங்கோல் வளையாது நடைபெறுகிறது. யமபுரம் என்பது அவன் இருப்பிடம். மரணத்திற்குப் பிறகு ஜீவன் அவனுடைய முன்னிலைக்குப் போகிறது. அங்கு சித்திரகுப்தன் என்பவன் அந்த ஜீவனுடைய பாப புண்ணியங்களின் கணக்கை வாசிக்கிறான். அவனது கணக்குப் புஸ்தகத்திற்கு அக்ரசந்தானம் என்று பெயர். பிறகு, வினைக்கேற்ற தீர்ப்பை யமன் சொல்லுகிறான். அதன்படி சுவர்க்கம், நரகம் முதலியன வந்தமைகின்றன. யமன் தென் திசைக்கு இறைவன். தர்மம் இம்மியளவும் பிசகாது நடைபெறுவதால், அடக்கியாள்பவர்களில் தான் யமன் என்று பகவான் சொல்லுவது பொருத்தமானது.

30. ப்ரஹ்லாதஸ்சாஸ்மி தைத்யாநாம் கால: கலயதாமஹம்
ம்ருகாணாம் ச ம்ருகேந்த்ரோऽஹம் வைநதேயஸ்ச பக்ஷிணாம்  

தைத்யாநாம் ச ப்ரஹ்லாத: அஸ்மி-அசுரரில் பிரகலாதனாக இருக்கிறேன், கலயதாம் அஹம் கால:-இயங்குனவற்றில் நான் காலம், அஹம் ம்ருகாணாம் ச ம்ருகேந்த்ர:-நான் விலங்குகளில் சிங்கம், பக்ஷிணாம் வைநதேய: ச-பறவைகளில் கருடன்.

பொருள் : அசுரரில் பிரகலாதன் யான்; இயங்குனவற்றில் காலம் யான்; விலங்குகளில் சிங்கம்; பறவைகளில் கருடன்.

திதி என்பவள் தக்ஷப்பிரஜாபதியின் புதல்வி. காச்யபருக்கு அவள் மனைவியானாள். அவளுடைய மக்களுக்குத் தைத்தியர்கள் என்று பெயர். அவர்கள் அனைவரும் தேவர்களுக்குப் பகைவர்கள். அவர்களுள் ஹரண்யகசிபுவின் மகன் பிரஹ்லாதன். அவனது பக்தி உலகுக்கோர் எடுத்துக்காட்டாகும். கீழ் மக்கள் கூட்டத்திலும் மேலோர் தோன்றுவதுண்டு. அத்தகைய மேலோனாகிய பிரஹ்லாதனைத் தம் சொரூபம் என்கிறார் பகவான். அண்டங்களும் அவைகளில் உள்ள அனைத்தும் தோன்றி, நிலைத்திருந்து, மறைவதைக் காலம் முறையாக அளந்துகொண்டே இருக்கிறது. ஆதலால் எண்ணிக்கை எடுப்பவர்களில் காலம் முதன்மை பெறுகிறது. அத்தகைய காலமாய் இருப்பது தாமே என்று பகவான் பகர்கிறார். விலங்குகளுள் வேந்தனாயிருப்பது சிம்மம். அது அம்பிகைக்கு வாஹனம். ஈசுவர விபூதிக்கு அது இருப்பிடமாவது வெளிப்படை. விஷ்ணுவின் வாஹனமாகிய கருடன் விஷ்ணுவை ஞாபகமூட்டுவதால், பறவைகளுள் அது சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. ஈசுவர சொரூபத்தை ஞாபக மூட்டுபவைகளெல்லாம் ஈசுவர விபூதி அமையப்பெற்றுள்ளன.

31. பவந: பவதாமஸ்மி ராம: ஸஸ்த்ரப்ருதாமஹம்
ஜஷாணாம் மகரஸ்சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ  

பவதாம் பவந: அஸ்மி-தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான், ஸஸ்த்ரப்ருதாம் அஹம் ராம:-ஆயுதம் தாங்கியவர்களில் நான் ராமன், ஜஷாணாம் மகர: ச அஸ்மி-மீன்களில் நான் சுறா, ஸ்ரோதஸாம் ஜாஹ்நவீ அஸ்மி-ஆறுகளில் கங்கையாக இருக்கிறேன்.

பொருள் : தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான்; படைதரித்தோரில் நான் ராமன்; மீன்களில் நான் சுறா; ஆறுகளில் கங்கை.

நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கும் தூய்மைப்படுத்தும் தன்மையுடையவைகள். அவைகளுள் காற்று எங்கும் நிறைந்திருந்து, எப்பொழுதும் பொருள்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வருகிறது. நிலம், நீர், தீ ஆகியவைகளையும் தூய்மைப்படுத்தவல்லது காற்றே. அது தீயை எரியும்படிச் செய்கிறது; நீரை ஆவியாக மாற்றி, மழை நீராகப் பண்ணுகிறது. பூமி, பிணம் முதலியவைகளில் உள்ள துர்நாற்றத்தை அது அகற்றுகிறது. ஆகையால் காற்றைப் பகவானோடு ஒப்பிடுவது பொருந்தும்.

