பதிவு செய்த நாள்
06
பிப்
2017
02:02
ஆர்.கே.பேட்டை: கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவிலில் தை கிருத்திகையை ஒட்டி, சிறப்பு தரிசனம் நடந்தது. பள்ளிப்பட்டு அடுத்த, நெடியம், கஜகிரி மலை மீது அமைந்துள்ளது வள்ளி, தெய்வானை உடனுறை செங்கல்வராய சுவாமி கோவில். இந்த கோவிலில், கிருத்திகை, திருக்கல்யாணம் உள்ளிட்ட வைபவங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில், ஆடி கிருத்திகையும், தை கிருத்திகையும் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. நேற்று முன்தினம், தை கிருத்திகையை ஒட்டி, காலை 8:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பொதட்டூர்பேட்டை, சொரக்காய்பேட்டை, வெங்கம்பேட்டை, நெடியம் மற்றும் ஆந்திர மாநிலம், சத்திரவாடா, நகரி, புதுப்பேட்டை, சிந்தலபட்டடை, நாராயணவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர். வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல், பகுதிவாசிகள் வீடுகளில் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். சிறப்பான தை கிருத்திகையில், வடை, பாயசம் உள்ளிட்டவற்றுடன் சுவாமிக்கு படையல் வைத்தனர். அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றத்திலும், சிறப்பு தரிசனம் நடந்தது.