முருகப் பெருமான் குடிகொண்ட மலைகளுள், மிகவும் உயர்ந்தது இந்த ஓதிமலை என்று சொல்லப்படுகிறது. வேறெங்கும் காண்பதற்கு அரிதான நிலையில் ஐந்து திருமுகங்களும், எட்டுத் திருக்கரங்களும் கொண்டு முருகப் பெருமான் இங்கு தரிசனம் தருவது விசேஷம்! ஐந்து முக வடிவம் என்பது ஐம்முகச் சிவன் என்பர். அதாவது, சிவபெருமானும் முருகப் பெருமானும் வேறு வேறு வடிவங்கள் அல்ல என்பதை உணர்த்தும் திருவடிவம்தான் ஐந்து திருமுகம் கொண்ட குமார சுப்ரமண்யர். அதனால் இந்தப் பெருமானை சிவகுமாரன் என்றும், குமாரசிவம் என்று சொல்கின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது ஓதிமலை முருகன் கோயில்.