ஆயுதம் பிடித்தவனுக்கு ஆற்றல் அதிகம். அதை முறையோடு கையாளுபவன் மேலோன். ஸ்ரீ ராமன் எங்கும் தன் கோதண்டத்தைச் சரியாகவே கையாண்டான். அவன் ஆயுதத்தை ஓரிடத்திலாவது துர்ப்பிரயோகம் பண்ணியது கிடையாது. தர்மத்தை ஸ்தாபனம் பண்ணுதற்கே அது கையாளப்பட்டது. நல்வழியில் ஆயுதப் பிரயோகம் பண்ணுதலிலும் பராக்கிரமம் வேண்டும். பராக்கிரமத்தில் ராமனுக்கு ஒப்பான ஒரு வீரனைக் காண்பது அரிது. அவனது வில்லும் அம்பும் கெட்டவர்க்குத் துன்பத்தைக் கொடுத்து, நல்லார்க்கு இன்பத்தை வளர்த்தன. ஆகையால் படைபிடித்தவர்களுள், தான் ராமன் என்று கிருஷ்ணன் சொல்லுகிறான்.

நீரில் வாழ்பவைகளுள் மகரம் வலிவு மிகப்படைத்தது. சுறா என்பது அதற்கு மற்றொரு பெயர். ஆற்றல் மிகுதியால் அது இறைவனோடு ஒப்பிடப்படுகிறது.

கங்கைக்கு ஜாஹ்னவீ என்பது ஒரு பெயர். ஜன்னு மஹரிஷியின் புத்திரி என்று அது பொருள்படுகிறது. பகீரதனது வேண்டுதலுக்கு இரங்கி, ஆகாச கங்கை பூலோக கங்கையாக வந்தது. தவத்தில் இருந்தபொழுது தம்மீது அந்த நதி மோதுவதைக் கண்டு கோபித்து, ஜன்னு முனிவர் அதை எடுத்து விழுங்கிவிட்டார். பிறகு, பகீரதனது வேண்டுதலுக்கு இணங்கித் தம் காது வழியாகக் கங்கையை வெளியில் விட்டார். ஆகையால் அந்நதிக்கு ஜாஹ்னவீ என்ற பெயர் வந்தது. நதிகளுள் இது புனிதமே வடிவெடுத்தது. இது முற்றிலும் பிரம்ம சொரூபம் என்பது ஆன்றோர் கொள்கை.

32. ஸர்காணாமாதிரந்தஸ்ச மத்யம் சைவாஹமர்ஜுந
அத்யாத்மவித்யா வித்யாநாம் வாத: ப்ரவததாமஹம்  

ஸர்காணாம் ஆதி அந்த: மத்யம் ச அஹம் ஏவ-படைப்புகளின் ஆதியும் அந்தமும் நடுவும் நானேதான், அர்ஜுந-அர்ஜுனா! வித்யாநாம் அத்யாத்மவித்யா-வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தை, ப்ரவததாம் அஹம் வாத:-பேசுவோரிடையே நான் பேச்சு.

பொருள் : படைப்புகளின் ஆதியும் அந்தமும் நான். அர்ஜுனா, வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தை; பேசுவோரிடையே நான் பேச்சு.

இந்த அத்தியாயம் 20-வது சுலோகத்தில் சொல்லியபடி இறைவன் உயிர்களுக்குத் தோற்றம், இருப்பு, ஒடுக்கமாவது போன்று, பஞ்ச பூதங்களுக்கும் பிறப்பிடம், இருப்பிடம், ஒடுங்குமிடமாகிறான். ஆபரணத்தை யுண்டுபண்ணும் போதும், அது ஆபரணமாக நிலைத்திருக்கும் போதும், அதை அழிக்கும்போதும் அது பொன்னேயாம். அங்ஙனம் உலகமாகப் பரிணமிக்கும் போதும் மூல வஸ்துவாகிய பரம் பொருள் அனைத்துக்குமே ஆதாரமாயிருக்கிறது. ஆத்ம வித்தை என்பது பிரம்ம வித்தை. பிரம்மத்தை யறிந்தால் அக்ஞானம் அறவே அகலுகிறது. பிறவிப் பிணி போகிறது. ஆக, அவனே ஆத்ம வித்தையாயிருக்கிறான். வாதிப்பது அல்லது முறையாகப் பேசுவது உண்மையை அறிதற்கு உற்ற உபாயமாகிறது. வாதம், ஜல்பம், விதண்டை என்று அது மூவகைப்படுகிறது. விருப்பு, வெறுப்பு இன்றி உண்மையை அறியவேண்டும் என்ற ஓர் எண்ணத்துடன் முறையாகப் பேசுவது வாதம். இதில் வெற்றி தோல்வியைப் பற்றிக் கேள்வியில்லை. உண்மையை அறியவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். ஒவ்வொருவனும் தன் கொள்கையையே நிலை நாட்டப் பார்ப்பது ஜல்பம். சாஸ்திரப் பிரமாணம், யுக்தி இவைகளைக் கையாண்டு, எதிரியை வாயடக்குவது இதன் நோக்கம். விதண்டத்தில் தன் கொள்கையை ஸ்தாபிப்பதுமில்லை, எதிரியின் கொள்கையை ஏற்றுக் கொள்ளுதலுமில்லை. மற்று எதிரியையும் அவனது கொள்கையையும் ஏளனம் பண்ணுவதே அதன் நோக்கமாகும். உண்மையாராய்ச்சிக்கு வாதம் ஒன்றே துணைபுரிவதால் தர்க்கத்தில் தாம் வாதமாக இருப்பதாக பகவான் பகர்கிறார்.

