நாகமலைபுதுக்கோட்டை: நாகமலைபுதுக்கோட்டை அருகே சமணர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மலையடி அய்யனார் கருப்பணசாமி கோயில் திருவிழா நடந்தது. இதற்காக கீழக்குயில்குடி கிராமம் சார்பில் ஒரு வாரம் முன்பு திருவிழா சாட்டுதல் நடந்தது. இதையடுத்து விளாச்சேரியில் இருந்து கீழக்குயில்குடி வழியாக பூஜை பொருட்கள், ஆபரணங்கள் அடங்கிய சுவாமி பெட்டியும், அதை தொடர்ந்து குதிரை வாகனத்தில் அய்யனார் கருப்பணசாமி அழைத்து வரப்பட்டார். விளாச்சேரி, ஸ்ரீனிவாசா காலனி, தட்டானுார், கீழக்குயில்குடியில் வழி நெடுகிலும் சுவாமிக்கு பூஜைகள் செய்து பொதுமக்கள் வழிபட்டனர். கண்மாய் கரை அருகில் வந்த போது வாழைப்பழங்கள், அச்சு வெல்லம் ஆகியவற்றை வீசி எறிந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கீழக்குயில்குடி மந்தையில் நெல், வத்தல், உப்பு ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தினர். கோயிலை அடைந்ததும் இரவில் சுவாமியை அலங்கரித்து, பாவாடை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பூஜாரிகள், சுவாமி ஆடுபவர்கள் பூக்குழி இறங்கினர். தொடர்ந்து பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.