காசிவிசுவநாதர் கோயிலில் நாளை திருக்கல்யாண தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2011 11:10
தென்காசி : தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் நாளை (22ம் தேதி) திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் நடக்கிறது. தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோயிலில் கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் திருக்கல்யாண திருவிழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் பவனி வருதல் நடந்தது. விழாவின் ஏழாம் நாளான நேற்று பல்லக்கு சயனத்தில் அம்பாள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் எட்டாம் நாளான இன்று (21ம் தேதி) அம்பாள் கிளி வாகனத்தில் பவனி வருகிறார். ஒன்பதாம் நாளான நாளை (22ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. காலையில் அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு ரதவீதிகளையும் சுற்றி நிலை வந்து சேர்ந்ததும் சிறப்பு தீபாராதனை நடக்கிறது. தென்காசி நகராட்சி தலைவராக வெற்றி பெறுபவர் முதன் முதலாக காசிவிசுவநாதர் கோயில் தேரோட்டத்தில் கலந்து கொள்கிறார். இரவு சிறப்பு தீபாராதனை வழிபாட்டிற்கு பின்னர் அம்பாள் பல்லக்கில் பவனி வருகிறார். விழாவின் இறுதி நாளான வரும் 24 தேதி காலையில் யானைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் எழுந்தருள்கிறார். மாலையில் தெற்கு மாசி வீதியில் காசிவிசுவநாதர் உலகம்மனுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு அம்மன் சன்னதி மண்டபத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது. தென்காசி வடக்கு ரதவீதியில் சிமென்ட் தளம் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக சாலை தோண்டப்பட்டு முதல் கட்டமாக ஜல்லி நிரப்பும் பணி நடந்தது. தேரோட்டம் நடப்பதால் அவசர அவசரமாக சாலையை சமப்படுத்தும் பணி நேற்று நடந்தது. தேரோட்டம் நடந்து முடிந்த பிறகு சிமென்ட் தளம் அமைக்கும் பணி நடக்கும் என கூறப்படுகிறது.