மூலமாகிய ஒன்றைத் தெரிந்துகொள்; பிறகு உனக்கு எல்லாம் தெரியவரும். ஒன்று என்ற இலக்கத்தின்பின் பூஜ்யங்களைச் சேர்த்தால், அது நூறாகவும் ஆயிரமாகவும் ஆகின்றது. ஆனால் அந்த ஒன்று என்னும் இலக்கத்தை அழித்துவிட்டால் மிகுந்திருப்பனவற்றுக்கு மதிப்பு இல்லை. ஒன்றில்தான் பலவற்றுக்கு யோக்கியதை யுண்டாகிறது. முதலில் ஒன்று; பின்னர் பல. முதலில் ஈசுவரன்; பின்னர் ஜீவனும் உலகமும்.

ஒன்றை அறிவது ஆத்மவித்தை அல்லது பரவித்தை. பூஜ்யங்களை அறிவது அபரவித்தை.

33. அக்ஷராணாமகாரோऽஸ்மி த்வந்த்வ: ஸாமாஸிகஸ்ய ச
அஹமேவாக்ஷய: காலோ தாதாஹம் விஸ்வதோமுக:  

அக்ஷராணாம் அகார: அஸ்மி-எழுத்துகளில் நான் அகரம், ஸாமாஸிகஸ்ய த்வந்த்வ: ச - புணர்ப்புகளில் இரட்டைப் புணர்ப்பு, அக்ஷய: கால: அஹம் ஏவ-அழிவற்ற காலம் நானே,
விஸ்வதோமுக: தாதா அஹம்-எல்லா பக்கங்களிலும் முகம் கொண்ட விராட் ஸ்வரூபனும், எல்லாவற்றையும் சுமப்பவனும் நான்.

பொருள் : எழுத்துகளில் நான் அகரம்; புணர்ப்புகளில் இரட்டைப் புணர்ப்பு; நான் அழிவற்ற காலம்; எப்பாரிசத்தும் சுமப்போன் யானே.

நாத பிரம்மமே அகரமாகத் துவங்குகிறது. பிறகு அது வெவ்வேறு விதங்களாகப் பரிணமித்து மற்ற எழுத்துக்களாகின்றது. அகர முதல வெழுத்தெல்லாம் என்பது வள்ளுவர் வாக்கு.

சம்ஸ்கிருத சொற்கள் கூட்டுச் சொற்களாக அமைதற்குச் சில முறைகள் இருக்கின்றன. அவைகளுள் இரண்டு சொற்கள் சேர்ந்து கூட்டுச்சொல் ஆனபிறகு, இரண்டும் சம அந்தஸ்து வகிப்பது எதுவோ அது துவந்துவ ஸமாஸம் அல்லது இருசொற் கூட்டு. ராமன்+கிருஷ்ணன்=ராமகிருஷ்ணன் என்பது இதற்கு உதாரணம்.

ஒரு க்ஷணம், ஒரு மணி. ஒருநாள், ஒரு கற்பம் என்று பார்க்குமிடத்து, காலத்துக்கு உற்பத்தியும் நாசமும் உண்டு. ஆனால் அதற்கு முன்னும் பின்னும் அதை அளந்துகொண்டுபோனால் காலம் அகண்டாகாரத்தில் விரிந்தோடும். ஆக, அது அழிவற்றதாகிறது. ஆகையால் சர்வேசுவரனே மகாகாலன் எனப்படுகிறான்.

அவன் ஒருவனே பல்கோடி உருவங்களாகப் பரிணமிப்பது, ஒவ்வொரு வடிவத்தின் மூலம் ஒருவிதக் கர்மபலனை அனுபவித்து வருகிறான். அவன் எங்கும் நிறைந்திருந்து, எண்ணரிய முகங்களை உடைத்திருந்து, வினைப்பயனை வழங்கி வருதல் இயற்கையில் நாம் யாண்டும் காணும் காட்சியாகும்.

34. ம்ருத்யு: ஸர்வஹரஸ்சாஹமுத்பவஸ்ச பவிஷ்யதாம்
கீர்தி: ஸ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர்மேதா த்ருதி: க்ஷமா  

அஹம் ஸர்வஹர: ம்ருத்யு: ச-எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் நான், பவிஷ்யதாம் உத்பவ: ச-எதிர்காலப் பொருள்களின் பிறப்பு நான், நாரீணாம்-பெண்களிடத்து நான், கீர்தி: ஸ்ரீ: வாக் ஸ்ம்ருதி:-கீர்த்தி, வாக்கு, நினைவு, மேதா த்ருதி: க்ஷமா-மேதை, ஸ்திதி, பொறுமை.

பொருள் : எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் நான். எதிர்காலப் பொருள்களின் பிறப்பு நான். பெண்களிடத்து நான் கீர்த்தி, வாக்கு, நினைவு, மேதை ஸ்திதி, பொறை

