தை மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாடுகளில் குறிப்பிடத்தக்கது சூல விரதம். சிவபெருமானுக்கு உரிய படைக்கலன்களில் முக்கியமானது திரிசூலம். இதை முத்தலைச் சூலம் என்றும் குறிப்பிடுவார்கள். திரிசூலம் உயிர்களைப் பற்றியுள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அகற்றி ஞானத்தை அளிக்கவல்லது. அஸ்திரங்களுக்கெல்லாம் தலையாயது என்பதால் அஸ்திர ராஜன் என்றும் திரிசூலத்தைச் சிறப்பிப்பார்கள். காசி நகருக்கு அவிமுக்தம் என்றொரு பெயர் உண்டு. அதாவது, அழிவற்ற தலம் என்று பொருள். இந்தப் புண்ணிய நகரத்தைத் திரிசூலம் தாங்கிக்கொண்டிருப்பதாகச் சொல்கின்றன புராணங்கள். இப்படி, மகிமைகள் வாய்ந்த திரிசூலத்தை தை மாதம் சூல விரத நாளில் (தை அமாவாசை தினத்தில்) சிவபெருமானாகவே பாவித்து வழிபடுவதால், குடும்பத்தில் தெய்வ பலமும் செல்வகடாட்சமும் என்றென்றும் நிறைந்திருக்கும் என்கிறது, விரத மகாத்மியம்.