பதிவு செய்த நாள்
23
பிப்
2017
10:02
கிருஷ்ணகிரி: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், 1.44 லட்சம் சிவலிங்கங்களை வைத்து வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, பழையபேட்டை வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மகளிர் சபா உறுப்பினர்கள் சார்பில், 1.44 லட்சம் சிவலிங்கங்கள் செய்து காட்சிக்காக வைத்துள்ளனர்.
கார்த்திகை தீபம் : ஒரு லட்சத்து, எட்டு லிங்கங்களை செய்வதாக முடிவு செய்து, கடந்த, 12ல் கார்த்திகை தீபத்தன்று பணியை துவங்கினர். ஒவ்வொரு லிங்கமும், ஆற்று மணல், செம்மண், களிமண், புற்றுமண் ஆகியவற்றால் செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி, காசி முதல் ராமேஸ்வரம் வரை உள்ள, பல புனித நகரங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மற்றும் புனித தீர்த்தங்களால், அச்சுகளை உபயோகிக்காமல் கைகளால் மட்டுமே லிங்கங்களை செய்துள்ளனர். பழையபேட்டை, வாசவி மஹாலில், தினமும் காலை, 11:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை, 25 நபர்கள் இதை செய்யும் பணியில் ஈடுபட்டனர். பலர் ஆர்வமுடன் இதில் ஈடுபட வந்ததால், 44 ஆயிரம் சிவலிங்கம் கூடுதலாக உருவாக்கப்பட்டு, பக்தர்கள் பார்வைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
7 அடி உயரம் : வரும், 24 முதல், 26ம் தேதி வரை, இந்த சிவலிங்கங்கள் தரிசனம் நடைபெறும். இதில் ஒவ்வொரு, 108 சிவலிங்கமும், மஞ்சள், குங்குமம், சந்தனம், தர்ப்பை, ருத்ராட்சம் மற்றும் முத்து ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளன. வரும், 24 மஹா சிவராத்திரி அன்று, தஞ்சை பெரிய கோவிலில் உள்ளது போல், ஏழு அடி உயர பிரகதீஸ்வரர் லிங்கமும், இங்கு வைத்து பூஜிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.