தோன்றிய யாவும் அழிவது திண்ணம். அவைகளைத் தோற்றுவிப்பது போன்று, ஈசன் சம்ஹாரமும் செய்கிறான். ஆகையால் அவன் அனைத்தையும் துடைக்கும் தெய்வமாகிறான். பிறப்பையும் இறப்பையும் ஒன்றாகக் கருதுபவர் அவனை அறிய வல்லவர் ஆவர். திருமகள் இருக்குமிடத்தில் செல்வம் வளர்கிறது. திருமகளும் திருமாலும் ஒன்றே. ஆக, எங்குச் செல்வமோ, ஆங்கு அவனே இருக்கிறான். அம்பிகையின் பிரபையில் மற்றும் சில அம்சங்கள் ஈண்டு இயம்பப்பெறுகின்றன. நல் வாழ்க்கை நிலைத்திருக்குமிடத்து கீர்த்தி தானே வந்தமைகிறது. வடிவம் பொருத்தமாக அமைந்தால், அது அழகு எனப்படுகிறது. ஓசையில் அழகு பொலிந்தால், அது இசை எனப்படுகிறது. அசைதலில் பொலியும் அழகுக்கு நாட்டியம் என்ற பெயர் வருகிறது. கடவுளே அழகன். ஆக, எதன்கண் திருவானது திகழ்கிறதோ அது தெய்வம். உள்ளத்தில் உள்ள கருத்து சொல்லாகப் பரிணமிக்கிறது. சொல்லில் முறைமையும் மகிமையும் இருக்குமாகில் அது ஈசுவர விபூதியே. சக்தி சொல்வன்மையாகப் பரிணமிக்கும்போது அவள் வாணி என்ற பெயர் பெறுகிறாள். முன்பு நிகழ்ந்தவைகளை ஞாபகத்துக்குக் கொண்டுவருவது நினைவு அல்லது ஸ்மிருதி எனப்படுகிறது. நினைவு நெடிது தெளிந்திருப்பது சக்தியின் பிரபாவமாகும். சாஸ்திரங்களின் உட்கருத்தை உள்ளபடி உள்ளுதல் மேதை அல்லது அறிவு என்று பெயர் பெறுகிறது. உடலும் இந்திரியங்களும் துன்பங்களுக்கிடையில் தடுமாற்றமடையாமல் இருக்குமாகில் அது திருதி அல்லது திண்மையாகிறது. உண்ணும் பொழுது அல்லது பேசும் பொழுது பல்லானது தவறி உதட்டைக் கடித்துவிடுமாகில் அதற்காக யாரும் பல்லை நொந்து கொள்ளுவதில்லை. அங்கு மனிதன் பொறையே வடிவெடுத்தவனாகிறான். ஒவ்வொருவனும் தான் செய்த குற்றத்தைத் தானே மன்னித்துக்கொள்கிறான். அங்ஙனம் பிறர் செய் குற்றத்தையும் கேட்டையும் பொறுத்துக் கொள்ளுதலே க்ஷமை அல்லது பொறையாகிறது. இம்மேலாம் தன்மைகளே சிறந்த பெண்மைகளாகின்றன.

மாயைதான் பிரம்மத்தைத் தோற்றுவிக்கின்றது. மாயையில்லா விட்டால் பிரம்மத்தை யாரால் அறிந்துகொள்ள முடியும்? ஈசுவரனுடைய சக்தியை அறிந்துகொள்ளாமற் போனால் அவனை அறியவே முடியாது.

35. ப்ருஹத்ஸாம ததா ஸாம்நாம் காயத்ரீ சந்தஸாமஹம்
மாஸாநாம் மார்கஸீர்÷ஷாऽஹம்ருதூநாம் குஸுமாகர:  

ததா ஸாம்நாம் ப்ருஹத்ஸாம:-சாமங்களில் (வேதப் பகுதியில்) நான் பிருகத்சாமம் என்ற பெரிய சாமம், சந்தஸாம் காயத்ரீ அஹம்-சந்தஸ்களில் நான் காயத்ரி, மாஸாநாம் மார்கஸீர்ஷ: அஹம்-மாதங்களில் நான் மார்கழி, ருதூநாம் அஹம் குஸுமாகர:-பருவங்களில் நான் மலர் சான்ற இளவேனில்.

பொருள் : அங்ஙனமே, சாமங்களில் நான் பிருகத்சாமம் என்ற பெரிய சாமம்; சந்தஸ்களில் நான் காயத்ரி; மாதங்களில் நான் மார்கழி; பருவங்களில் மலர் சான்ற இளவேனில்.

இசை நிறைந்தது ஸாமவேதம். சங்கரனும் நாராயணனும் ஸாமகானப்பிரியர்கள். ஸாமகானம் செய்து சிவனை இராவணன் மகிழ்வித்தான். அத்தகைய ஸாமவேதத்தில் பிருஹத் ஸாமம் என்பது மிகச் சிறந்தது. இசையும் நுண்பொருளும் ஒன்று சேர்ந்து அதை அங்ஙனம் பெரியதாக்குகின்றன. சந்தம் என்பது செய்யுள் அமைப்பு அல்லது யாப்பிலக்கணம். வேதத்தில் அமைந்துள்ள பலவிதமான செய்யுள் வண்ணங்களில் காயத்ரீ என்பது மிக முக்கியமானது. பல தெய்வங்களைப் பற்றிய புகழும், வணக்கமும், வேண்டுதலும் காயத்ரீ சந்த வடிவமாக அமைந்திருக்கின்றன. ருத்திர காயத்ரீ, தேவி காயத்ரீ, சூரிய காயத்ரீ, பரமஹம்ஸ காயத்ரீ இவை போன்றவைகளை மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். செய்யுள் அமைப்பையும் கருத்து விசேஷத்தையும் முன்னிட்டுத் தாம் சந்தங்களுள் காயத்ரீ என்கிறார் பகவான். பெரும்பான்மையோர் ஜபித்தும் தியானித்தும் வரும் சூரிய காயத்ரீயை ஆராய்வோம்.

36. த்யூதம் சலயதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம்
ஜயோऽஸ்மி வ்யவஸாயோऽஸ்மி ஸத்த்வம் ஸத்த்வவதாமஹம்  

சலயதாம் த்யூதம் அஸ்மி-வஞ்சகரின் சூது நான், தேஜஸ்விநாம் தேஜஸ் அஹம-ஒளியுடையோரின் ஒளி நான், ஜய: அஸ்மி-நான் வெற்றி, வ்யவஸாய:-நான் நிச்சயம், ஸத்த்வவதாம் ஸத்த்வம் அஹம் அஸ்மி-உண்மையுடையோரின் உண்மை நான் இருக்கிறேன்.

