பதிவு செய்த நாள்
22
அக்
2011
10:10
திருவனந்தபுரம்: சபரிமலை யாத்திரை சீசன் துவங்குவதற்கு முன்பாக, அங்கு செய்யப்படவேண்டிய ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக, தென் மாநில அறநிலையத் துறை அமைச்சர்கள் கூட்டம் நாளை (23ம் தேதி) கோட்டயத்தில், முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் நடக்கிறது. கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில், அடுத்த மாதம் 15ம் தேதி மண்டல விளக்கு பூஜைகள் துவங்க உள்ளன. இதற்கு, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், கோடிக்கணக்கான பக்தர்கள் திரள்வது வழக்கம். அப்போது அங்கு செய்யப்படவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கவும், அங்கு நிறைவேற்றப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக விளக்கவும், தென் மாநிலங்களில் கோவில் விவகாரங்களை நிர்வகித்து வரும் அறநிலையத்துறை அமைச்சர்களின் கூட்டம், கோட்டயத்தில் நாளை நடக்கிறது. கூட்டத்திற்கு, முதல்வர் உம்மன் சாண்டி தலைமை வகிப்பார். இதில், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில அறநிலையத் துறை அமைச்சர்கள் கலந்துகொள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்தில், பக்தர்களுக்கு வழங்கப்படவேண்டிய மாநில போலீசார், சிறப்பு கமாண்டோ பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, திரளும் பக்தர்களால் ஏற்படும் நெரிசல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன.