ஏர்வாடியில் சந்தனக்கூடு ஊர்வலம்: ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2011 10:10
கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் நேற்று அதிகாலை சந்தனக்கூடு விழா நடந்தது. வழி நெடுகிலும் மக்கள் மலர் தூவி வரவேற்றனர். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில், செப்., 28ல் மவ்லுது ஓதப்பட்டு சந்தனக்கூடு விழா துவங்கியது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு யானை மற்றும் குதிரைகளுடன் சிறப்பு ஊர்வலம் தைக்காவிலிருந்து புறப்பட்டு, ஏர்வாடி முக்கிய வீதிகள் வழியாக சென்று, பின், தர்கா வந்தடைந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு சந்தனம் கரைக்கும் நிகழ்ச்சி நல்ல இபுறாகிம் மகாலில் நடந்தது. பின்னர், ஊர்வலமாக சந்தனக்குடத்தை தர்காவிற்கு கொண்டு வந்தனர். காலை ஐந்து மணிக்கு நான்கு சக்கர சப்பரத்தில் மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தர்கா வளாகத்தை வந்தடைந்தது. ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த அனைத்து சமூக மக்கள், மலர் தூவி வரவேற்றனர். தர்காவை மூன்று முறை வலம் வந்த பின், தர்கா வாசலில் பார்வைக்கு சந்தனக்கூடு வைக்கப்பட்டது. பின், சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. வரும் 28 ல் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தர்கா ஆணையாளர்கள் ராமராஜன், முருகேசன் செய்தனர்.