பொருள் : வஞ்சகரின் சூது நான். ஒளியுடையோரின் ஒளி நான். நான் வெற்றி; நான் நிச்சயம். உண்மையுடையோரின் உண்மை நான்.

பிறரை ஏமாற்றுவது யாருக்கும் பொருந்தாத காரியம். திருடுவது, பொய்ப் பத்திரம் தயாரிப்பது, விலையை மிகைபட உயர்த்தி விற்பது, போலிப் பொருள்களை நல்ல பொருள்களென்று சொல்லி விற்பது இவையாவும் வஞ்சகமாகும். சூதாட்டத்தை அத்தகைய ஏமாற்றங்களோடு சேர்க்கலாம். ஆனால் ஒவ்வொரு அரசாங்கமும் சில சூதாட்டங்களைச் சட்ட பூர்வமாக அங்கீகரிக்கிறது. குதிரைச் சவாரியின் மீது பந்தயம் கூறுவது சிலர்க்கு உடன்பாடு. சூதாட்டமாக சீட்டாடுவது மற்றொரு சாரார்க்குச் சம்மதமானது. பாண்டவர், கௌரவர்க்குப் பகடைகள் மூலம் சூதாடுவது சட்ட பூர்வமானது எனத் தோன்றிற்று. வெளிப்படையாக மற்ற வஞ்சகங்களைச் செய்யமுடியாது. சூதாடுவது ஒன்றுமட்டும் பெரிய சபை நடுவே வெளிப்படையாகச் செய்யப்படுகிறது. அதனால் வரும் லாப நஷ்டங்களுக்கும், சுக துக்கங்களுக்கும் மக்கள் கட்டுப்பட்டவர்கள் ஆகிறார்கள். வஞ்சகச் செயல்கள் யாடுமே கேடுடையவைகள். அவைகளுள் சூதாட்டம் ஒன்று மட்டும் ஓரளவு விதிக்கு உட்பட்டதாயிருக்கிறது. அதற்கு அறிவுத் திறமை வேண்டும். அறிவு தெய்வத்திடமிருந்து வருகிறது. பொய்ப்பத்திரம் தயாரிப்பவர்களுக்கு தீப வெளிச்சம் பயன்படுவது போன்று சூதாடுபவர்களுடைய அறிவுத்திறனும் தெய்வத்திடமிருந்தே வருகிறது. ஆதலால் வஞ்சகர்களுள் தாம் சூதாட்டமாக இருப்பதாக பகவான் சொல்லுகிறார். அதனால் சூதாட்டம் ஆதரிக்கப்படுகிறது என்று பொருள் படுத்தலாகாது.

தேஜஸ் என்பது ஒளி என்று பொருள்படுகிறது. ஆரோக்கியம், இந்திரிய நிக்கிரகம், பிரம்மசரியம் முதலியவைகளினின்று உண்டாகும் பொலிவும், மனத்தெளிவும், செயலாற்றும் வன்மையும் சேர்ந்து தேஜஸ் ஆகின்றன. கீழ்மையை அகற்றி, மேன்மையை நிலைநாட்டுதல் வெற்றியாகும். அது அரசர்கள், ஆசாரிய புருஷர்கள், மதஸ்தாபகர்கள் ஆகிய இவர்களுடைய செயலாம். பண்பும் பயனுமுடைய தொழிலைத் தளராமனதுடன் புரிதல் வியவசாயமாகும். முயற்சி திருவினையாக்கும். முயற்சியே மனிதனை ஈசுவர முன்னிலைக்கு எடுத்துச் செல்ல வல்லது. மூன்று குணங்களும் பிரகிருதி சொரூபம் எனினும், அவைகளுள் சத்துவ குணம் சாதகனை இறைவனது சன்னிதிக்கு அழைத்துச் செல்ல வல்லது.

37. வ்ருஷ்ணீநாம் வாஸுதேவோऽஸ்மி பாண்டவாநாம் தநஞ்ஜய:
முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஸநா கவி:  

வ்ருஷ்ணீநாம் வாஸுதேவ: அஸ்மி-விருஷ்ணி குலத்தாரில் நான் வாசுதேவன், பாண்டவாநாம் தநஞ்ஜய:-பாண்டவர்களில் தனஞ்ஜயன், அபி முநீநாம் அஹம் வ்யாஸ:-முனிகளில் வியாசன், கவீநாம் உஸநா கவி:-கவிகளில் சுக்கிர கவி.

பொருள் : விருஷ்ணி குலத்தாரில் நான் வாசுதேவன்; பாண்டவர்களில் தனஞ்ஜயன்; முனிகளில் வியாசன்; கவிகளில் சுக்கிர கவி.

