பதிவு செய்த நாள்
27
ஜன
2017
01:01
கரூர்: கரூர், நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள, அமராவதி படித்துறை மற்றும் இறந்தவர்களுக்கு காரியம் செய்யும் பகுதி, பராமரிப்பின்றி மக்கள் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பிரம்ம தீர்த்தம் சாலை பகுதியில் குடியிருக்கும் மக்கள் கூறியதாவது: கரூர் அருகில், பிரம்மதீர்த்தம் சாலை முடிவில், அமராவதி படித்துறை அமைந்துள்ளது. இதன் அருகிலேயே, ஆற்றோரம் இறந்தவர்களுக்கு காரியம் செய்யும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் யாரும் வருவது கிடையாது. கரூர் பகுதியில், ஆங்காங்கே இறந்தவர்களை அடக்கம் செய்தும், எரித்த பின்னரும், இங்கு வந்து தான் உறவினர்கள் காரியம் செய்வது வழக்கம். அதன் பின், அமராவதி ஆற்றில் குளித்து விட்டு அனைத்து சடங்குகளையும் முடிப்பர். தற்போது, அமராவதி ஆறு பாலைவனம் போல் காட்சியளிப்பதால், இப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளன. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட, படித்துறை பயன்படாத வகையில் சிதைந்து காணப்படுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, படித்துறையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.