ராஜபாளையம் : மேற்கு தொடர்ச்சி மலையில், மழைபெய்து வருவதால், ராஜபாளையம் அய்யனார்கோயில் பகுதி சுற்றுலா தலமாக மாறிவிட்டது. ராஜபாளையம் கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க ஆறாம் மைல்கல் நீர்தேக்கம் அமைக்கப்பட்டது. அணையை சுற்றி பூங்கா அமைத்து, சுற்றுலா தலமாக மாற்றலாம். அதற்கான பணிகள் நடக்கவில்லை. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள நீர்காத்த அய்யனார்கோயில் ஆறு தான் பொழுதுபோக்கு இடமாக உள்ளது. மலையில் பெய்யும் மழைநீர் ஆறாக அய்யனார்கோயில் வருகிறது. இங்கிருந்து கண்மாய்க்கு செல்கிறது. பாறைகளில் வேகமாக சத்தத்துடன் வரும் தண்ணீரில் குளித்துவிட்டு, அய்யனார்கோயில் திசை நோக்கி வணங்கிவிட்டு வருகின்றனர். குடும்பத்தினர் சாப்பாடுடன் காலையில் சென்று மாலையில் வீடு திரும்புகின்றனர். மழைகாலத்தில் ராஜபாளையம் மக்களுக்கு அய்யனார்கோயில் ஆறு மற்றும் கோயில் தான் பொழுதுபோக்கும் இடமாக உள்ளது. கார், ஆட்டோ, டூ-வீலர்களில் சுற்றுலா செல்வது போல் செல்கின்றனர்.