பதிவு செய்த நாள்
11
பிப்
2017
12:02
ப.வேலூர்: கபிலர்மலையில், வள்ளலார் தினத்தை பின்பற்றி, பாலதண்டாயுதபாணி கோவில் தேரோட்டம் நடந்தது. ப.வேலூர் அடுத்த, கபிலர்மலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 2ல் துவங்கியது. சுற்றுவட்டார பகுதியிலுள்ள பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், நேற்று முன்தினம் தேர்த் திருவிழா முடிவடைந்த நிலையில், கபிலர்மலையில் மட்டும், வள்ளலார் தினத்தையொட்டி, நேற்று தேரோட்டம் நடந்தது.மாலை, 4:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ப.வேலூர் டி.எஸ்.பி., சுஜாதா தலைமையில் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சாந்தி மற்றும் விழா குழுவினர் செய்தனர்.