பதிவு செய்த நாள்
11
ஜன
2017
11:01
திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் இன்று இரவு, ஆருத்ரா அபிஷேகமும்; நாளை அதிகாலையில் கோபுர தரிசனமும் நடக்கிறது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வர சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது.
இக்கோவில், சிவபெருமான் நடனமாடிய, ஐந்து சபைகளில் முதற்சபையான ரத்தினசபை ஆகும். இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆருத்ரா அபிஷேகம் மற்றும் கோபுர தரிசனம் வெகு விமரிசையாக நடக்கும். அந்த வகையில், இந்தாண்டிற்கான ஆருத்ரா அபிஷேகம், இன்று இரவு, 9:00 மணிக்கு, நடராஜ பெருமானுக்குரிய விருட்சமான ஆலமரத்தின் கீழ், 34 வகையான பழங்களால், அதிகாலை, 3:00 மணி வரை அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலா வந்து, 5:00 மணிக்கு, கோவில் முன் அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கும்; அப்போது, கோபுர தரிசனமும் நடைபெறும். இதில் தமிழகம், ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து, இரவு முழுவதும் மூலவரை வழிபட்டும், நடராஜ பெருமானுக்கு நடக்கும் அபிஷேகங்களை பார்த்தும் செல்வர். ஆருத்ரா அபிஷேகத்தை தரிசிப்பதற்காக, 2,500 பக்தர்கள் அமரும் வகையில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.