சவுந்தரராஜ பெருமாள் கோயில் தேர் அமைக்கும் பணி முடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2017 12:02
தேவதானப்பட்டி : உத்தண்ட சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் முடங்கியுள்ள தேர் கட்டும் பணி விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரியுள்ளனர். பெரியகுளம் ஒன்றியம், குள்ளப்புரத்தில் 800 ஆண்டு பழமை வாய்ந்த உத்தண்ட சவுந்தரராஜப் பெருமாள் கோயில் உள்ளது. தஞ்சை மன்னர் ராஜராஜசோழன், பாண்டியநாடு வந்த போது குள்ளப்புரத்தில் தங்கியுள்ளார். அவருக்கு இரவில் தீராத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அப்போது மன்னரின் கனவில் உத்தண்ட சவுந்தரராஜ பெருமாள் தோன்றி மறைந்துள்ளார். அதன் பின் மன்னருக்கு வயிற்று வலி தீர்ந்துள்ளது. இதனால் உத்தண்ட சவுந்தராஜ பெருமாளுக்கு கோயில் கட்டியதாக வரலாறு கூறுகிறது. இக்கோயிலில் உத்தண்ட சவுந்தரராஜபெருமாள், பூர்ணாம்பாள் தெய்வங்களாக உள்ளன. கோயிலில் ஆண்டுதோறும் வைகாசியில் தேர் திருவிழா 10 நாட்கள் நடக்கும். இதில் சுற்றுவட்டார மக்கள் கலந்து கொள்வார்கள். கோயிலுக்கு 30 ஏக்கர் நிலம் கிராம கட்டுப்பாட்டில் இருந்த வரை குத்தகைப்பணம் வசூல் செய்து ஒவ்வொரு ஆண்டும் விழா நடத்தப்பட்டது. தற்போது சித்ரா பவுர்ணமி, மற்றும் தை முதல் தேதியில் உற்சவர் ஆற்றுக்கு சென்று அருள் பாலித்து வருகிறார். இக்கோயில் இந்து அறநிலையக் கட்டுப்பாட்டுக்கு சென்று பிறகு தேர் திருவிழா நடக்கவில்லை. அர்ச்சகர், கோயில் பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் கிடைக்கவில்லை.
கிடப்பில் புதிய தேர் பணி: இக்கோயில் தேர் கட்டுவதற்கு 2012ல் அனுமதி வழங்கி அரசு 14 லட்ச ரூபாய், மக்கள் பங்களிப்பு 6 லட்சத்து 50 ஆயிரம் என 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு தேர் கட்டும் பணி துவங்கியது. இரு ஆண்டுகளுக்கு முன்பு இப்பணி நிறுத்தப்பட்டுள்ளது. சக்திவேல்: குள்ளப்புரம் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோயில் கிராம கமிட்டி கட்டுப்பாட்டில் இருந்த வரை தேர் திருவிழா நடந்தது. அதன் பின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு சென்றது. தடை பட்டுள்ள தேர் கட்டுமான பணியை விரைந்து முடிக்க பல முறை மனுக் கொடுத்தும் பணி துவங்க வில்லை.
முருகன்: தேரில் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேருக்கு தேவையான சக்கரம் செய்யப்பட்டதோடு பணி நிறுத்தப்பட்டுள்ளது. தேர் பயன்படுத்தாமலே சேதமாகும் நிலையில் உள்ளது. எனவே தேர்கட்டுமான பணியில் உள்ள தடைகளை நீக்கி பணி தொடர வேண்டும்.