சிவராத்திரி தினத்துக்கு குமரியில் உள்ளூர் விடுமுறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2017 02:02
நாகர்கோவில்: சிவராத்திரி தினத்துக்கு குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிவராத்திரி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் சிவராத்திரி விழா வித்தியாசமாக பாரம்பரிய உணர்வுடன் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கல்குளம் மற்றும் விளவங்கோடு தாலுகாவில் உள்ள 12 சிவாலயங்களை விரதமிருந்த பக்தர்கள் ஓடி சென்று வழிபடுவது இங்குள்ள சிறப்பாகும். ஓட்டம் தொடங்கும் திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து சுமார் 100 கி.மீ. துாரம் ஓடி மேலும் பத்து கோயில்களை வணங்கிய பின்னர் ஓட்டம் ஆரம்பித்த திருமலையின் அருகே உள்ள திருநட்டாலம் சங்கரநாராயணர் கோயிலில் நிறைவு பெறுகிறது. விரதமிருந்த பக்தர்கள் கோபாலா, கோவிந்தா என்று கோஷமிட்டவாறு ஓடுவர். கையில் விசிறியும், இடுப்பில் திருநீற்று பையும் இருக்கும். தற்போது வாகனங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக இந்த பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. வரும் 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு, 25-ம் தேதி வேலைநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.