யாதவர்கள் எல்லாரும் விருஷ்ணியின் வம்சத்தில் வந்தவர்கள். ஆதலால் அவர்களுக்கு விருஷ்ணிகள் என்று ஒரு பெயர் உண்டு. கிருஷ்ணன் வசுதேவருடைய புதல்வர். எனவே அவருக்கு வாசுதேவன் என்ற பெயர் வந்துள்ளது. யாதவர் கூட்டத்தில் இவரே எல்லார்க்கும் மிக்கார் என்பது வெளிப்படை. தனஞ்ஜயன் என்பது அர்ஜுனனுக்கு ஏற்பட்ட மற்றொரு பெயர். ஆங்காங்குப் புதைந்து, பயன்படாது கிடந்த செல்வங்களை யெல்லாம் அந்தந்த அரசர்களிடத்திருந்து வென்று வந்து , நல்வழியில் பயன்படுத்தியபடியால் தனஞ்ஜயன் என்ற பெயர் அர்ஜுனனுக்கு வந்தது. பாண்டவர்களுள் பகவான் தம்மை தர்மராஜா என்று சொல்லாது, தனஞ்ஜயன் என்று சொன்னது அர்ஜுனனுக்குத் தன் யதார்த்த சொரூபத்தைப் புகட்டுதற் பொருட்டேயாம். மேலும் கிருஷ்ணனும் அர்ஜுனனும் யாண்டும் இணைபிரியாது இருந்துவருவது ஈண்டு நினைவூட்டப்படுகிறது. பகவானே எல்லா ஜீவர்களாகவும் பரிணமித்திருக்கிறார். அர்ஜுனன் தனக்குத் தனி வியக்தி யிருக்கிறதென்றாவது, தன் வெற்றிக்கெல்லாம் தானே முதற்காரணம் என்றாவது எண்ணுவது ஒவ்வாது. ஆகையால் நேரே அர்ஜுனனுடன் பேசும்போது அவனுக்கும் முதற்காரணம் பகவான் என்பதை நினைவூட்டுகிறார். ஒவ்வொரு ஜீவனும் தனக்கு முதற்காரணம் கடவுள் என்று அறிந்து, அதன்படி நடந்துகொண்டால் அந்த ஜீவன் சிறப்பு எய்துவான்.

அந்தர்முக திருஷ்டியில் மனதை முழுதும் செலுத்தி, மெய்ப் பொருளை முற்றும் அறிந்துகொள்ள வல்லவர் ஒருவர்க்கு முனி என்று பெயர். அத்தகைய பூரண ஞானிகளுள் பிரதானமானவர் வியாசர். அவருக்கு வேதவியாசர் என்றும், பாதராயணர் என்றும் துவைபாயனர் என்றும் வேறு பெயர்கள் உண்டு. அவரது கருநிறத்தை முன்னிட்டு கிருஷ்ண துவைபாயனர் என்றும் அவர் அழைக்கப்படுவதுண்டு. பராசரருக்கும் சத்தியவதிக்கும் பிள்ளையாகப் பிறந்தவர் அவர். வேதங்களை யெல்லாம் தொகுத்தவர்; வேதாந்த சூத்திரங்களை வகுத்தவர். மகாபாரதத்தையும் புராணங்களையும் எழுதியவர் அவர். அவர் சுகருக்குத் தந்தையாவார். அவரை மகாவிஷ்ணுவின் அம்சம் என்பதில் வியப்பொன்றுமில்லை.

வெளியுலகத்தைப்பற்றிய பரந்த அறிவுடையவர் கவி என்று அழைக்கப்பட்டது பழைய வழக்கம். நாளடைவில் புலவர்களுக்குக் கவி என்ற பெயர் வந்தது. உசனா என்பது சுக்கிரருக்கு மற்றொரு பெயர். செத்தவர்களைப் பிழைப்பிக்கும் வல்லமை அவருக்கு இருந்தது. அவர் தந்த பயிற்சியால் அசுரர்களுக்கு ஆற்றல் மிக உண்டாயிற்று.

38. தண்டோ தமயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீஷதாம்
மௌநம் சைவாஸ்மி குஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம்  

தமயதாம் தண்ட: அஸ்மி-ஆள்வோரிடத்தே கோல் (அடக்கும் சக்தி) நான் ஜிகீஷதாம் நீதி: அஸ்மி-வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி (நியாய உணர்வு) நான் குஹ்யாநாம் மௌநம் ச-ரகசியங்களில் நான் மௌனம்! ஜ்ஞாநவதாம் ஜ்ஞாநம் அஹம் ஏவ அஸ்மி-ஞானமுடையோரிடத்தே ஞானம் நானே.

பொருள் : ஆள்வோரிடத்தே கோல் நான்; வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி நான். ரகசியங்களில் நான் மௌனம்! ஞானமுடையோரிடத்தே நான் ஞானம்.

தண்டனையை மிகைப்படுத்தாமலும் குறைக்காமலும் அளந்து வழங்குதல் அரசன் கடமை. முறையான தண்டனைக்கு அறிகுறியாயிருப்பது செங்கோல். குற்றத்துக்கு ஏற்ற தண்டனை விதிக்கப்படும்பொழுது குற்றவாளியானவன் யார்மீதும் குறை கூறாது தண்டனையை ஏற்றுக்கொள்கிறான். அத்தகைய தண்டனையே அவனைச் சீர்திருத்துகிறது. அது பாமரர்க்கிடையில் பெரிய சீர்திருத்தம் செய்கிறபடியால் அதை இறைவனிடத்துள்ள இறைமை எனலாம். இனி, இயற்கையானது நோய் முதலியவைகளை விளைவிப்பது தவறுதலான வாழ்க்கைக்காக விதிக்கப்பட்ட தண்டனை என்பது பொருந்தும். யமதர்மராஜாவாக பகவான் இருப்பது போன்று, தண்டனையை விதிப்பவரிடத்தில் செங்கோல் சொரூபமாகவும் அவர் இருக்கிறார்.

