திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான பெரிய வைரத்தேருக்கு பங்குனித் தேரோட்டம் முடிந்த பின்பு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட உள்ளது. கோயில் முன் 24 அடி உயரம் 24 அடி அகலம், 24அடி நீளம், 40 டன் எடை கொண்ட பெரிய வைரத் தேர் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. பங்குனித் திருவிழா திருக்கல்யாணம் முடிந்து மறுநாள், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, இத்தேரில் எழுந்தருளி கிரிவீதியில் தேரோட்டம் நடக்கும். பல நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தேருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு சக்கரங்களும், ஐந்து ஆண்டுகளுக்குமுன்பு ஹைட்ராலிக் பிரேக் பொறுத்தப்பட்டது. 2015ல் தேரில் படிந்திருந்த கெமிக்கல் வாஸ் மூலம் அழுக்குகள் நீக்கி, சேதமடைந்த சுவாமி சிலைகள் தேரின் உட்பாகங்கள் சீரமைக்கப்பட்டது. சிறந்த கலை நயம், தேரின் வெளிப்பகுதி மட்டுமின்றி உட்பகுதியிலும் எராளமான சுவாமி சிலைகள் உள்ளது. அபூர்வமான சிலைகள் ஏராளமாக கொண்ட குன்றத்து தேர், தேரோட்டம் முடிந்ததும் இரும்பு தகரங்களால் மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. வெளியூரில் வரும் பக்தர்கள் தேரின் அழகை பார்க்க முடியாதது பெரும் குறையாக இருந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் போன்று குன்றத்து தேரையும் கண்ணாடி கூண்டு அமைத்து பாதுகாக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக 11.30 லட்சத்தில் அகர்லிக் சீட் அமைக்கப்பட உள்ளது.