பதிவு செய்த நாள்
28
அக்
2011
11:10
தென்காசி,: இலஞ்சி குமாரர் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.இலஞ்சி குமாரர் கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் திருவிழாக்களில் கந்த சஷ்டி விழா முக்கியமான விழாவாகும். இந்த ஆண்டு இத்திருவிழா நேற்று முன்தினம் காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடிமரத்தில் கொடிபட்டம் ஏற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 11 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இரவு தீபாராதனையும், சுவாமி பூங்கோயில் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலாவும் நடந்தது. விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலையில் பூங்கோயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, அபிஷேகம், அலங்காரம், இரவு தீபாராதனை சுவாமி திருவீதி உலா நடந்தது. மூன்றாம் திருவிழாவான இன்று (28ம் தேதி) முதல் 30ம் தேதி வரை தினமும் காலையில் பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா, அபிஷேகம், அலங்காரம், இரவு தீபாராதனை, சுவாமி திருவீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான 31ம் தேதி காலையில் அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. மாலையில் சூரசம்ஹாரத்திற்கு சுவாமி எழுந்தருளல், கோயில் முன் வாயில் பகுதியில் சுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமி மர மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.வரும் நவ.1ம் தேதி காலையில் மூலவருக்கு முழுக்காப்பு, தீபாராதனை, இரவு தெய்வானை திருமணம், சுவாமி திரு வீதி உலா நடக்கிறது. நவ.2ம் தேதி காலையில் முழுக்காப்பு, தீபாராதனை, இரவு ஊஞ்சல் நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் தக்கார் கணபதி முருகன், நிர்வாக அதிகாரி தங்கப்பாண்டியன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.
குற்றாலநாதர் கோயில்: குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது. மாலையில் அபிஷேகம், இரவு தீபாராதனை, கோயில் உள் பிரகாரத்தில் சுவாமி உலா வருதல் நடந்தது. இரண்டாம் நாளான நேற்று காலையில் அபிஷேகம், இரவு தீபாராதனை மற்றும் கோயில் உள் பிரகாரத்தில் சுவாமி உலா வருதல் நடந்தது.இன்று (29ம் தேதி) முதல் 30ம் தேதி வரை தினசரி காலையில் அபிஷேகம், இரவு தீபாராதனை மற்றும் சுவாமி கோயில் உள் பிரகாரத்தில் உலா வருதல் நடக்கிறது. வரும் 31ம் தேதி காலையில் அபிஷேகம், மாலையில் ரத வீதியில் சுவாமி சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. நவ.1ம் தேதி முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் தக்கார் கவிதா பிரியதர்ஷினி, நிர்வாக அதிகாரி சுகுமாரன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.