நேர்மையான முறையில் எடுத்துக்கொள்ளும் முயற்சி நீதி எனப்படுகிறது. அரசனுக்கு சாமம், தானம், பேதம், தண்டம் இந்நான்கும் நீதிக்குட்பட்டவைகளாகும். முறைவழுவிய முயற்சி வெற்றியைக் கொடுத்தாலும், அது நிலைத்த வெற்றியாகாது. கையாளும் முறை நேர்மையானதாயிருக்குமாகில், அதினின்று விளையும் வெற்றியும் நிலைத்ததாகும். பிறரிடத்தில் பகரப்படாதது இரகசியம். வாய் பேசாதிருக்கும்போது ஒன்றும் பகரப்படுவதில்லை. ஆகையால் மௌனம் இரகசியத்தை நன்கு காக்கின்றது. சப்தம் செய்யாதிருப்பது மௌனம். எது அசைகின்றதோ அது சப்தம் செய்கிறது. பிரகிருதி முழுதும் அசைகிறது. ஆக, பிரகிருதியின்கண் மௌனம் இல்லை. மனது அடங்க அடங்க, அது மௌனத்தில் நிலை பெறுகிறது. முற்றிலும் மனது அடங்கி ஒடுங்கினால் ஆத்ம சொரூபம்மட்டும் எஞ்சியிருக்கும். ஆத்மா அசையாதது. ஆதலால் அதில் சப்தமில்லை. ஆத்மாவே மௌன சொரூபம். இந்த ஆத்மாவை இன்னதென்று வாய்விட்டுப் பேசி விளக்கமுடியாது. ஆகையால் இரகசியங்களுள் முடிவானது மௌனம் அல்லது ஆத்ம சொரூபம்.

ஞானி, ஞானம், ஞேயம் (அறிபவன், அறிவு, அறியப்படு பொருள்) என மூன்றாகப் பிரிகிறவிடத்துப் பிரபஞ்சமுண்டு. மூன்றும் ஒன்றாகுமிடத்து அது பரம்பொருள். அவைகளுள் முதலில் ஞானம், ஞானி ஆகிய இரண்டையும் ஒன்றாக்கும் வழியை பகவான் சொல்லுகிறார். பிறகு மூன்றும் ஒன்றாவது எளிது. அக்கினியின் உஷ்ணம் போன்று அறிஞர் இடத்து அறிவாயிருப்பது பகவான். அறிவுக்கு அன்னியராய் அறிஞர் இல்லை. ஈசுவரனே ஜீவர்களிடத்து ஞான சொரூபமாயிருக்கிறார் என்பது பொருள்.

39. யச்சாபி ஸர்வபூதாநாம் பீஜம் ததஹமர்ஜுந
ந ததஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூதம் சராசரம்  

ச அர்ஜுந-மேலும் அர்ஜுனா! ஸர்வபூதாநாம்-எல்லா உயிர்களிலும், யத் பீஜம் தத் அபி அஹம்-விதை எதுவோ அது நானே, மயா விநா-நான் இன்றி, யத் ஸ்யாத்-எது இருக்கக் கூடுமோ, தத் சராசரம் பூதம் ந அஸ்தி-அத்தகைய அசையும், அசையாததுமான பொருட்கள் எதுவும் இல்லை.

பொருள் : எல்லா உயிர்களிலும் விதை எதுவோ அது நான். அர்ஜுனா, சராசரங்களில் என்னையின்றியுள்ள பூதமொன்றுமில்லை.

மேலே சொன்னவைகளை யெல்லாம் தொகுத்து ஆராயுமிடத்து ஈசுவரன் ஒருவனே உலகு அனைத்துக்கும் முதற்காரணம். இயங்குவன, இயங்காதவனவாகிய அனைத்தும் அவனிடத்திருந்தே வந்தவைகள்.

அப்படியானால் பகவானுடைய விபூதி முழுதையும் அவர் சொல்லிவிட்டாரா? அதற்கு விடை வருகிறது :

40. நாந்தோऽஸ்தி மம திவ்யாநாம் விபூதீநாம் பரந்தப
ஏஷ தூத்தேஸத: ப்ரோக்தோ விபூதேர்விஸ்தரோ மயா  

பரந்தப-எதிரிகளை சுடுபவனே! மம திவ்யாநாம் விபூதீநாம்-என் திவ்ய மகிமைகளுக்கு, ந அந்த: அஸ்தி-முடிவில்லை, விபூதே:-பெருமைகளில், ஏஷ: விஸ்தர: து-இந்த விரிவும் கூட,
உத்தேஸத: மயா ப்ரோக்த:-ஓரளவுதான் என்னால் கூறப்பட்டது.

பொருள் : பார்த்தா, என் திவ்ய மகிமைகளுக்கு முடிவில்லை. விஸ்தாரமான என் மகிமைகளில் கொஞ்சம் மாத்திரமே உனக்குரைத்தேன்.

கோழி ஒன்று தன் குஞ்சுக்கு உணவு தேடும் விதத்தைச் சிறிது காட்டித் தருகிறது. அவ்வழியைப் பின்பற்றிப் பின்பு தனக்குத் தேவையாயுள்ள உணவை யெல்லாம் அக்குஞ்சே தேடிக்கொள்கிறது. அங்ஙனம் ஈசுவர மஹிமையைக் காண்பதற்கான வழியை பகவான் புகட்டியருள்கிறார். அதன்படி அனுஷ்டிக்கும் சாதகன் தன் அறிவுக்கு எட்டிய அளவு ஈசுவரனை அறிகிறான்.

ஈசுவரனை யாரால் முற்றிலும் அறிய முடியும்? அந்தப் பாக்கியம் நமக்கு இல்லை. நாம் அவனைப் பூரணமாக அறிய வேண்டுமென்பதுமில்லை. அவனைக் கண்டு, அவன் ஒருவனே உண்மைப் பொருள் என்று உணர்ந்தால் போதுமானது. ஒருவன் புண்ணிய நதியாகிய கங்கைக்கு வருவதாக வைத்துக்கொள்வோம். அதைக் கங்கோத்திரியிலிருந்து கங்கா சாகரம் வரையில் தரிசிக்கவும் ஸ்பர்சிக்கவும் வேண்டியதில்லை. ஓர் இடத்தில் அதைத் தொட்டு நீராடினாலே அவன் கிருதார்த்தனாகிறான்.

