திருநெல்வேலி: வண்ணார்பேட்டை இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் நேற்று கோ பூஜை மற்றும் அன்னத்தால் உருவாக்கப்பட்ட கோவர்த்தன சிறப்பு பூஜை நடந்தது.வண்ணார்பேட்டை இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் கடந்த 11ம்தேதி முதல் வரும் நவம்பர் 10ம்தேதி வரை தாமோதரத்தீப விழா நடக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு தினமும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜையும், 7 மணிக்கு பக்தர்கள் தங்கள் கரங்களால் நேரடியாக நெய் தீப ஆரத்தி காட்டும் நிகழ்ச்சியும், தாமோதரஷ்டகம் என்று அழைக்கப்படும் எட்டு ஸ்லோகங்கள் அடங்கிய பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.இக் கோயிலில் நேற்று காலை 7.45 மணிக்கு கோ பூஜை நடந்தது. மேலும் கிருஷ்ணர், பலராமர் சிலை அருகில் அன்னத்தால் கோவர்த்தன மலை தத்ரூபமாக உருவாக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதனைத் தொடர்ந்து அன்னத்தை பக்தர்களுக்கும், பசுவிற்கும் வழங்கப்பட்டது. அப்போது கிருஷ்ணரின் கோவர்த்தன கிரி லீலை குறித்து பக்தர்கள் பாராயணம் செய்தனர். இரவு 7.10 மணிக்கு தாமோதர தீபத்திருவிழா நடந்தது.வரும் 30ம்தேதி மாலை 6.15 மணிக்கும், 31ம்தேதி காலை 7.45மணிக்கும் பிரபுபாதாவின் நேரடி சீடர் பானு சுவாமி மகராஜ் சிறப்பு சொற்பொழிவு ஆற்றுகிறார்.ஏற்பாடுகளை இஸ்கான் கோயில் பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.