பதிவு செய்த நாள்
27
ஜன
2017
12:01
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இக்கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியுடன், துவங்கி குண்டம் திருவிழா பத்து நாட்களுக்கும் மேலாக நடைபெறுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்வில், ஆனைமலை மட்டுமின்றி பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்களும் விரதமிருந்து, குண்டம் இறங்குவர். நடப்பாண்டு குண்டம் திருவிழா தை அமாவாசையான இன்று, காலை 9:00 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கியது.
கொடியேற்ற நிகழ்ச்சிக்காக, சர்க்கார்பதி வனப்பகுதியிலிருந்து, 97 அடி உயரம் உள்ள மூங்கில் மரம் கொண்டு வரப்பட்டு, சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அலங்கரிக்கப்பட்ட கம்பம், ஊர்வலமாக ஆனைமலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, இன்று உப்பாற்றங்கரையிலிருந்து கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் கம்பம் நடும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பின், கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, தினசரி சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. வரும் பிப்., 9ம் தேதி இரவு 12:00 மணிக்கு மயான பூஜையும், பிப்., 10ம் தேதி காலை 7:00 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6:30 மணிக்கு மகா பூஜையும் நடக்கிறது. வரும் பிப்., 11ம் தேதி காலை 10:30 மணிக்கு குண்டம் கட்டுதல், மாலை 6:30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல், இரவு 9:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வரும் 12ம் தேதி காலை 9:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், 13ம் தேதி காலை 9:00 மணிக்கு கொடி இறக்குதல், காலை 9:30 மணிக்கு மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.14ம் தேதி காலை 11:30 மணிக்கு மகாஅபிேஷகம், அலங்கார பூஜையும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.