கேதார்நாத் ஆலயம். இயற்கை சீற்றத்தின் விளைவாகத் திடீர் வெள்ளம் கேதார்நாத் பகுதியை ஆக்ரோஷமாகத் தாக்கிக் கொண்டிருந்தது. ஆலயத்தின் உள்ளே 300 பக்தர்கள் தஞ்சம் அடைந்திருந்தனர். ஆலயச் சுவர்களை வெறி பிடித்ததுபோல் ஓங்கியடித்த வெள்ளத்தின் பயங்கர ஓசையை இரவு முழுவதும் கேட்டுக் கொண்டிருந்தனர். உயிர்ப் பயத்துடன் சிவபெருமானிடம் சரணடைந்திருந்த அந்தப் பக்தர்களில் ஒருவர் கேதார்நாத் பூஜாரி வாகேசலிங்கம். பொழுது விடிந்தது. வாகேசலிங்கத்தின் மனதில் தனது உயிர் இப்போது துச்சமாகத் தோன்றியது. கேதார்நாதரின் அர்ச்சாவதாரத்திற்குப் பூஜை செய்ய வேண்டுமே என்ற ஓர் ஆதங்கம் மட்டுமே மேலிட்டது. அந்த மூர்த்தம் தினமும் காலையில் பூஜாரிகளின் தங்குமிடத்திலிருந்து கொண்டு வரப்படும். நைவேத்தியம், ஆரதி ஆகியவற்றை முடித்து இரவு மீண்டும் பூஜாரிகளின் இடத்திற்குக் கொண்டு செல்லப்படும்.
குளிர்காலத்தில் கேதார்நாத் ஆலயம் மூடப்படும்போது உகி மடம் ஓம்காரேஷ்வர் கோயிலில் மே மாதம் வரை வைக்கப்படும். இவ்வாறு பாரம்பரியமான அகண்ட பூஜை (நாள் தவறாத) அந்தத் திருமேனிக்கு நடைபெறுவது வழக்கம்.இந்த அகண்ட பூஜை, வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடாதே என்ற ஆதங்கத்துடன் கோயிலை விட்டு வெளியேறினார் வாகேசலிங்கம். கோயில் வளாகத்தில் கிடந்த 20-க்கும் மேற்பட்ட சடலங்களைக் கண்டு அஞ்சாமல் வெள்ளத்தை எதிர்த்துச் சென்று கேதார்நாதரின் போகமூர்த்தி எனப்படும் உற்சவத் திருமேனியை வெளியே கொண்டு வந்தார்.போகமூர்த்திக்கான அகண்ட பூஜையை எங்கே செய்வது என்பது அவரது அடுத்த பிரச்னையாயிற்று. கிடக்கும் கோயிலில் பூஜை செய்ய முடியாதே என எண்ணிய அவர் 10 கி.மீ. துõரத்திலிருந்த கருடசட்டீ என்ற இடத்தை அடைந்து அங்கு அன்றைய பூஜையைச் செய்தார்.பிறகு மீட்புப் படகின் உதவியால் பாடா என்ற கிராமத்தை அடைந்தார். திருவுருவச் சிலையைத் துõக்கியபடி பல மணி நேரம் காட்டு வழியாக நடந்து 14 கி.மீ. துõரத்தில் இருந்த குப்தகாசியை அடைந்தார்.
மாலையில் உரிய முறையில் பூஜைகளை நடத்தினார்.3 நாட்கள் கழித்துப் போகமூர்த்தியின் குளிர்கால உறைவிடமான உகி மடத்திற்குச் சிலையுடன் நடந்தே சென்றார். தற்போது அந்த போகமூர்த்திக்கு ஓம்காரேஷ்வர் மடத்தில் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.கேதார்நாத்தின் பாரம்பரியமான அகண்ட பூஜையையும் அதை ஏற்கும் தெய்வத் திருமேனியையும் தமது உயிரையும் வாழ்வையும் பொருட்படுத்தாமல் ஊழிக் காலப் பிரளயமாய் வந்த வெள்ளத்தில் சங்கல்ப சக்தியுடன் செயலாற்றினார் வாகேசலிங்கம்.ஆனால் இவரது இச்செயல் பற்றி, மாதத்திற்கு முன்பு போகமூர்த்தியின் ஆராதனை உகி மடத்தில் செய்யப்பட்டது தவறு என்று ஹரித்துவாரைச் சேர்ந்த ஒரு முக்கிய மடாதிபதி கூறினாராம். பூஜை நிறுத்தப்படக் கூடாது என்பதற்காகவே திருமேனி உகி மடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது என கேதார்நாத் சிவாச்சாரியார் கூறியுள்ளார். மேலும், வைதீக பூஜையைத்தான் விதிமுறைகள் கட்டுப்படுத்தும். ஆனால் வாகேசலிங்கத்தின் தோள் மீது வெள்ளத்தில் வலமாக வந்த சிவன் ஏற்றுக் கொண்டது, வைதீக பூஜை யல்ல - அவரது பிரேம பூஜையைத்தான்.