பதிவு செய்த நாள்
29
அக்
2011
11:10
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் 22 கோயில்களில் 6 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதாக தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பூமி பூஜை விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் தெரிவித்தார்.தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் நன்கொடையாளர்கள் மூலம் 40 லட்ச ரூபாய் செலவில் மகா மண்டபம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை விழா நேற்று கோயில் வளாகத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் தலைமையில், மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பா முன்னிலையில் நடந்தது அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரன் வரவேற்றார்.தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, அறநிலைத்துறை உதவி ஆணையர் வீரராஜன், சிவன் கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் கணபதிசந்தானம், சண்முகக்கனி, சுப்புராஜ், மாநகராட்சி பணியாளர் குருமூர்த்தி, முன்னாள் வாரியத் தலைவர் அமிர்தகணேசன், மாரியம்மன் கோயில் நிர்வாக அதிகாரி கோபாலன் மற்றும் பலர் பேசினர்.மேயர் சசிகலா புஷ்பா பேசுகையில், தூத்துக்குடியில் சூரியன் உஷ்ணம் தணிந்து இலை துளிர்விட்டு விட்டது. இனிமேல் இம் மாநகராட்சி பகுதியில் மக்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது என்றார்.பூமிபூஜையை துவக்கி வைத்து அறநிலையத்துறை அமைச்சர் சண்முகநாதன் பேசியதாவது;தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயிலாக இருந்தாலும் இந்த கோயில் நல்ல முறையில் இருக்க வேண்டும். இன்னும் பக்தர்கள் இங்கு அதிகமாக வரவேண்டும். பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்து நன்கொடையாளர்கள் திருப்பணி கமிட்டி அமைத்து பல பணிகள் செய்வது பாராட்டுக்குரியது.ஜெ., ஆட்சிக்கு வந்த பிறகு கோயில்களுக்கு புத்துயிர் கிடைத்துள்ளது. அதற்கு ஏற்றார் போல் நன்கொடையாளர்களும் மனமுவந்து பல பணிகள் செய்ய உதவி வருகின்றனர். தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் 40 லட்ச ரூபாய் செலவில் மகாமண்டபம் அமைக்க உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம். என்னதான் பணம் வசதி இருந்தாலும் கோயிலுக்கு செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எல்லோருக்கும் வருவதில்லை. அதுபோன்று வந்து இங்கு பணிகள் செய்ய உதவியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களும் புதுப்பிக்கபட வேண்டும் என்பதில் முதல்வர் ஜெ.,உறுதியாக இருக்கிறார். அதற்கு ஏற்ப நிதியுதவிகளை இந்த துறைக்கு அளித்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் 22 கோயில்களில் 5 கோடியே 75 லட்ச ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 13வது நிதி ஆணைய திட்டத்தின் கீழ் 5 கோவில்களில் 85 லட்ச ரூபாய் செலவில் பணிகள் துவக்கப்பட உள்ளது. தேர் இல்லாத கோயில்களுக்கு தேர் செய்து தேரோட்டம் நடத்த வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.அதன்படி இம் மாவட்டத்தில் 50 லட்ச ரூபாய் செலவில் நான்கு தேர்கள் செய்ய மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார். நிர்வாக அதிகாரி கோபால் நன்றி கூறினார்.மேயர் அலுவலக நிர்வாகி பாலசுப்பிரமணியன், இன்ஜினியர் தங்கவேல், கோயில் ஊழியர் சண்முகசுந்தரம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.