பதிவு செய்த நாள்
03
மார்
2017
12:03
பாகூர் : பாகூரில் புதையுண்டு கிடந்த பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தில், மேலும் புதியதாக இரண்டு சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பாகூரை சேர்ந்தவர் தில்லைவனம். ஓய்வு பெற்ற ஆசிரியர். பாகூர் அக்ரஹார வீதியில் ராமர் கோவில் அருகே, இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டுமான பணிகளை மேற்கொண்டார். அஸ்திவாரம் தோண்டும் போது, சாமி சிலை தென்பட்டது. இது குறித்து தகவலறிந்த பாகூர் தாசில்தார் கார்த்திகேயன், சம்பவ இடத்திற்கு சென்று, மண்ணில் புதைந்து கிடந்த சிலையை ஆய்வு செய்து, கட்டுமான பணிகளை தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டு, தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தார். ஆனால், இதுவரை தொல்லியல் துறை அதிகாரிகள், ஆய்வு மேற்கொள்ள வரவில்லை. சாமி சிலை கிடைத்து 5 நாட்கள் கடந்து விட்ட நிலையில், பொறுமை இழந்த பாகூர் மக்கள், மண்ணில் புதையுண்டு கிடந்த சிலையை வெளியில் எடுக்க முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கூடினர். பூமியில் புதையுண்டு கிடந்த கருங்கல்லினால் ஆன பெருமாள் சிலையை கயிறு கட்டி வெளியில் எடுத்தனர்.
அப்போது, அந்த சிலைக்கு அருகே மேலும், இரண்டு சிலைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றையும் வெளியில் எடுத்து, சுத்தம் செய்த அப்பகுதி மக்கள், பெருமாள் சிலைக்கு அருகில் வைத்து ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் கிடைத்திருப்பதாக கூறி, மஞ்சள், குங்குமம் வைத்து, பட்டு புடவை, துளசி மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். தகவலறிந்த பாகூர் தாசில்தார் கார்த்திகேயன், சம்பவ இடத்திற்கு சென்று, சிலைகளை பறிமுதல் செய்யப்போவதாக தெரிவித்தார். இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தாசில்தார் கார்த்திகேயனை முற்றுகையிட்டு, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலைகளை ஏற்றிச் செல்ல வந்த வாகனத்தையும் உள்ளே நுழைய விடாமல் பெண்கள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதைந்து கிடக்கும் வரலாறு: மிக பழமையான நகரம் பாகூர் என்பதற்கு ஆதரமாக, 1400 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் பராந்தகச் சோழ மன்னால் கட்டப்பட்ட வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் சான்றாக உள்ளது. அது மட்டுமின்றி பாகூரில் பல பகுதிகளில், கட்டுமான பணியின் போது, முது மக்கள் தாழிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை அதிகாரிகள் பாகூரில் உரிய முறையில் ஆய்வு மேற்கொண்டால், மேலும் பல வரலாற்று உண்மைகள் தெரிய வரும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.