வசிஷ்டரின் பர்ண குடீரம். எங்கெங்கும் அமைதி! உள்ளே வசிஷ்டர் யோக வாசிஷ்டத்தை எழுதிக் கொண்டிருந்தார். யாரும் குறுக்கிடக்கூடாது என்று குடிலின் கதவை மூடியிருந்தார் வசிஷ்டர். கதவை யாரோ மெதுவாக, மிக மெதுவாகத் தட்டினார்கள். யாரது? என்ற வசிஷ்டரின் கேள்விக்கு மவுனமே பதில்! மறுபடியும் கதவு தட்டப்பட்டது; மறுபடியும் யார் தட்டுவது என்ற வசிஷ்டரின் கேள்விக்குப் பதில் இல்லை! இப்படியே மூன்று முறை நடந்தது. நான்காம் தடவை கதவு தட்டப்பட்டது. வசிஷ்டரே எழுந்து வந்து கதவைத் திறந்தார். அங்கு ராமன் நின்றிருந்தான்! அவ்வளவு முறை நீ யார் என்று கேட்டும் ஏன் பதில் சொல்லவில்லை? என்று வியந்தார் வசிஷ்டர். ராமன், குருதேவா! நான் யாரென்பது எனக்கே தெரியாது; அதை அறிந்து கொள்ளவே தங்களை நாடி வந்திருக்கிறேன்! எனக்கு ஞானத்தை அருளுங்கள். சுவாமி! என்று குருவின் அடிபணிந்தான் ராமன். மனிதனாக அவதரித்த ராமனே தன்னை அறிவதே வாழ்க்கையின் குறிக்கோள் என்று வழிகாட்டியவரல்லவா?