திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2011 10:10
திருச்செந்தூர் : திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா மூன்றாம் நாளில் சுவாமி ஜெயந்திநாதர் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.புதன்கிழமை காலை திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கும், இரண்டாம் திருநாளான வியாழக்கிழமை திருக்கோயில் காலை 3 மணிக்கும் நடை திறக்கப்பட்டது. மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தொடர்ந்து பூஜைகள் நடந்தது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடந்த உடன் யாகசாலையில் மகா தீபாராதனை நடந்தது. அதன்பின் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கச்சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தை வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. மாலையில் திருவாவடுதுறை மண்டபத்தில் சுவாமிக்கு ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்து சுவாமி தங்கரதத்தில் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். கந்த சஷ்டி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வருகின்ற 30ம் தேதி வரை இதே நிகழ்ச்சிகளும், 31ம் தேதி திங்கட்கிழமை மாலை 4.35 மணிக்கு மேல் கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.