பதிவு செய்த நாள்
06
பிப்
2017
05:02
மாசி மாதத் தேய்பிறை ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி எனப்படும். பிப்.22ல் (மாசி 10) இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஷட்’ என்றால் ஆறு’. திலா’ என்றால் எள்’. எள்ளை அரைத்து உடலில் பூசிக் கொள்ளுதல், அந்த எள்ளுடன் நீராடுதல், எள்ளைத் தானமாகக் கொடுத்தல், எள்ளை வைத்து ஹோமம் செய்தல், எள்ளையும் நீரையும் புனித தீர்த்தங்களில் இறைத்தல், எள்ளுருண்டை சாப்பிடுதல் என ஆறு வகையாக இந்த நாளில் எள்ளை உபயோகிக்க வேண்டும். இப்படி செய்தால் கொலை செய்த பாவம், பசுவைக் கொன்ற பாவம், திருடிய பாவம் போன்றவை கூட தீர்ந்து விடும். மாசி மாதத்தின் முதல் வாரத்தில், ஏதாவது ஒருநாளில் பசுமாடு சாணமிடும் போது, அது தரையில் விழாதபடி தரையில் துணி விரித்து பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த சாணத்துடன் எள், பருத்திக்கொட்டை சேர்த்து, பூஜை அறையிலோ அல்லது மாட்டுக்கொட்டிலிலோ வைத்து விட வேண்டும். அந்தக் கலவை, பவுர்ணமி வரை காயாமல் ஈரப்பதத்துடன் இருந்தால் நமது பாவம் அனைத்தும் விலகி விட்டதாக ஐதீகம். இதை புலஸ்திய முனிவர் சொல்லியுள்ளார். இந்த விரத நாளில் பெருமாளுக்கு பூசணிக்காய், தேங்காய், கொய்யாப்பழம், கொட்டைப் பாக்கு ஆகியவற்றை நைவேத்யம் செய்ய வேண்டும். ஒரு அந்தணருக்கு செம்பு, செருப்பு, குடை, கரும்பு, எள்ளுடன் கூடிய பாத்திரம், முடிந்தால் கருப்பு நிற பசு ஆகியவற்றை தானமாகக் கொடுக்க வேண்டும். உணவைக் கண்டாலே வெறுப்பு என்பவர்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். இதன் மூலம் அதன் மீது பிரியம் வரும். உடல்நிலை நன்றாக இருக்கும். வீட்டில் உணவுப்பஞ்சமும் வராது.