பதிவு செய்த நாள்
07
பிப்
2017
11:02
பழநி: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்கள் உடல் சோர்வு, கால்வலியை போக்க ஒட்டன்சத்திரத்தில் நவீன மசாஜ் இயந்திரங்கள் மூலம் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. பழநி தைப்பூச விழாவிற்கு ஆண்டுதோறும் காரைக்குடி, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் மொத்தமாக மூலச்சத்திரத்தில் ஒன்றுசேருகின்றனர்.
70 கி.மீ., முதல் 250 கி.மீ., துாரம் வரை நடந்துவரும் பக்தர்கள் கால் வழி, முழங்கால் வலி, முதுகுவலி உடல் அசதியால் தொடர்ந்து நடக்கமுடியாமல் சோர்வு அடைகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களின் உடல்வலியை போக்கி புத்துணர்வுபெற, திருவண்ணாமலை சாரிட்டபிள் டிரஸ்ட் கோயில் சார்பில் பழநி தைப்பூசம் பாத யாத்திரை அடியார்கள் இலவச மருத்துவ சேவை முகாம் ஒட்டன்சத்திரத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இதில் சுளுக்கு, ரத்தகட்டு, மருந்துதடவி நீவிவிடுதல், பேண்டெஜ் போடுதல், பாதங்கள், மூட்டுவலி, உடல்சோர்வை நீக்க நவீன மசாஜ் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. தலைவலி, காயம், உடல்வலிக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக தருகின்றனர். ஏராளமான பக்தர்கள் சிகிச்சைபெற்று செல்கின்றனர். பிப்.,5 முதல் 9 வரை மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை அமைப்பு செயலாளர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர். இதுகுறித்து சிவகங்கை பக்தர்கள் மூர்த்தி, ராமசாமி கூறுகையில்,“ கடந்த ஒருவாரமாக பாதயாத்திரையாக நடந்துவருகிறோம். வரும்வழியில் ரோடுமோசமாக உள்ளதால் பாதம்வெடிப்பு, மூட்டுவலி, உடல்வலி அதிகமாக உள்ளது. ஒட்டன்சத்திரம் மருத்துவமுகாமில் நவீன மிஷின் மூலம் சிகிச்சை பெற்றோம். தற்போது வலிகள் குறைந்துள்ளது.”என்றனர்.