திருவண்ணாமலையில் மாட்டுப் பொங்கலன்று திருவூடல் உற்சவம் நடைபெறும். அப்போது உண்ணாமுலை அம்மன், அண்ணா மலையார் மீது ஊடல் கொண்டு கோயில் திரும்புவார். அண்ணாமலையார் மட்டும் அருகே உள்ள குமரகோவில் என்கிற தன் மகனுக்கு உரிய கோயிலில் இரவு தங்குவார். அவரை சமாதானப்படுத்தும் ஐதிகமாக சுந்தரர் உடனே இருப்பார். மறுநாள் காலையில் இறைவன் புறப்பட்டு கோயில் வருவார். உண்ணாமுலை அம்மன் சிறிது நேரம் மறுஊடல் காட்டி சமாதானம் ஆவார். பிறகு இருவருமாக கோயில் பிரவேசம் செய்வார்கள். கணவன், மனைவிக்குள் ஊடல்கள் கூடாது. அப்படியே வந்தாலும் உடனே தீர்த்துவிட வேண்டும். என்பதை உணர்த்த ஈசனும், ஈஸ்வரியும் நடத்திய நாடகமாக இது கருதப்படுகிறது. இந்த உற்சவத்தில் கலந்துகொள்பவர்களின் குடும்பத்தில் ஊடல் ஏற்படாது என்பது நம்பிக்கை.