பதிவு செய்த நாள்
11
ஜன
2017
12:01
சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., நவ ஜோதிர்லிங்க தரிசன, சிறப்பு சுற்றுலா ரயிலை இயக்குகிறது. மதுரையில் இருந்து, இந்த சுற்றுலா ரயில், பிப்., 15ல் புறப்படுகிறது.
ஆந்திரா மாநிலம், ஸ்ரீசைலம்; மஹாராஷ்டிராவில், பார்லி வைத்தியநாத், குருஸ்னேஸ்வர், திரையம்பகேஸ்வர், பீம்சங்கர்; குஜராத்தில், நாகேஸ்வர், சோம்நாத்; மத்திய பிரதேசத்தில், மகாகாளேஸ்வர், ஓம்கரேஸ்வர் ஆகிய, நவஜோதிர்லிங்க கோவில்களுக்கு சென்று வரலாம். இந்த, 12 நாள் சுற்றுலாவிற்கு, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியில் பயணம் செய்ய, ஒருவருக்கு, 12 ஆயிரத்து, 440 ரூபாய் கட்டணம். இதில், தென்னிந்திய சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப் பார்க்க வாகன வசதியும் அடங்கும். மதுரையில் இருந்து புறப்படும் ரயில், திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்படும்.
சிங்கப்பூர் சுற்றுலா: சென்னையில் இருந்து, ஜன., 26ல் புறப்படும் வகையில், சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., ஏழு நாள் சிறப்பு விமான சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு, ஒருவருக்கு, 71 ஆயிரத்து, 900 ரூபாய் கட்டணம். விமான கட்டணம், விசா, ஓட்டலில்
தங்கும் வசதி, வாகன செலவும், இதில் அடங்கும்.மேலும் விபரங்களுக்கு, 044 6459 4959 என்ற தொலைபேசி, 90031 40681, 90031 40617 என்ற, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.