பெண்களில் சிலர் தங்களது கணவரிடம் பாடும் ஒரே பல்லவி, “உங்களைத் திருமணம் செய்து என்ன பலனைக் கண்டேன்?” என்பது தான். இவர்களைப் பற்றி நாயகம் என்ன சொல்கிறார் தெரியுமா! “எந்தப் பெண் தன் கணவனுக்கு நன்றி கொல்கின்றாளோ, மறுமையில் அவளின் பால் இறைவன் தன் பார்வையை செலுத்த மாட்டான்,” என்று. திருமணமாகாதவரை, “ஐயோ! இறைவா! நான் என்ன பாவம் செய்தேன்! எனக்கு ஒரு கணவரைத் தரமாட்டாயா?” என்று கேட்கும் பெண்கள், திருமணத்துக்குப் பிறகு, கணவரிடம், “உம்மைத் திருமணம் செய்து என்ன சுகத்தைக் கண்டேன்?” என்று கேட்பது இறைவனைப் பொறுத்தவரை நன்றிகெட்ட செயலாக கருதப்படுகிறது. கணவரிடம் இன்ன பொருட்கள் வாங்கித் தாருங்கள் எனக் கேட்பதில் தப்பில்லை. அதை வாங்கித் தந்தே தீர வேண்டும் என அடம் பிடிப்பது தான் தவறு. கணவரை நல்ல முறையில் கவனிப்பது மனைவியின் கடமை. நாயகத்தின் துணைவியார் அன்னை ஆயிஷா, நபிகள் நாயகத்தின் துணிகளைத் துவைப்பார். அவருக்கு எண்ணெய் தேய்த்து விடுவார். தலை வாரி விடுவார். நறுமணம் பூசுவார். இப்படி கணவருக்கு எளிய சேவைகள் செய்வது பெண்களின் கடமை. “தூய்மை, ஒழுங்கு, அழகு ஆகியவற்றுக்காக முழு முயற்சியையும் மேற்கொள்ளுங்கள். ஒவ்வொரு பொருளையும் ஒழுங்காக அதற்குரிய இடங்களில் வையுங்கள். ஒழுங்காக அவற்றைப் பயன்படுத்துங்கள். வீட்டைச் சுத்தம் செய்து கொள்வதுடன் தங்களையும் அழகுபடுத்திக் கொண்டால், மகிழ்ச்சியான மனநிலை அங்கு நிலவும்.