பதிவு செய்த நாள்
14
பிப்
2017
03:02
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள தலைக்காட்டில் நடைபெறுகிறது இந்தத் திருவிழா. இந்த விழாவை நிர்ணயிப்பது சில பொருத்தங்கள். அதாவது-கார்த்திகை மாதம், அமாவாசை, திங்கட் கிழமை, விசாக நட்சத்திரம் இவை யாவும் ஒன்றாகச் சேரும் நாளில்தான் இவ்விழா நிர்ணயிக்கப்படுகிறது. அதனால், சமயங்களில் இந்த விழாவுக்கான காலம் மாறுபடுகிறது. சில சமயம் 7 ஆண்டுகளிலும், சில முறை 13 ஆண்டு இடைவெளியிலும் நடக்கிறது இந்த விழா. சுமார் 5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் வைத்யநாதர், பாதாளேஸ்வரர், முரலீஸ்வரர், அரகேஸ்வரர், மல்லிகார்ஜுனர் ஆகிய ஐந்து சிவமூர்த்திகளையும் தரிசிப்பதுதான் இதன் விசேஷம். அதாவது, இவை ஐந்தும் ஐந்து கோயில்கள். சிவபிரானின் ஐந்து திருமுகங்களை சத்யோஜாதம், தத்புருஷம், வாமதேவம், ஈசானம் மற்றும் அகோரம் ஆகியவற்றை, இவை குறிப்பதாகச் சொல்கிறார்கள். விழாவை முன்னிட்டு இந்த ஐந்து கோயில்களும் வாழை மரங்களாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டு, ஒரே சமயத்தில் விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கான விசேஷ பூஜை துவங்குமுன் தலைமை குருக்கள், பத்துக்கும் மேற்கொண்ட குருக்களுடன் வைத்யநாதேஸ்வரர் கோயிலின் அருகிலுள்ள கோகர்ண புஷ்கர்ணியில் (புனித குளத்தில்) நீராடி, நீர் எடுத்துச் சென்று கங்காபூஜை செய்து தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
இந்த விசேஷ சம்பவத்தின் போது, சக்தி கணபதி, மனோன்மணி தேவி, சண்டிகேஸ்வரர் மற்றும் வீரபத்ரேஸ்வரர் ஆகியோருக்கு பூஜை செய்த பின், அரகேஸ்வரர், பாதாளேஸ்வரர், முரலீஸ்வரர், மல்லிகார்ஜுனர் ஆகியோருக்கும் பூஜை செய்கிறார்கள். பஞ்சலிங்க தரிசனத்தை அடுத்து கஜாரோகணம், திவ்ய ப்ரஷ்மா ரதோத்ஸவம் நடைபெறுகிறது. மறுநாள் சயனோத்ஸவம் நடைபெறுகிறது. மூன்றாவது நாள் தெப்பமும், நான்காவது நாள் கைலாச வாகனம், அடுத்து நந்தி வாகனத்துடன் விழா நிறைவடைகிறது. காவேரி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த தலைக்காடு கதம்பர்கள், சோழர்கள், சாளுக்கியர்கள் மற்றும் ராஷ்டிரகூட மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதி. ஒரு காலத்தில் தலைக்காட்டில் 30 கோயில்கள் இருந்தன. அவை யாவும் இன்று மணலால் மூடப்பட்டுள்ளன. அவற்றில் இந்த ஐந்து கோயில்கள் மட்டுமே இன்று பஞ்சலிங்க தரிசனமாக வழிபடப்பட்டு வருகின்றன. இவற்றில் பாதாளேஸ்வரர் லிங்கமானது காலையில் சிவப்பாகவும், நடுப்பகலில் கருமையாகவும், மாலையில் வெண்மையாகவும் நிறம் மாறுகிறது என்கிறார்கள். யாத்ரீகர்கள் புனித காவேரியில் நீராடி, முதலில் வைதீஸ்வரரைத் தொழுது பிறகு ஐந்து மைல் வட்டாரத்திலுள்ள அரகேஸ்வரர், முரலீஸ்வரர், பாதாளேஸ்வரர், மல்லிகார்ஜுனர் கோயிலுக்குச் சென்று தொழுகிறார்கள். இறுதியாக இங்குள்ள கீர்த்தி நாராயணரை வழிபட்டு, தரிசனத்தை நிறைவு செய்கிறார்கள்.