பதிவு செய்த நாள்
10
பிப்
2017
02:02
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளிலுள்ள கோவில்களில், தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழாவையொட்டி, முருகப்பெருமானுக்கு காலை, 7:30 மணிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசித்தனர். தொடர்ந்து, மாலை 6:30 மணிக்கு சுவாமி திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதில், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.