ஈசுவரனுடைய மகிமையைச் சிறிதாவது சுவானுபவத்தில் அறிந்துகொண்டவன் பிறகு உலகை எங்ஙனம் பொருள்படுத்துகிறான்? விடை பகவானுடைய வாக்கியத்திலிருந்தே வருகிறது :

41. யத்யத்விபூதிமத்ஸத்த்வம் ஸ்ரீமதூர்ஜிதமேவ வா
தத்ததேவாவகச்ச த்வம் மம தேஜோம்ऽஸஸம்பவம்  

யத் யத் விபூதிமத்-எதெது பெருமையுடையது, ஸத்த்வம்-உண்மையுடையது, ஸ்ரீமத் -அழகுடையது, ஊர்ஜிதம் வா-வலிமையுடையது, தத் தத்-அது எல்லாம், மம தேஜோம்ऽஸ ஸம்பவம் ஏவ-எனது ஒளியின் அம்சத்தில் பிறந்தது, த்வம் அவகச்ச-நீ புரிந்து கொள்.

பொருள் : எதெது பெருமையுடைத்து, உண்மையுடைத்து, அழகுடைத்து, வலிமையுடைத்து -அதுவெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்ததென்றுணர்.

சூரிய கிரணம் எங்கும் வியாபித்து, எல்லாப் பொருள்களையும் விளக்குகிறது. ஈசுவரனோ எல்லாப் பொருளுமாய் அதனதன் வாயிலாகத் தன் பெருமையையும், சிறப்பையும், அழகையும், வல்லமையையும் விளக்குகிறான். ஏதேனும் ஒரு பொருள் அல்லது உயிர் ஏதேனும் ஒரு விதத்தில் மனதைக் கவர வல்லதாயின், அத்தகைய மாண்பு ஈசுவரனுடையதே என்றும், அது அவ்வடிவத்தின் வாயிலாக மிளிர்கிறது என்றும் அறிந்து கொள்க.

பகவானது சாகாரநிலை அதாவது ரூபத்தோடு கூடிய நிலையென்றால் என்ன என்பது உனக்குத் தெரியுமா? நீர்ப்பரப்பின் மேல் தோன்றும் குமிழிகள் போன்றது அந்நிலை. சிதாகாசத்தில் பலவித ரூபங்கள் எழுவதை உண்மையாகக் காணலாம். பகவத் அவதாரமும் அவ்வித ரூபங்களில் ஒன்று.

அப்படியாயின் அகிலாண்டங்களிலுமுள்ள உருவத் தொகுதி தானே கடவுள்? இக்கேள்விக்கு விடை வருகிறது :

42. அதவா பஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந
விஷ்டப்யாஹமிதம் க்ருத்ஸ்நமேகாம்ஸேந ஸ்திதோ ஜகத்  

அதவா-அன்றி, அர்ஜுன-அர்ஜுனா, ஏதேந பஹுநா ஜ்ஞாதேந தவ கிம்-இதைப் பலவாறாகத் தெரிந்து கொள்வதில் உனக்குப் பயன் யாது? அஹம் இதம் க்ருத்ஸ்நம் ஜகத்-நான் இந்த உலகனைத்தும், ஏகாம்ஸேந-எனது சக்தியின் ஓர் அம்சத்தால், விஷ்டப்ய ஸ்தித:-தாங்கிக் கொண்டு இருக்கிறேன்.

பொருள் : அன்றி, இதைப் பலவாறாகத் தெரிவதில் உனக்குப் பயன் யாது? எனது கலையன்றால் இவ்வையகத்தை நிலை நிறுத்தியுள்ளேன்.

வல்லவன் ஒருவனை ஒரு கோணிப்பையில் கட்டி ஓடவிட்டால் அவன் தனது முழு ஆற்றலையும் அப்பொழுது காட்ட முடியாது. பல வடிவங்கள் வாயிலாக பகவான் தமது மகிமையை விளக்குகிறார் எனினும், அவ்விளக்கம் அரைகுறையானதே. இனி அலையாகப் பரிணமித்திருப்பது சமுத்திரத்தின் ஒரு சிறு பகுதியே. அங்ஙனம் அகிலாண்டமாய்ப் பரிணமித்திருப்பது ஈசுவரனுடைய ஒரு சிறு கலை மட்டுமே. அவனுடைய சொரூபத்தின் பெரும் பகுதி தோற்றத்துக்கு அப்பால் பரம்பொருளாய் உள்ளது.

கடவுள் உருவமற்றவரும், உருவமுள்ளவரும் ஆவார். உருவம் அருவம் இவ்விரண்டையும் கடந்தவரும் ஆகிறார். அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவரேதான் முற்றிலும் அறிவார்.

இதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம்
யோகசாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனஸம்வாதே
விபூதியோகோ நாம தசமோऽத்யாய:

பிரம்ம வித்தையைப் புகட்டுவதும், யோக சாஸ்திரமானதும், ஸ்ரீகிருஷ்ணார்ஜுன சம்வாதமாக வந்துள்ளதுமாகிய பகவத்கீதை என்னும் உபநிஷதத்தின் கண் விபூதி யோகம் என்ற பத்தாம் அத்தியாயம்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.