கொடை வள்ளல் கர்ணனிடம் யாசகம் பெற்று பலனடைந்தோர் பலர். அவர்களுள் ஒரு பெரியவருக்கு மட்டுமே ஒரு விளக்கம் தேவைப்பட்டது. அதாவது, கர்ணன், எந்தப் பொருளையாவது தானம் செய்கிறானென்றால் அளிக்கப்படும் பொருளை தன் கையில் ஏந்திக் கொண்டு யாசிப்பவரை எடுத்துக் கொள்ளச் சொல்வானாம். இதுதான் ஏன் என்று அந்தப் பெரியவருக்குப் புரியவில்லை. தானம் பெறுபவருடைய கரங்கள் தாழ்ந்தும், அளிப்பவருடைய கரங்கள் உயர்ந்தும் அல்லவா இருக்க வேண்டும்? நீங்கள் நேர்மாறாகச் செய்கிறீர்களே என்று கர்ணனிடம் கேட்டாராம்.
தானம் பெறுபவர் கரங்கள் தாழ்ந்தும், அளிப்பவர் கரங்கள் உயர்ந்தும் இருக்க வேண்டும் என்றுதானே நீங்கள் சொல்கிறீர்கள்? என்னிடம் தானம் பெறுபவர்களிடமிருந்து நானும் தானம் பெறுகிறேன். அதாவது, நான் தானமளித்தால் எனக்குப் புண்ணியம் கிடைக்குமல்லவா? அந்தப் புண்ணியத்தை எனக்குத் தருபவர்கள் என்னிடம் தானம் பெறுபவர்கள்தானே? அதாவது, அவர்கள் எனக்கு புண்ணிய தானம் அளிக்கிறார்கள். எனவே, இந்த தானத்தை எனக்கு அளிக்கும் அவர்களுடைய கரங்கள் உயர்ந்தும் அதைப் பெறும் என் கரங்கள் தாழ்ந்தும்தானே இருக்க வேண்டும். அதைத்தான் நான் செய்கிறேன் என்று கர்ணன் விளக்கினான்.
விளக்கம் கேட்ட பெரியவர், கர்ணனை கையெடுத்துக் கும்பிட்டார். அவர் கண்களில் நீர் துளிர்த்தது. கொடையில் சிறந்தவனே உனக்கு நிகராக யாரைச் சொல்ல முடியும்? உனக்கு நிகர் நீயேதான் என்று பாராட்டிவிட்டுச் சென்றார்.