திருப்புவனம்: திருப்புவனத்தில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர். அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகுந்த புண்ணியத்தை தரும் என்பது நம்பிக்கை. திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது மிகுந்த புண்ணியத்தை தரும். இந்துக்கள் தை முதல் ஆடி வரை உள்ள காலம் உத்ராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரையிலான காலம் தட்சண காலம் என்றும் பிரித்துள்ளனர். இந்த உத்ராயண காலத்தில் முன்னோர்கள் பூமிக்கு வந்து தங்கள் வாரிசுகளை நேரில் ஆசீர்வாதம் செய்வதாக நம்பிக்கை, எனவே இந்த காலத்தில் முன்னோர்களை அமாவாசை தினங்களில் சூர்ய பகவானை வழிபட்டு தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசிர்வாதம் நேரிடையாக தங்களை சேரும் என நம்பி புண்ணிய ஸ்தலங்களில் தர்ப்பணம் செய்கின்றனர். திருப்புவனத்தில் திதி மற்றும் தர்ப்பணம் செய்தால் காசியை விட சற்று கூடுதல் புண்ணியம் கிடைக்கும் என்பதை குறிக்க காசியை விட வீசம் பெரியது என பழமொழி உள்ளது. நேற்று தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் வருகை தந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டு சென்றனர்.