பதிவு செய்த நாள்
07
பிப்
2017
11:02
திருத்தணி: பக்தர்கள் வசதிக்காக, திருத்தணி முருகன் மலைக்கோவிலில், தகவல் மையம் புதிதாக திறக்கப்பட்டது. திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர். மலைக்கோவிலில் தகவல் மையம் இல்லாததால், பக்தர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுதவிர, கோவிலில் நடக்கும் சேவைகள் குறித்து பக்தர்கள் அறிந்து கொள்வதற்கும், அதற்காக முன்பதிவு செய்வதற்கும் கடும் சிரமப்பட்டு வந்தனர்.இதையடுத்து, பக்தர்கள் நலன் கருதி கோவில் நிர்வாகம், மலைக்கோவிலில் கண்காணிப்பாளர் தகவல் மையம் என, புதிதாக ஏற்படுத்தப்பட்டது. இதன் திறப்பு நிகழ்ச்சி, கோவில் இணை ஆணையர் சிவாஜி தலைமையில் நடந்தது. கோவில் தக்கார் ஜெய்சங்கர், தகவல் மையத்தை திறந்து வைத்தார். இந்த தகவல் மையத்தின் மூலம் கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகள் மற்றும் முக்கிய விழாக்கள், மூலவருக்கு நடக்கும் பூஜைகள் குறித்து அறிந்து கொள்ளலாம். மேலும், காலை, 6:00 மணி முதல், இரவு, 8:45 மணி வரை கண்காணிப்பாளர் மற்றும் ஊழியர் ஒருவர் பணியில் இருப்பர்.